பிரபாகரனின் கல்வி அறிவைப் பற்றி கதைக்கும் பொன்சேகாவிற்கு சஜித்தின் படிப்பறிவு குறித்து தெரியுமா? – சிவாஜி கேள்வி

சஜித்தின் படிப்பறிவு குறித்து தெரியுமா

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் கல்வி அறிவைப் பற்றி கதைக்கும் சரத் பொன்சேகாவிற்கு தமது கட்சி தலைவர் சஜித்தின் படிப்பறிவு குறித்து தெரியுமா என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பினார்.

சரத் பொன்சேகா விடுதலைப் புலிகளின் தலைவர் தொடர்பாக தெரிவித்த கருத்து குறித்து யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், சரத் பொன்சேகா என்பவர் இரட்டை வேடமாக செயற்படுகின்ற ஒருவர். சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலிலேயே விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்தோர் ஏனைய விடுதலைப் போராட்ட இயக்கத்தில் இருந்தவர்கள் படிப்பறிவு அற்றவர்கள் என்ற ஒரு கருத்தினை பதிவு செய்துள்ளார்.

நான் அவருக்கு சொல்ல விரும்புவது என்னவென்றால் இலங்கையினுடைய தலைவர்களாக, பிரதமராக இருந்தோர் மற்றும் ஏனையோர் எட்டாம் ஆண்டு பத்தாம் ஆண்டு படித்தவர்கள். பல்கலைக்கழகப் படிப்பு அல்லது பட்டப் படிப்பினை முடித்தவர்களல்ல. ஆனால் அனைவருமே சாதாரண மட்டத்திலிருந்து தலைவர்களாக வந்தவர்கள்.

எனவே இவ்வாறு பல உதாரணங்களைக் கூற முடியும் ஆனால் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தன்னுடைய 15ஆவது வயதிலேயே விடுதலைப் போராட்டத்தில் இணைந்துவிட்டார். அவர் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பித்துவிட்டு தோற்றவில்லை.

அதேபோல ஏனைய இயக்கங்களினுடைய தலைவர்களையும் எடுத்துப் பார்த்தால் அவர்களும் உயர் படிப்புகளை படித்திருக்கவில்லை. ஆனால் அனுபவங்களின் மூலம் செயற்பட்டவர்கள்.

விடுதலைப் புலிகளின் தலைவர் ஒரு நடைமுறை அரசை ஒரு முப்படையினை கொண்டு வழிநடத்தியவர். குறிப்பாக ஜெயசிக்குறு ராணுவ நடவடிக்கையை ஓயாத அலை என்னும் முறியடிப்பு சமர் மூலம் முறியடித்த பெருமை பிரபாகரனையே சேரும்.

எனவே அவ்வாறான திறமைகளை புரிந்தவரை இரட்டைவேடம் போடும் பொன்சேகா போன்ற நடிகர்கள் படிக்காதவர் என்று கூறும் அளவுக்கு அவர் எளிதானவர் அல்ல.

இவருடைய கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸவின் கல்வி நிலை என்ன என்று தெரியுமா? அவருடைய கல்வி நிலை பற்றி பொன்சேகா அறிய வேண்டும். அது தொடர்பிலும் பொன்சேகா தனது கருத்தினை கூற வேண்டும்.

2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் போது சரத் பொன்சேகா இவ்வாறான கருத்துக்களை கூறி இருக்கலாமே? ஏன் அவ்வாறு கூறவில்லை. அவர் ஒரு நடிகர். இரட்டை வேடம் போடும் நபர் எனவேதான் அவர் தற்போது தென்பகுதி மக்களின் வாக்குகளை சூறையாடுவதற்காக சில கதைகளை கூறி வருகின்றார். நாங்கள் இன்று மகிழ்கின்றோம். ஏனென்றால் இவ்வாறான ஒரு வரை ஜனாதிபதியாக நியமித்திருந்தால் தமிழ் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்போம்” என அவர் மேலும் தெரிவித்தார்.

Tamil News