” பிச்சை வேண்டாம்.நாயைப் பிடி ” என்ற நிலையில் தமிழர்கள்-சட்டவாளர் கே.எஸ்.இரத்தினவேல்

287 Views

1948 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் நாளை  உலக மனித உரிமைகள் நாள் என  ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அறிவித்துள்ளது.

கருத்துச் சுதந்திரம், எழுத்துரிமை, கல்வி, மருத்துவம், சுகாதாரம், குடிநீர் போன்ற அடிப்படை தேவைகளைப் பெற்று சுதந்திரமாக உயிர் வாழ்வதற்கான உரிமை ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. இனம், நிறம், மொழி, பாலினம், அரசியல், ஜாதி, மதம், பிறப்பு, சொத்து, பிற அந்தஸ்து, தேசிய அல்லது சமூக தோற்றம் என எதிலும் பாகுபாடு பார்க்கக்கூடாது என்பதை உணர்த்துவதே இந்த நாளை கொண்டாடுவதற்கான முக்கிய நோக்கமாகும்.

இந்நிலையில், மனித உரிமைகள் வழக்கறிஞரும் மனித உரிமைகள் மற்றும் மேம்பட்டு மையத்தின் (CHRD) Centre for Human Resource Development  இயக்குநருமான கே.எஸ்.இரத்தினவேல் அவர்கள் இலக்கு ஊடகத்திற்கு வழங்கிய செவ்வி….

* கேள்வி:-

இந்த ஆண்டின்  மனித உரிமைகளைப் பேணுவதற்கான மையக் கருவாக தன்மானம், விடுதலை, நீதி என்பன முன்வைக்கப்பட்டுள்ளது.இலங்கையில் தன்மான வாழ்வு ஏனைய சமூகத்தவர்களைப் போன்று தமிழர்களுக்கும்  சாத்தியமாகியுள்ளதா?

* பதில் :-

சர்வதேச சமூகம்  இலங்கை தமிழர்களின்   தன்மானம், நீதி என்பனவெல்லாம் எவ்வாறு இருக்க வேண்டும்? என்று நோக்குகின்றது என்பது குறித்து நாம் சிந்திப்போம். ஐக்கிய நாடுகள் சபை உலகத்தின் பொது அமைப்பாக விளங்குகின்றது.இச்சபையின்  பலதரப்பட்ட கடப்பாடுகளும் மேற்கண்ட விடயங்கள் அனைத்தும் மேல் தரத்தில் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைப்பற்றி கூறுகின்றது.அதாவது மனிதர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்.கண்ணியமான வாழ்க்கையை நடாத்துவதற்கு வழியேற்படுத்திக் கொடுக்கப்படுதல் வேண்டும்.அதற்கான அமைப்புக்கள் ஒவ்வொரு நாட்டிலும் இருக்க வேண்டும்.என்ற தொனிப்பொருளிலேயே இந்த கடப்பாடுகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.ஆனால் இது பூரணமாக கடைப்பிடிக்கப்படுகின்றது என்று கூறுவதற்கில்லை.

 மேற்கத்தேய நாடுகளின் தராதரத்தில் பார்த்தால் கூட அது இல்லை.என்றபோதும் அந்த நாடுகளில் அவ்வாறு அமையாதபோது அவற்றை அமுல்படுத்துவதற்கான சட்டங்கள், சட்ட அமுலாக்க விதிகள் இவையெல்லாம் அங்கிருக்கின்றன. மேலைத்தேய  நாடுகளில் எங்களின் புலம்பெயர் தமிழர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் குடியுரிமை பெற்றவர்களாக இருந்தால் ஏனைய மக்களுடன் சரிசமமாக நடாத்தக்கூடிய கடப்பாடு அரசாங்கத்துக்கு இருக்கின்றது.ஏதேனும் பாகுபாட்டுடன் நடாத்தப்படுவார்களானால் அதற்கெதிராக மேற்கொள்ளக்கூடிய பல கட்டமைப்புக்கள் அங்கு காணப்படுகின்றன.இதன்போது நியாயம் கிடைக்கும் என்பதற்கான உறுதி குறைந்தது 90 சதவீதமாக இருக்கும்

