வடக்கு மாகாணத்தை ஆக்கிரமித்துள்ள போதைப் பொருள் பாவனை

142 Views

இலங்கையின்  தமிழர்கள்  வாழும் வடக்கு மாகாணத்தில் ஆயிரக் கணக்கானோர் போதைப் பொருள் பழக்கத்துக்கு ஆளாகியுள்ளனர்.

குறிப்பாக ஹெரோயின் போதைப் பொருள் பயன்பாடு அங்கு  அதிகரித்திருக்கிறது.

“கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இரண்டு மடங்குக்கும் அதிகமாக வடக்கில் போதைப் பொருள் பாவனை உயர்வடைந்திருக்கிறது,” என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில்,ஹெரோயின் போதைப்பொருளுக்கு அடிமையான நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்காக கடந்த ஜுன் மாதம் 54 பேரும்   ஜுலையில் 53 பேர், ஓகஸ்ட் மாதம் 93 பேரும் செப்டம்பர் 112 பேரும் என – சிகிச்சைக்காக வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அத்துடன் இவ்வாறு  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 10க்கும் மேற்பட்டோர் கடந்த மூன்று மாதங்களில் மரணமடைந்துள்ளனர் எனவும் மருத்துவர் சத்தியமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

சட்டத்தை நடைமுறைப்படுத்துவோர், பெற்றோர் மற்றும் பாடசாலைகளைத் தாண்டி, வடக்கில் போதைப் பொருள் வியாபாரம் மிகவும் நுணுக்கமாக நடைபெறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் யுத்தத்தின் பின்னர் மக்களிடமிருந்த பதட்டம், காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினரின் அதிகரித்த பிரசன்னத்தினால் ஏற்படும் அச்சம், வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் பணம் போன்றவை – போதைப் பாவனை அதிகரிப்புக்கு காரணங்களாக இருக்கக் கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்களில் தொடங்கி, 30 வயது வரையிலானோரே ஹெரோயின் பாவனையில் அதிகளவில் ஈடுபடுகின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, கடல் வழியாக போதைப் பொருள் கடத்தி வரப்படும் இடமாகவும் ‘வடக்கு’ மாறியுள்ளது.

“இந்தியாவின் தமிழ் நாட்டிலிருந்து வடக்குக்கு அதிகமாக கஞ்சா போதைப்பொருள் கடல் வழியாகக் கொண்டு வரப்படுகிறது. ஹெரோயின் வேறு வழியாக வடக்குக்குள் வருகிறது. போதைப்பொருள் வியாபாரிகள் அனைத்து இடங்களிலும் – போதைப் பொருள் பாவனையைப் பழக்குகின்றனர். குறிப்பாக மாணவர்களையும் இளைஞர்களையும் இலக்கு வைக்கின்றனர்,” என்கிறார் யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் கே. மகேசன்.

நன்றி பிபிசி தமிழ்

Leave a Reply