ஈழத்தமிழரின் இறைமை உறுதிப்படுத்தப்பட்டாலே கண்ணிய சுதந்திர நீதி வாழ்வு அவர்களுக்குச் சாத்தியம் | இலக்கு இதழ் 212

ஈழத்தமிழரின் இறைமை உறுதிப்படுத்தப்பட்டாலே கண்ணிய சுதந்திர நீதி வாழ்வு அவர்களுக்குச் சாத்தியம்

2023 டிசம்பர் 10 இல் ஐக்கியநாடுகள் சபையின் “எல்லா மனிதர்களும் சுதந்திரத்துடன் பிறந்தவர்கள். அவர்களின் கண்ணியமும் உரிமைகளும் சமமானது” என்பதை வலியுறுத்தும் அனைத்துலக மனித உரிமைகள் சாசனம் பிரகடனப்படுத்தப்பட்ட வைரவிழாவை, 75வது ஆண்டை, ஐக்கியநாடுகள் சபை எதிர்கொள்கிறது. இந்நிலையில் “எல்லா மக்களுக்கும் கண்ணியமான சுதந்திரமான நீதியான வாழ்வு” என்ற அழைப்பு 2022ம் ஆண்டு டிசம்பர் 10ம் திகதிய அனைத்துலக மனித உரிமைகள் நாளுக்கான மையக்கருத்தாகக் கட்டமைக்கப்பட்டு, மக்களின் சுதந்திரமான கண்ணியமான சம உரிமைகளுடன் கூடிய வாழ்வுக்காக உழைக்க உலகின் அரசுக்களுக்கும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களுக்கும் மக்களுக்கும் கோரிக்கை விடுத்துள்ளது. 2030ம் ஆண்டினை எல்லையாகக் கொண்டு நீடித்து நிலைக்கத் தக்க வளர்ச்சிகளை உலகில் உருவாக்க வேண்டும் என்னும் ஐக்கிய நாடுகள் சபையின் இலக்கு மனித உரிமைகளை நிலைநிறுத்துவதிலேயே தங்கியுள்ளது.
இந்நிலையில் ஈழத்தமிழர்கள் என்னும் இலங்கைத் தீவில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாக இன்று வரை தொன்மையும் தொடர்ச்சியும் கொண்ட இறைமையுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் உலகின் மூத்த குடிகளுக்கு அவர்களின் கண்ணியமான சுதந்திரமான நீதியான வாழ்வு என்பதை எவ்வாறு ஐக்கிய நாடுகள் சபை உறுதிப்படுத்தும் என்பது உலகத் தமிழரின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஈழத்தமிழர்களுடைய இறைமை உறுதிப்படுத்தப்பட்டாலே கண்ணிய சுதந்திர நீதி வாழ்வு அவர்களுக்கு நடைமுறைச் சாத்தியமாகும். ஈழத்தமிழரின் இறைமையை, கி.பி 1796 இல் கைப்பற்றி 1948 வரை 152 ஆண்டுகள் காலனித்துவ மக்களாக அவர்களை ஆட்சி செய்த பிரித்தானிய காலனித்துவ அரசாங்கம், 04.02.1948இல் ஈழத்தமிழர்களின் விருப்பின்றி உருவாக்கிய சிங்களப் பெரும்பான்மை ஒற்றையாட்சிப் பாராளுமன்ற ஆட்சி முறைக்குள் உட்படுத்தி இலங்கை அரசாங்கம் என்ற அரசை இருதேசங்களை ஒரு தேசமாகச் சுதந்திரம் வழங்கியதன் பின்விளைவாக, இன்றுவரை 74 ஆண்டுகள் அந்தச் சிங்கள பௌத்த பேரினவாத அரசாங்கத்தின் இனஅழிப்பு, இனத்துடைப்பு, பண்பாட்டு இனஅழிப்பு என்னும் முத்தரப்பட்ட இனஅழிப்பு அரசியலுக்கு எதிராக போராடியே ஈழத்தமிழர்கள் கண்ணிய சுதந்திர நீதி வாழ்வை முன்னெடுக்க வேண்டியதாக உள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்துலக மனித உரிமைகள் சாசனம் பிரகடனப்படுத்தப்பட்ட 1948 முதலாக, காலனித்துவகாலப் பிரச்சினையாகத் தீர்க்கப்பட வேண்டிய ஒன்றாக உள்ள இந்த ஈழத்தமிழர் தேசியப்பிரச்சினையை அனைத்துலக நாடுகளின் கட்டமைப்பான ஐக்கியநாடுகள் சபை தான் தீர்த்துவைக்க