எனினும் துரதிஷ்டவசமாக ஆசிய நாடுகளில் குறிப்பாக இலங்கை போன்ற நாடுகளில் இந்நிலைமை துப்புரவாக இல்லை என்றே சொல்ல வேண்டும்.நாம் ஏதாவது ஒரு விடயத்தில் பாரபட்சமாக நடாத்தப்படுகின்றோம் என்ற நிலையில் முறைப்பாடு செய்யுமிடத்து அதற்கான நீதி அல்லது நியாயம் எங்களுக்கு கிடைக்கின்றதா? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகும். சட்டத்தின் முன் எல்லோரும் சமம், அடிப்படை உரிமைகள் என்றெல்லாம் பல  சட்டங்கள்  அமைந்திருந்தாலும் அவற்றை அமுல்படுத்துவதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. சரித்திர ரீதியாக பார்க்கையில் கடந்த பல தசாப்தங்களாக சமமான அந்தஸ்து தமிழ் மக்களுக்கு கிடைக்கவில்லை.உரிமைகளை அடைவதற்கான முயற்சிகள் பல மேற்கொள்ளப்பட்டபோதும் அவை தொடர்ச்சியாக உதாசீனப்படுத்தப்பட்டே வந்துள்ளன.அதனையும் மீறி அடிப்படை உரிமை மீறல்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றபடியால் தன்மானம் என்பது கூட மறுக்கப்படுகின்றது என்றுதான் சொல்ல வேண்டும்.வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களுக்கு பல  உரிமைகள் மறுக்கப்பட்டிருக்கின்றன என்பதை வருத்தத்துடன் கூறவேண்டியுள்ளது.

* கேள்வி :-

தமிழ் மக்கள் விடுதலை அடையும் பொருட்டு ஈழத்தமிழர், புலம்பெயர் தமிழர் மற்றும் அரசியல் தலைவர்கள் என்ன செய்திருக்கின்றனர்?

* பதில்:-

விடுதலை என்னும்போது அதற்கு பலவிதமான வியாக்கியானங்கள் இருக்கின்றன.இந்நிலையில் விடுதலை என்கையில் “சுதந்திரமான வாழ்வு” என்று கருதி நான் கருத்துக்களைக் கூறுகின்றேன்.இலங்கையின் ஒற்றையாட்சி முறைமைக்குள் இவ்வளவு காலமும் தமிழர்களுக்கு சுதந்திரமான வாழ்வு கிட்டவில்லை என்பதையும் இங்கு கூறியாக வேண்டும்.

அதற்கென நிறைய போராட்டங்கள் நடந்திருக்கின்றன.அகிம்சை மற்றும் ஆயுத ரீதியான போராட்டங்கள் இதில் உள்ளடங்கும்.இவற்றுள் ஆயுத ரீதியான போராட்டங்கள் உச்ச கட்டத்தை அடைந்தபோதும் சர்வதேச சதிச்செயல்களினால் அது முறியடிக்கப்பட்டு தற்போது, “பிச்சை வேண்டாம் .நாயைப்பிடி ” என்ற ரீதியில்தான்  தமிழ் மக்களின் நிலைமை போய்க் கொண்டிருக்கின்றது.இதேவேளை தமிழ் மக்கள் சுதந்திரமாக  இருப்பதற்கு அரசியல்வாதிகள் எந்தளவுக்கு தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்கின்றார்கள் என்ற விடயம் தொடர்பில் நாம் சந்தேகக் கண்ணுடன் பார்க்க வேண்டி இருக்கின்றது.

