போஷாக்கின்மையால் சவால்களை எதிர்கொண்டுள்ள மலையகம்-துரைசாமி நடராஜா

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது.இக்கட்டான நிலைக்கு முகம் கொடுத்து வரும்  இலங்கை இதிலிருந்தும் மீண்டெழுவதற்கு பகீரதப் பிரயத்தனத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

கடந்தகால மற்றும் சமகால ஆட்சியாளர்களின் தூரநோக்கற்றதும், சுயநலன் சார்ந்ததுமான செயற்பாடுகள் நாட்டின் அபிவிருத்தியை அதள பாதாளத்துக்கு இட்டுச் சென்றுள்ளன.இதனிடையே நாட்டில் போஷாக்குணவு கேள்விக்குறியாகியுள்ள நிலையில் மலையக மக்கள் இதனால் பாரிய சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

பிள்ளைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார் மந்தபோஷணைக்கு முகம் கொடுத்து வருவதோடு இது திடகாத்திரமான சமூக உருவாக்கலுக்கும் குந்தகமாக அமைந்துள்ளது. அத்தோடு பல்வேறு நோய் நொடிகள் மேலெழும்புவதற்கும் கல்விப் பெறுபேறுகளின் பின்னடைவிற்கும் இது உந்துசக்தியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

” திடகாத்திரமான உடல் திடகாத்திரமான உள்ளத்துக்கு வழிவகுக்கும் “என்பார்கள்.எனவேதான் உடலைப் பேணும் நடைமுறைகள் தொடர்பில் அதிகளவு அக்கறை செலுத்தப்படுகின்றது.உடலின் அபிவிருத்திக்கு போஷாக்கான உணவுத் தேவையானது மிகவும் இன்றியமையாததாகும்.எனினும் போஷாக்கான உணவு என்பது எல்லோருக்கும் சாத்தியமாகியுள்ளதா? என்றால் விடை திருப்தியானதாக இல்லை.உலகில் பல பின்தங்கிய சமூகங்கள் தமது உணவுத்தேவையை நிறைவேற்றிக் கொள்வதில் பல்வேறு சிக்கல்களுக்கும் முகம் கொடுத்து வருகின்றன.

ஒருவேளை சோற்றுக்கே பலர் அல்லாடுகின்ற நிலைமையில் போஷாக்குணவு என்பது பலருக்கு கனவாகிப் போவதும் புதிய விடயமல்ல.  பின்தங்கிய சமூகங்களின் உணவுச் சவால்களை கொரோனா அதிகப்படுத்தி இருக்கின்றது.கொரோனாவால் மேலெழுந்த வேலையின்மை, பட்டினி, கடையடைப்பு , ஊரடங்கு உள்ளிட்ட பல நிலைமைகள் உணவுத் தேவையை அதிகப்படுத்தி இருந்தன.இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இது குறித்த தனது நிலைப்பாட்டை.அண்மையில் தெளிவுபடுத்தி இருந்தார்.  “கொரோனா தொற்று நோய் காலத்துக்குப் பின்னர் உலகம் பொருளாதார மீட்சி கண்கானிப்பு சவால்களை எதிர்கொண்டு வருகின்றது.

கொரோனா காலம் மற்றும் ரஷ்ய – உக்ரைன் போர் உலகளாவிய வினியோகச் சங்கிலியில்  தடைகளை உருவாக்கியது.இதன் விளைவால் உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பில் நெருக்கடி ஏற்பட்டது ” என்று அண்மையில் இடம்பெற்ற ஷாங்காய் மாநாட்டில் மோடி சுட்டிக்காட்டி இருந்தார்.

நெகிழ்ச்சியான வினியோகச் சங்கிலியை உருவாக்க வேண்டியதன் அவசியமும் இதன்போது அவரால் வலியுறுத்தப்பட்டது. கொரோனாவை பின்வந்த காலப்பகுதியுடன், இலங்கை ஆட்சியாளர்களின் தூரநோக்கற்ற சிந்தனை மற்றும் செயற்பாடுகளும் இலங்கையின் உணவு நெருக்கடிக்கு தூபமிட்டுள்ளன.

மலையக மக்கள் உழைப்பிற்கேற்ற ஊதியமின்றி அல்லல்படுகின்றனர்.உலகச் சந்தையில் தேயிலையின் விலை அதிகரித்துள்ளபோதும் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதில் கம்பனியினர் எவ்விதமான கரிசனையுமின்றி செயற்படுகின்றமை தொடர்பில் பலரும் தமது விசனப்பார்வையினை செலுத்தி வருகின்றனர்.

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் இப்போது வேகமாக அதிகரித்திருக்கின்றது.மொத்த சனத்தொகையில் 86 சதவீதமானோர் மூன்று வேளை உணவில் ஒரு வேளை உணவை வறுமை காரணமாக புறக்கணிக்கின்றார்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குடும்பம் ஒரு நாளுக்கான உணவுக்காக 4000 ரூபாவை செலவிடும் நிலைமை காணப்படுகின்றது என்றும் செய்திகள் வலியுறுத்துகின்றன.எனினும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய நிலையினை வைத்து நோக்குகையில் நிலைமைகள் கவலைக்குரியதாகவே காணப்படுகின்றன.

பெருந்தோட்டக் குடும்பங்கள் பல நான்கு அல்லது ஐந்து உறுப்பினர்களைக் கொண்டதாகக் காணப்படும் நிலையில் அவர்கள் சமகால விலைவாசி உயர்வுக்கு மத்தியில் உணவுக்காக செலவிடுவதில் பெரிதும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.

