இன்று 22ம் திகதி “மதம் அல்லது நம்பிக்கையின் அடிப்படையில் வன்முறைச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரும் நாள்“
உலகம் முழுவதும், வெறுக்கத்தக்கப் பேச்சு, சகிப்புத்தன்மை மற்றும் உடல்ரீதியான வன்முறை மற்றும் தனிநபர்கள், குழுக்கள் மற்றும் தளங்கள் மீதான தாக்குதல்கள், மதத்தின் பேரால் இன அழிப்பு மற்றும் நில அபகரிப்பு, அவர்களின் மத நம்பிக்கைகள் அல்லது முக்கியத்துவத்தின் காரணமாக அதிகரித்து வருவதை நாம் தொடர்ந்து காண்கிறோம்.
இந்நிலையில், இந் நாளை முன்னிட்டு இலங்கையில் தமிழர் தாயகப்பகுதியில் பௌத்த மதத்தின் பேரால் நிலங்கள் அபகரிக்கப்பட்டு வருகின்றதையும் அதனால் அம் மக்கள் எதிர்கொள்ளும் இடர்களையும் இக்கட்டுரை விவரிக்கின்றது.
வடக்கு கிழக்கில் யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் தமிழ் மக்களை பொறுத்தவரையில் தொடர்ச்சியான பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துவருகின்றனர்.
வடக்கு கிழக்கில் எதனைப்பாதுகாப்பதற்காக கடந்த 30வருடகாலமாக போராட்டங்களை தமிழ் மக்கள் நடாத்தினார்களோ அதனை இன்று இழக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக இலங்கை அரசாங்கம் வடக்கு கிழக்கில் தனது பௌத்த சிங்கள ஆதிக்கத்தினை நிலைநாட்டுவதற்காக முன்னெடுக்கும் செயற்பாடுகள் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் கவலையினை ஏற்படுத்திவருவதுடன் அதற்கு எதிராக போராட்டங்களையும் நடாத்தும் சூழ்நிலைக்கு நீண்ட காலமாகவே தள்ளப்பட்டு வருகின்றனர்.
இவ்வாறான நிலையில் வடக்கு கிழக்குப் பகுதியில் முன்னெடுக்கப்படும் அத்துமீறிய செயற்பாடுகளுக்கு தொடர்ச்சியாக போராட்டங்கள் அண்மைக்காலமாக முன்னெடுக்கப்படுகின்றன.
கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த பௌத்த சிங்கள மயமாக்கல் முயற்சி படிப்படியாக திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப் படுகின்றது.
குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்பகுதிகளில் இந்த சிங்கள மயமாக்கல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்பகுதிகளை பாதுகாப்பதற்கு தமிழர் தரப்பிடம் எந்தவித திட்டங்களும் இல்லாத காரணத்தினால் மிகவும் இலகுவான முறையில் இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இவ்வாறான நிலையிலேயே மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி மற்றும் கிரான் பிரதேச செயலாளர் பிரிவுகளை உள்ளடக்கியதாகவுள்ள எல்லைப்பகுதிகளில் முன்னெடுக்கப்படும் அத்துமீறிய பௌத்த மயமாக்கல் செயற்பாடுகளை நிறுத்துமாறு கோரி மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
“மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் பௌத்தமயமாக்கல் திட்டம் மற்றும் தமிழர்களின் பொருளாதாரத்தினை அழிக்கும் நடவடிக்கைகளை நிறுத்து” என்னும் தலைப்பில் மட்டக்களப்பு,செங்கலடியில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் உட்பட பண்ணையாளர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். இதன்போது ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்புவதற்காக தயாரிக்கப்பட்ட மகஜரும் வாசிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் ‘அத்துமீறிய காணி அபகரிப்பினை நிறுத்து,மயிலத்தமடு மாதவனையில் தமிழர்களின் கால்நடைகளை அழிக்காதே,பௌத்தமயமாக்கலை நிறுத்து,உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி உட்பட பல்வேறு நிதி அமைப்புகள் ஊடாக பெறப்படும் கடன்களைக்கொண்டு தமிழர்களின் பொருளாதாரம் திட்டமிட்டு அழிக்கப்படுவதனால் கடன்களை நிறுத்து போன்ற சுலோகங்களை ஏந்தியிருந்தனர்.