ஏனென்றால் ஒரு தேர்தல்  என்று வரும்போது எங்களுடைய தேர்தல் முறைமையின் மூலம் கூட்டத்தில் கூட்டமாக இருக்கின்ற ஒரு சிலரை மிகப்பெரியளவான பிரச்சாரம்  செய்து சிலர் வெற்றியடைந்திருக்கின்றார்கள்.ஆனால் இவர்கள் தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்கின்றார்களா? என்ற சந்தேகமுள்ளது.

அத்துடன் தேர்தல் முறைமையும்  பல குளறுபடிகளுக்கு வித்திட்டுள்ள நிலையில் , வாக்களிப்பிலும் பல குளறுபடிகள் இங்கு இடம்பெற்றுள்ளன.அரசியல்வாதிகள் எப்போதும் தங்களின் சொந்த நலனிலேயே அக்கறை கொண்டவர்களாக இருக்கின்றனர்.

ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்தை நம்பியே அவர்கள் அரசியல் பிழைப்பு நடாத்துகின்றார்கள்.இத்தகையோர் தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்வதாகக் கூறுவதற்கில்லை.தமிழ் மக்களின் சுதந்திரத்தை, அந்தஸ்தை, சம உரிமையை  மறந்துவிட்டு பல விடயங்களை சமரசம் செய்து கொண்டுதான் தங்களுடைய பிழைப்பை நடாத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

உதாரணமாக மீனவர்களின் வாழ்வாதாரம் இன்று கேள்விக்குறியாகி இருக்கின்றது.தமிழர்களுக்கு யாராவது உதவுவார்களா? என்றால் அது கானல் நீருக்கு ஒப்பானது.

அரசியல்வாதிகள் கட்டுக்கோப்புடனும், ஒருமித்த சிந்தனையுடனும் செயற்படுகின்றார்கள் என்று கூற முடியாது.அவர்கள் தனித்தனியாக அல்லது தனிக் குழுக்களாக செயற்படுவதால் பல சிக்கல்களுக்கும் முகம் கொடுக்க வேண்டியுள்ளது.

அவர்கள் ஒருங்கிணைந்து, ஒருமித்த கருத்துடன் உத்திகள் அல்லது திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.அத்தோடு இவற்றுக்கான கால விடயத்தை நியமித்து செயற்பட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.தனியாக அல்லது பிரிந்து செயற்படுவார்களானால் பாரியளவு மாற்றம் எதுவும் ஏற்படப்போவதில்லை. அரசியல்வாதிகள் தொலைநோக்குடன் சிந்தித்து செயற்பட வேண்டும்.

*  கேள்வி:-

அடிமைத்தனத்தில் இருந்து விடுபடுதல் இது தொடர்பாக உள்நாட்டில், சர்வதேசத்தில் என்ன பாதுகாப்பு வழங்கப்படுகின்றது? அத்தோடு கடந்த 75 ஆண்டுகளாக மனித உரிமை சாசனத்தால் பாதுகாப்பு கிட்டியதா?

* பதில் :-

மனித உரிமை சாசனமென்பது மனித வாழ்க்கைக்கு எந்தெந்த விடயங்கள் தேவையோ அதன் அதியுச்சமான வரம்பை அது சுட்டிக்காட்டி நிற்கின்றது.நாட்டின் சட்டங்கள் அதற்கேற்ப அமைய வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றது.சர்வதேச சட்டங்கள் எவ்வாறு இருப்பினும் உள்நாட்டு சட்டங்களின்படியே ஆட்சி நடந்து கொண்டிருக்கின்றது.அதேசமயம் சர்வதேச சட்டங்களை உள்நாட்டு சட்டங்களுக்கேற்ப மாற்றி  உள்வாங்கி அவைகளை அமுல்படுத்துவதற்கும் ஒரு சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

ஆனால் சில நாடுகளில் இது கடைபிடிக்கப்படுவதில்லை..உதாணமாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் குறித்து 144 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.இந்நிலையில் உரிமை மீறல்களை சர்வதேச நீதிமன்றங்களுக்கு கொண்டு செல்வதில் சில நாடுகள் சிக்கல்களை எதிர்நோக்குகின்றன.

