யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் 17 பேரை, போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாண காவல்துறையினர் கைது செய்த போது, பீடாதிபதியின் தலையீட்டினால் , மாணவர்கள் கடுமையாக எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் போதைப் பொருள் வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் கொக்குவில் பகுதியில் உள்ள பல்கலைக்கழக மாணவர் விடுதி ஒன்றிற்கும் போதைப்பொருள் விநியோகித்ததாக தெரிவித்துள்ளார்
அதனை அடுத்து குறித்த விடுதியினை ஞாயிற்றுக்கிழமை (09) மாலை காவல்துறையினர் சுற்றி வளைத்து சோதனையிட்டனர். அதன் போது , மாணவர்கள் விடுதியில் இருந்து போதைப் பொருட்கள் மற்றும் போதை மாத்திரைகள் என்பன மீட்கப்பட்டன. அதனை அடுத்து அங்கு தங்கியிருந்த 15 பெரும்பான்மையின மாணவர்கள் மற்றும் 2 தமிழ் மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
மாணவர்களின் கைது தொடர்பில் பீடாதிபதிக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , பீடாதிபதி மாணவர்களுக்கு தற்போது பரீட்சை நடைபெற்று வருவதாகவும், கைது நடவடிக்கையால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் எனவும் , மாணவர்கள் மத்தியிலான போதைப்பொருள் பாவனை குறித்து பல்கலைக்கழகம் உள்ளக விசாரணைகளை முன்னெடுத்து போதைக்கு அடிமையான மாணவர்களை கண்டறிந்து புனர்வாழ்வு அளிக்க நடவடிக்கை எடுக்கும் என காவல்துறையினருக்கு உறுதி அளித்துள்ளார்.
அதனை அடுத்து விடுதியில் தங்கியிருந்த மாணவர்களை கடுமையாக எச்சரித்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.