தமிழர்களின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் உலக நாடுகளின் நிதியுடன் இனவாத கட்டமைப்பாக செயற்படும் மகாவலி அபிவிருத்தி சபை, தமிழர் பகுதிகளில் சிங்கள மக்களைக் கொண்டு வன்முறை வழியில் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தமிழ் மக்களால் குற்றஞ்சாட்டப்படுகின்றது.
மயிலத்தமடு,மாதவனையில் நூறு வருடங்களுக்கு மேல் கால்நடைகளை தமிழர்கள் மேய்த்துவரும் நிலையில் அப்பகுதியில் உள்ள தமிழ் கால்நடை பண்ணையாளர்களை அகற்றி அங்கு பௌத்த மயமாக்கலை செய்யும் நடவடிக்கைகளை மகாவலி அபிவிருத்தி சபை முன்னெடுப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தினைப்பொறுத்த வரையில் மகாவலி அதிகாரசபையின் ஊடாக “வாழ்வாதார மேம்பாடு” என்ற தோற்றப்பாடுகளுடன் பௌத்தம் மயமாக்கல் செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றன.
குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தாந்தாமலைப்பகுதிக்கு பின்பகுதியாக காணப்படும் தமிழர்களின் வரலாற்று இடமான கெவிளியாமடு எனப்படும் பகுதியில் சேனைப்பயிர்ச்செய்கை என்ற ரீதியில் காணிகள் பிடிக்கப்பட்டு பின்னர் அப்பகுதியில் பாரிய விகாரை அமைக்கப்பட்டுள்ளது. தமிழ் அரசியான உலகநாச்சியார் ஆட்சிசெய்த இடமாக இது உள்ளது. உலகநாச்சியார் ஓய்வெடுக்கும் பூங்காவனம் அமைந்துள்ள பகுதி என கருதப்படும் பகுதியிலேயே இந்த விகாரை அமைக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சின்னவத்தை என்னும் பகுதியில் தமிழர் பகுதிக்குள் பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டு அங்கு சிங்கள மக்கள் கடந்த காலத்தில் குடியமர்த்தப்பட்டனர்.
கல்லோயா திட்டம் கொண்டுவரப்பட்ட காலத்தில் குறித்த பகுதியில் தமிழ் மக்கள் குடியமர்த்தப்பட்ட நிலையில், யுத்தம் காரணமாக தமிழ் மக்கள் இடம்பெயர்ந்ததால் அப்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு சிங்கள பிரதேசமாக மாற்றப்பட்டுள்ளன.
அண்மையில் கூட இதனையண்டிய தமிழ் பகுதிக்குள் சில பௌத்த மத குருமார்கள் நுழைந்து விகாரைகளை அமைக்கும் முயற்சிகளை முன்னெடுத்திருந்தனர். பின்னர் அது அப்பகுதி தமிழ் மக்களின் எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்டது.
இதேபோன்று மயிலத்தமடு,மாதவனை பகுதியில் சேனைபயிர்ச் செய்கை என்ற அடிப்படையில் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் ஊடாக கால்நடை பண்ணையாளர்கள் பயன்படுத்தும் மேய்ச்சல் தரை காணிகளில் அத்துமீறல்கள், அபகரிப்புக்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக அப்பகுதியில் விகாரையொன்றும் அமைக்கப்பட்டுள்ளதுடன் சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்ளும் நடவடிக்கைகளே முன்னெடுக்கப் பட்டுவருவதாக மயிலத்தமடு,மாதவனை கால்நடை வளர்ப்போர் சங்கத்தின் செயலாளர் முரளிதரன் தெரிவித்தார்.
