“எமது வாழ்வோடு விளையாடாதீர்கள்”-அரசாங்கத்திடம் வெளிநாட்டு பட்டதாரிகள் வலியுறுத்தல்

368 Views

images 1 1 “எமது வாழ்வோடு விளையாடாதீர்கள்”-அரசாங்கத்திடம் வெளிநாட்டு பட்டதாரிகள் வலியுறுத்தல்

வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலை வழங்கும் திட்டத்தின் கீழ் திட்டமிட்டு வெளிநாட்டு பட்டதாரிகள் புறக்கணிப்புக்கு உள்ளானதாக வெளிநாட்டு பட்டதாரிகள்  சங்கம் இன்று  வெளியிட்டுள்ள தனது ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மேலும் அவ் வறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,

“இந்திய அரச பல்கலைக் கழகங்களில் பட்டம் முடித்தவர்கள்கூட இவ்வாறு புறக்கணிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அதுமட்டுமன்றி இந்தியாவின் சில அரச பல்கலைக்கழகங்கள் தரப்படுத்தலில் இலங்கை அரச பல்கலைக் கழகங்களை விட முன்னணி வகிக்கின்றன. இந்தியாவின் அரச பல்கலைக் கழகங்களில் பட்டம் முடித்தவர்களுக்கு இலங்கை அரச பல்கலைக் கழகங்கள் முதுமாணி கற்பதற்கு வாய்ப்பை வழங்கும்போது ஏன் தொழில் வாய்ப்பை வழங்குவதற்கு மறுக்கின்றது என்ற முரணை புரிந்து கொள்ள முடியவில்லை.

அதேநேரம் இலங்கை ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளில் ஒன்று என்ற வகையில் இவ்வாறு வெளிநாட்டு பட்டதாரிகளுக்கு அரச தொழில் வழங்கமாட்டோம் என்பது சர்வதேச நியமங்களை மீறும் ஒரு செயலாகும். அரசாங்கம் தொடர்ந்து எங்களை புறக்கணித்து வருமாக இருந்தால் எங்கள் பிரச்சினையை ஐ.நா வரை கொண்டு செல்வதற்கு நிர்ப்பந்திக்கப்படுவோம் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இருந்த போதிலும் எமது அரசாங்கம் எமது நிலையைக் கருத்திற் கொண்டு எமக்கான தீர்வைப் பெற்றுத் தரும் என்பதில் நம்பிக்கை வைத்துள்ளோம்.

கடந்த காலங்களில் அரச நியமனங்கள் வழங்கும்போது உள்நாட்டு பட்டதாரிகள் வெளிநாட்டு பட்டதாரிகள் என்று பாரபட்சம் காட்டப்படவில்லை. தற்போது அரசியல் காரணங்களுக்காகவே இந்தப் பாரபட்சம் காட்டப்படுகிறது. தொடர்ந்து சிறுபான்மை மக்களை கருவறுக்கும் செயலாகவே இதனை நோக்க வேண்டியுள்ளது. ஏனெனில் வெளிநாட்டு பட்டதாரிகளில் அதிகமானோர் தமிழ் பேசும் மக்களேயாகும்.

வெளி நாட்டு பட்டதாரிகள் தொடர்பாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டில் முக்கியமானவை இவர்கள் போலியாக பட்டம் முடித்தவர்கள் என்பதாகும். இந்தக் குற்றச்சாட்டின் மூலமாக முறையாக வெளிநாட்டின் அரச பல்கலைக் கழகங்களில் முறையாக பட்டம் முடித்தவர்கள் இதனால் அதிகம் பாதிக்கப் பட்டுள்ளார்கள்.

இலங்கையில் போலிப் பட்டம் முடிப்பதற்கான காரணம் தனியார் பல்கலைக் கழகங்களையும் வெளிநாட்டு பல்கலைக் கழகங்களையும் சரியாக கண்கானித்து முகாமை செய்யாமையாகும்.

கடந்த காலங்களில் வெளிநாட்டு பட்டதாரிகளுக்கு அரச நியமனங்கள் வழங்காமல் வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் கற்பவர்களுக்கு அரச நியமனங்கள் கிடையாது என சட்ட ஏற்பாடு செய்திருந்தால் நாங்கள் வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் பட்டம் முடிக்காமல் இருந்திருப்போம்.

தற்போது எமது கால நேரம் பொருளாதாரம் என்பவற்றை செழவழித்து பல் வேறு மன உலைச்சல்களுக்கு உட்பட்ட பின்னர் இவ்வாறு நாங்கள் நிந்திக்கப்படுவது முறையாகுமா?

பல வெளிநாட்டு பட்டதாரிகள் 40 வயதை தாண்டி விளிம்பு நிலையில் பல்வேறு சுமைகளுக்கு மத்தியில் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் வாழ்க்கையோடு விளையாடாமல் நல்லதொரு தீர்வு வழங்கப்பட வேண்டும்.

60,000 பட்டதாரிகளுக்கு அரச நியமனம் வழங்கும் திட்டத்தில் ஒரு வெளிநாட்டு பட்டதாரிகள் உள்ளடக்கப்பட வில்லை என்பது வருந்தத் தக்க விடயமாகும். இலங்கையில் வெளிநாட்டுப் பட்டதாரிகள் 4000 பேர் இருந்த போதிலும் சுமார் 2000 பேரே உயர்தரத் தகுதியுடன் பட்டம் முடித்தவர்களாகும்.

தற்போதைய அரச தீர்மானத்திற்கமைய வெளிநாடுகளுக்கு சென்று பட்டம் பெற்றவர்களுக்கு நியமனம் வழங்கிவிட்டு, இலங்கையில் வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களின் கிளைகளில் கற்றவர்களை புறக்கணிப்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு செயலாகும். வெறும் கண்துடைப்புக்காக இவ்விடயங்களை செய்யாமல் கஷ்டப்பட்டு படித்த பட்டதாரிகளின் வாழ்வில் விளையாடாமல் இதில் அரசியல் தந்திரங்களையும் இன மத பாரபட்ச மற்ற முறையில் சரியாக இந்த நியமன விடயம் கையாளப்பட வேண்டுமென மேலும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ilakku-weekly-epaper-143-august-15-2021

Leave a Reply