ஜனாதிபதியுடனான பேச்சுகளில் ஆரம்பத்திலேயே நிபந்தனைகளை முன்வைத்து எச்சரிக்கைகளை விடுத்து குழப்பியடிக்க வேண்டாம் என்று தமிழ்க் கட்சிகளிடம் கேட்டுக்கொள்கின்றேன் என்று சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ஷ எம். பி. கூறியுள்ளார்.
அத்துடன், சர்வதேச சக்திகளின் நிகழ்ச்சி நிரலில் செயல்பட்டால் எல்லாம் குழப்பமாகவே இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமிழ் கட்சிகளுக்கும் இடையிலான பேச்சு தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியல் தீர்வை காணும் செயல்பாட்டில் இறங்கியுள்ளார். இதற்கு அரசின் பிரதான பங்காளிக் கட்சியான பெரமுன முழு ஆதரவை வழங்குகின்றது. ஏனைய கட்சிகளும் ஆதரவு வழங்கும் நிலையில் உள்ளன.
இந்த நல்லதொரு சந்தர்ப்பத்தை குழப்பியடிக்க வேண்டாம் என்று தமிழ்க் கட்சிகளிடம் கேட்டுக்கொள்கின்றேன். சர்வதேச சக்திகளின் நிகழ்ச்சி நிரலில் செயல்பட்டால் இங்கு எல்லாம் குழப்பத்தில்தான் முடியும்.” என்றார்.