தற்போது வரையில் தமது பௌத்த சிங்கள ஆக்கிரமிப்பினை மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் கொண்டுசெல்வதற்காக பொலநறுவை மற்றும் அம்பாறை மாவட்டங்களை சேர்ந்த சிங்கள மக்களை குடியேற்றுவதற்கான தொடர்ச்சியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நீதிமன்றம் குறித்த மேய்ச்சல் தரை பகுதியில் அத்துமீறிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டாம் என்று கூறியுள்ள நிலையிலும் அதனையும் மீறிய வகையில் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் கால்நடை பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பொதுவாக நில அபகரிப்பு தொடர்பான நீதி மன்னத்தின் கட்டளைகளை மதத்தின் பேரால் அபகரிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துவரும் பௌத்த மத குருமார்களாக இருக்கட்டும், தொல்லியல் துறையைச் சேர்ந்தவர்களாக இருக்கட்டும் அவர்கள் அதைக்கண்டுகொள்வதில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது என்பதோடு, தமிழர் தாயகத்தில் பௌத்த மயமாக்கலைவிட இராணுவ மயமாக்கலே அதிகமாக உள்ளதனால் பாதிக்கப்படும் மக்களின் உரிமைக்கான குரல்கள் இராணுவ அச்சத்தின் ஊடாக நசுக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் சேனைப்பயிர்ச்செய்கை மற்றும் முந்திரிகை செய்கை என்ற அடிப்படையில் பெருமளவான நிலப்பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டு அங்கு சிங்கள பௌத்ததை சேர்ந்தவர்களை குடியேற்றுவதுடன் அங்கு விகாரைகளும் அமைக்கப்படும் நிலைமையே காணப்படுகின்றது.
இந்த அத்துமீறல்கள் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் நிலையில் இவற்றினை தடுத்து நிறுத்தவோ அல்லது இதற்கு எதிராக குரல் எழுப்பவோ யாரும் அற்ற நிலையில் அண்மையில் கால்நடை பண்ணையாளர்கள் அவர்கள் சார்ந்த மக்கள் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர்.
இவ்வாறான சூழலில், மதத்தின் பேரிலான ஒடுக்குமுறைகளுக்கும் அபகரிப்புக்களுக்கும் தீர்வு என்னவாக இருக்கும் என்ற கேள்விக்கு,சட்டத்தரணி மனித உரிமை செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான ரட்ணவேல் கருத்து தெரிவிக்கையில், “இதற்கான தீர்வு தற்போது வரும் என்று கூற முடியாது ஆனால் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். அதாவது இராணுவ மயமாக்கலை இல்லாமல் செய்ய வேண்டும். பௌத்த மயமாக்கலை விட இராணுவ மயமாக்கல்தான் ஆபத்தானது. ஏனெ்றால் நாளுக்கு நாள் இராணுவத்தினரின் செல்வாக்கு இலங்கையில் அதிகரித்து செல்கின்றது. இராணுவத்தினருக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பதற்கு எல்லாவிதமான அரசியல் கட்சியரும் போட்டி போட்டுக்கொண்டு செயற்பட்டுக்கொண்டு இருக்கின்றாா்கள். எனவே இறுதியில் ஒரு வர்த்தக நிறுவனம் தொடங்குவதாக இருந்தால் கூட, இராணுவத்தைச் சேர்ந்தவரையோ, அல்லது ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியையோ அந்நிறுவனத்தில் சேர்த்துக்கொண்டால்தான் வர்த்தகத்தில் ஈடுபடலாம் என்ற நிலையும் இலங்கையில் ஏற்படலாம். இந்த நிலை பாகிஸ்தானில் காணப்படுகின்றது.இது ஒரு ஆபத்தான விடையம். ஆகவே இராணுவ மயமாக்கம் பௌத்தமயமாக்கம் ஆகிய இரண்டு ஆபத்தான விடையங்களில் இந்த நாடு சிக்கிக்கொண்டு இருக்கின்றது.
இந்நிலை சிங்கள மக்களுக்கு அது ஒரு ஆதாயமிக்க ஒன்றாக இருந்தாலும் தமிழ் மக்கள் இது குறித்து மிகமிக கவணித்து அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை தமிழ் அரசியல்வாதிகள் சரி அல்லது ஆய்வாளர்கள், செயற்பாட்டாளர்கள் அனைவரும் இணைந்து அது குறித்து கவனம் செலுத்துவது மிக முக்கியம்”. என்றார்.