கொள்கையும் நடைமுறையும்

நாட்டில் மந்தபோஷணை வேகமாக அதிகரித்து வருகின்றது.இது தொடர்பில் உலக நாடுகளும் தனது கவனத்தை செலுத்தியுள்ளன.இதன் பாதக விளைவுகள் நீண்ட காலம் நின்று நிலைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.யுனிசெப் நிறுவனத்தின் அறிக்கையின்படி மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட வேண்டிய நிலையில் 57 இலட்சம் பேர் இலங்கையில் இருக்கின்றனர்.அவர்களில் 23 இலட்சம் பேர் சிறுவர்களாவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்ப்பிணித்தாய்மார் பலரும் இதில் உள்ளடங்குகின்றனர்.இதேவேளை நாட்டில் ஏற்பட்ட பசளைப் பிரச்சினை போன்ற பல ஏதுக்களால் விவசாய உற்பத்திகள் 40 தொடக்கம் 50 வீதத்தினால் குறைவடைந்திருக்கின்றன.இந்த நிலைமையும் மந்தபோஷணை அதிகரிப்பில் செல்வாக்கு செலுத்துகின்றது.

இந்நிலையில் சிறுவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோரை உள்ளடக்கிய  தேசிய போஷணைக் கொள்கை ஒன்றை உருவாக்குவது காலத்தின் கட்டாயமாகுமென்றும் இந்நடவடிக்கைக்கு தாம் பூரண ஒத்துழைப்பை வழங்குவதற்கு தயாராக இருப்பதாகவும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

இதேவேளை பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் தொடர்பில் தற்போது விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.தரமான உணவை மாணவர்களுக்கு பெற்றுக் கொடுத்து மந்தபோஷணைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மலையக மாணவர்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள் பலர் மந்தபோஷணைக்கு உள்ளாகியுள்ள நிலையில் இது தொடர்பில் உரிய விழிப்புணர்வு இல்லாதவர்களாக அவர்கள் காணப்படுகின்றனர்.இந்நிலையில் இது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்கு மலையக அரசியல்வாதிகளும், அரச சார்பற்ற நிறுவனங்களும் உச்சகட்ட பங்களிப்பினை நல்க வேண்டும் மலையகத்திலுள்ள.

படித்த இளைஞர் யுவதிகளும் இந்நடவடிக்கைக்கு தமது ஒத்துழைப்பை வழங்க முடியும்.அத்தோடு உணவு மற்றும் போஷாக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் தேசிய வேலைத்திட்டமொன்றை ஏற்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவதானம் செலுத்தியுள்ளார்.

உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கை உறுதிப்படுத்தும் கிராமிய பொருளாதார மறுமலர்ச்சி நிலையங்களை வலுவூட்டுவதற்கான பல்துறை ஒருங்கிணைப்பு பொறிமுறையும் அண்மையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.  இத்தகைய நடவடிக்கைகள் சமகாலத்தில் மிகுந்த முக்கியத்துவம் மிக்கதே எனினும் இதன் பயன்கள் சகலரையும் சென்றடைய அரசாங்கம் வழியேற்படுத்திக் கொடுப்பது மிகவும் அவசியமாகும்.

அரசாங்கத்தினால் முன்வைக்கப்படும் தேசிய வேலைத்திட்டங்கள் பல கடந்த காலத்தில் நகர மற்றும் கிராமப் புறங்களை சென்றடைந்த நிலையில் பெருந்தோட்டங்களைச் சென்றடைவதில் பல்வேறு இழுபறி நிலைகள் காணப்பட்டமையும் நீங்கள் அறிந்ததேயாகும்.

கல்வி, சுகாதாரம்,போஷாக்கு, டெங்கு ஒழிப்பு, வறுமை நிவாரணம், வீடமைப்பு எனப்பலவும் இதில் உள்ளடங்கும்.இந்த புறக்கணிப்பு நிலை இனியும் தொடர்வதற்கு இடமளிக்கலாகாது.வறுமை, போஷாக்கின்மை என்பவற்றினால் மலையக சமூகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அது சமூகச் சிக்கல்கள் பலவற்றுக்கும் உந்துசக்தியாக அமைந்துவிடும் அபாயமுள்ளதையும் மறுப்பதற்கில்லை.இதனை கருத்தில் கொண்டு மலையக சமூகத்தை சிக்கல்களில் இருந்தும் அழிவிலிருந்தும் பாதுகாக்க விசேட வேலைத்திட்டங்கள் முன்வைக்கப்பட் வேண்டும்.

மலையக அரசியல்வாதிகள் அரசாங்கத்தை வலியுறுத்தி அதிகளவு நன்மைகளை அரசாங்கத்திடமிருந்தும், சர்வதேச நாடுகள் மற்றும் நலன்விரும்பிகளிடமிருந்தும் பெற்றுக் கொடுக்க முயற்சிக்க வேண்டும்.தமது சமூகம் போஷாக்கின்மையால் அழிவடைவதை அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.இதேவேளை தமது அரசியல் இருப்பை உறுதி செய்து கொள்வதற்கு, தேர்தலில் வாக்களிப்பதற்கும் மக்கள் அவசியம் என்பதையும் அவர்கள் மறந்துவிடலாகாது.