பாடுபட்டு உழைக்கத் தயாரில்லாத அரச உத்தியோகத்தர் தொழிலை விட்டுச் செல்லலாம் – இலங்கை ஜனாதிபதி ரணில்

நாட்டிலுள்ள ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் சுமார் 9 அரச உத்தியோகத்தர்கள் காணப்படுகின்றனர். இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து விவசாயத்துறையை மேம்படுத்துவதற்கு பாடுபட வேண்டும்; அவ்வாறு பாடுபட முடியாது எனக் கூறுபவர்கள் வீட்டுக்குச் செல்லலாம். எந்தவொரு வேலைகளிலும் ஈடுபடாதவர்களுக்கு சம்பளத்தை வழங்கிக் கொண்டிருக்க முடியாது என்று இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அநுராதபுர மாவட்ட அபிவிருத்தி சபை கூட்டம் நேற்று இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த ஜனாதிபதி, அங்கு மேலும் குறிப்பிடுகையில், “கட்சி, இன, மத பேதமின்றி நாட்டுக்காக அனைவரையும் ஒன்றிணைக்கும் கடந்த காலப் பாடத்தை ஐக்கிய தேசியக் கட்சி கற்றுத் தந்துள்ளது.

எதிர்காலத்தில் நாட்டுக்காக அனைவரையும் ஒன்றிணைப்பதே அதன் நோக்கமாகும். ஐக்கிய தேசியக் கட்சியில் மீண்டும் இணைந்து கொள்ளுமாறு நான் யாருக்கும் அழைப்பு விடுக்கவில்லை. எனினும் நாட்டை கட்டியெழுப்பும் பணியில் தாமதமின்றி இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றேன்.

இன்று நாட்டு மக்கள் மிகுந்த அழுத்தத்தில் உள்ளனர். வரலாற்றில் இத்தகைய அழுத்தம் இருந்ததில்லை. அந்த நிலையிலிருந்து நாம் வெளியேற வேண்டும்.

கீழ் மட்டத்தில் ஏராளமான அரசு அதிகாரிகள் உள்ளனர். ஒரு கிராம அலுவலர் பிரிவுக்கு சுமார் 9 அரசு அலுவலர்கள் இருப்பதாக நினைக்கிறேன். அவர்கள் கிராம அலுவலர் பிரிவுகளை தொகுதிகளாகப் பிரித்து செயற்பட வேண்டும். அவ்வாறு பாடுபட்டு வேலை செய்ய விரும்புபவர்கள் அதனை செய்யலாம். முடியாதவர்கள் வீட்டுக்குச் செல்லலாம். எந்த வேலைகளையும் செய்யாதிருப்பவர்களுக்கு ஊதியத்தை வழங்கிக் கொண்டிருக்க முடியாது“ எனத் தெரிவித்துள்ளார்.