இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பில் பிரித்தானியாவில் ஆவணப்படம் திரையிடல்

இனப்படுகொலை-பிரித்தானியாவில் ஆவணப்படம் திரையிடல்

1948 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதில் இருந்து, இலங்கையில் ஆட்சிக்கு வந்த இனவாத அரசாங்கங்கள் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளும் வன்முறை சுழற்சிகள் மற்றும் இனப்படுகொலை என்பதை சர்வதேச சமூகத்திற்கு காண்பிக்கும் வகையில், ஒரு பிரித்தானியாவில் ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு ஆதாரங்களில் இருந்தும் புகைப்படங்கள் மற்றும் காணொளி பதிவுகளைப் பயன்படுத்தியும் உருவாக்கப்பட்ட ஆவணப்படம் 27 ஏப்ரல் 2022 அன்று பிரித்தானிய பாராளுமன்றத்தில் திரையிடப்பட்டுள்ளது.

கோவிட் (Covid) மற்றும் நாடாளுமன்ற விதிமுறைகள் காரணமாக பார்வையாளர்கள் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டதுடன், அனைத்து கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch – HRW) மற்றும் தமிழ் சமூகத் தலைவர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

இறுதியாக, கேள்வி-பதில் நிகழ்ச்சியுடன் நிகழ்வு நிறைவுற்றதுடன், நிகழ்வில் கலந்து கொண்டிருந்த அனைத்து கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிர்ச்சியுடனும் இக்காணொளிகளை பார்வையிட்டுள்ளனர்.

இந்த ஆவணப்படத்தின் முக்கிய நோக்கம், இலங்கை தொடர்பான கொள்கை வகுப்பாளர்களுக்கும் அது தொடர்பிலான முடிவினை எடுப்பவர்களுக்கும், தமிழ் மக்களின் அவல நிலைமையினை தெரியப்படுத்துவதாக இருந்தது.

இலங்கை மீது பொருளாதார தடைகளையும், போர் குற்றவாளிகளை தமது நாட்டுக்குள் அனுமதிப்பதற்கான தடைகளையும் அமுல்படுத்த முடியும். மனித உரிமைப் பாதுகாவலர்களும், அமைப்புகளும், தமிழர்கள் மீதான இனப்படுகொலையின் உண்மை நிலைமையினை உறுதிப்படுத்துவதற்கு இவ் ஆவணப்படம் சிறந்த ஆதாரமாக அமையும் என்றும் கூறப்படுகின்றது.

நன்றி- தமிழ்வின்
Tamil News