சர்வதேச நீதிமன்றத்தை சில நாடுகள் அங்கீகரிக்காமை இதற்கான காரணமாகும். சுதந்திரத்தை பெற்றுக் கொண்டு அடிமைத்தனத்தை துடைத்தெறிய வேண்டிய தேவையுள்ளது.உள்நாட்டிலாயினும்  வெளிநாட்டிலாயினும் ஒரு முனைப்புடனேயே இதற்கென செயற்பட வேண்டியுள்ளது.சர்வதேச சட்டங்கள் சாதகமாக உள்ள நிலையில் அவற்றை கையாளுவதற்கான உத்திகள் தொடர்பிலும் ஆய்வுகள் இடம்பெற்று வருகின்றன.இது சாதக விளைவுகளைத் தரும் என்ற நம்பிக்கையுள்ளது.

* கேள்வி :-

சாதி, மதவெறி, இனவெறி , பிரதேச வெறி, பெண்ணடிமைத்தனம் இவைகளைக்கொண்ட  தமிழ் சமுதாயம் இவற்றை மாற்றுவதற்கு என்ன செய்திருக்கின்றது?

* பதில்:-

தமிழ் சமுதாயம் எந்த நாட்டில் இருந்தாலும் பிற்போக்கு வாதமான ஒரு நிலையையே கொண்டுள்ளது என்பதனை கவலையுடன் கூற வேண்டியுள்ளது.தமிழ் சமூகம் பல காரணங்களால் முன்னேறிச் செல்ல முடியாதுள்ளது.அதாவது நவீனமயமாக்குதல் இச்சமுதாயத்தில் இல்லை என்றே கூறலாம்.ஏனைய இனங்கள்  வாழ்க்கைப் போக்குகளை நவீனமயப்படுத்துவதில் முன்னிற்கின்றன.ஆனால் தமிழர்களைப் பொறுத்தவரையில் பல இன்னல்களை சந்தித்ததாலோ என்னவோ நிர்க்கதியான, ஸ்தம்பிதமடைந்த நிலையிலேயே உள்ளது.1950,60 களில் இருந்த நிலையை தாண்டிச் செல்ல முடியாத நிலையே காணப்படுகின்றது.கல்வி, தொழில், பொருளாதார ரீதியில் அபிவிருத்தியடைந்திருந்தாலும் புலம்பெயர் தமிழர்கள் கூட மனதளவில் , கொள்கையளவில் அவற்றை தாண்டிச் செல்ல தடைகளுள்ளன.சாதிவெறி, பிரதேச வெறி நீங்க வேண்டும்.இதற்கு முன்னேற்றகரமான போக்குடைய கல்வி அவசியமாகும்.

நாம் எங்களை மேன்மைப்படுத்துவதற்காக மற்றவர்களை தாழ்மைப்படுத்த தேவையில்லை.மற்றவர்களுடன் சரிசமமாக நாம் இருக்க வேண்டுமானால் எவ்வாறு அவர்கள் மேன்மை அடைந்திருக்கின்றார்களோ அதே மேன்மையை நாம் அடைதல் வேண்டும் என்று திடசங்கம் பூண்டு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். எல்லோரும் சமமாக முன்னேற வேண்டும் என்ற கொள்கையுடன் இருக்க வேண்டும்.

அதைவிடுத்து பிரதேசவாதம் பேசிக் கொண்டிருக்கக் கூடாது.நாம் எமது வினைத்திறனை மேம்படுத்தாமல் மேன்மையடைந்தவர்களை விமர்சிப்பது மிகப்பெரும் தவறாகும்.ஆய்வுகள் பலவும் மேற்கொள்ளப்பட்டு எமக்கு நாமே சுயவிமர்சனம் செய்து கொள்வது மிகவும் இன்றியமையாததாகும்.

Leave a Reply