வேண்டும். பிரித்தானியா இலங்கைக்குச் சுதந்திரம் வழங்கிய சோல்பரி அரசியலமைப்பில் மத, இன சிறுபான்மையினர்க்கு வழங்கிய அரசியலமைப்புப் பாதுகாப்பான 29(2) விதியை 22.05.1972 முதல் சிங்களப் பெரும்பான்மை ஆட்சியாளர்கள் வன்முறைப்படுத்தியதன் விளைவாக அவர்கள் தன்னிச்சையாக உருவாக்கிய சிங்கள பௌத்த குடியரசு என்னும் ஈழத்தமிழரை ஆளும் சட்டத் தகுதியற்ற அரசியலமைப்பால் ஈழத்தமிழர்கள் அரசற்ற தேசஇனமாக இன்று வரை உள்ளனர். இதனால் தங்களின் இறைமை பிரித்தானியாவிடம் இருந்து தங்களிடமே மக்கள் இறைமையாகத் திரும்பிவிட்ட வரலாற்றுப் பரிணாமத்தின் அடிப்படையில் தங்களின் அரசியல் எதிர்காலத்தைத் தாங்களே அமைப்போம் என்னும் தன்னாட்சிப் பிரகடனத்தைதை 1974இல் அக்கால ஈழத்தமிழர்களின் அரசியல் தலைமையாக இருந்த சா.ஜே.வே செல்வநாயகம் அவர்கள் காங்கேசன்துறைத் தேர்தல் தொகுதியில் நடைபெற்ற அடையாள குடியொப்பத் தேர்தலால் ஈழத்தமிழ் மக்களாணையாக்கி, அதனை 1975இல் சிறிலங்காப் பாராளுமன்றத்தில் ஈழத்தமிழரின் தன்னாட்சிப் பிரகடனமாக சனநாயக முறையில் அனைத்துலக சட்டங்களுக்கு ஏற்ப வெளியிட்டார். இந்த தன்னாட்சிப் பிரகடனத்தை 1977 தேர்தலை குடியொப்பமாக்கி ஈழமக்கள் தமது ஆணையாக உலகுக்கு உறுதிப்படுத்தியதும் அல்லாமல் அதனை சனநாயக வழிகளில் சிறிலங்கா அனுமதிக்காது விட்டால் வேறு எந்த ஏற்புடைய வழிகளிலும் அடைவோம் எனவும் உலகுக்குத் தெளிவாக்கினர்.
இதன் அடிப்படையிலேயே தங்களுடைய உயிருக்கும் உடமைகளுக்கும் நாளாந்த வாழ்வுக்கும் இனங்காணக்கூடிய அச்சத்தை விளைத்த சிறிலங்கா அரசாங்கத்தின் படைகளுக்கு எதிராகத் தங்களையும் தங்களின் மண்ணையும் வாழ்வையும் காக்கும் பாதுகாப்பான அமைதிக்கான மனித உரிமைப் போராட்டமாக தமிழீழத் தேசிய விடுதலைப்போராட்டத்தை 1978 முதல் தங்களின் தேசியத் தலைவரான மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையில் முன்னெடுத்தனர். சீருடை அணிந்த முப்படைகளும் நிர்வாக நீதிமன்ற அமைப்புக்களும் கொண்ட நடைமுறை அரசில் 17.05.2009 வரை பாதுகாப்புடன் வாழ்ந்து அதற்கான அனைத்துலக அங்கீகாரத்தை கோரினர். இந்நிலையிலேயே சிறிலங்கா அரசாங்கம் 21ம் நூற்றாண்டின் மிகக்கொடுமையான இனஅழிப்பு மூலம் அந்த நடைமுறை அரசை ஆக்கிரமித்து இன்று வரை படைபலம் கொண்டு ஈழத்தமிழரின் அரசியல் பணிவைப் பெற்று வருகிறது. வடக்கு கிழக்கில் இனஅழிப்புப் படையினரை நிலைப்படுத்தி அவர்களை நிர்வாகிகளாக்குவதன் மூலம் ஈழத்தமிழர்களின் இருப்பையும் அனைத்து வாழ்வியல் வளர்ச்சிகளையும் அழித்தொழித்து, ஈழத்தமிழர்களை அவர்களின் தாயகத்தில் இருந்து வெளியேற வைக்கும், பண்பாட்டு இனஅழிப்புடன் கூடிய இனத்துடைப்பு அரசியலால் ஈழத்தமிழர்களை கண்ணியமற்ற சுதந்திரமற்ற நீதியற்ற வாழ்வை வாழ வைக்கிறது. இதனை முன்னாள் வடமாகாணசபை தலைவர் நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்களின் இவ்வாரப்பேச்சும் உறுதிப்படுத்தியது.
இந்நிலையிலேயே இவ்வாண்டுக்கான அனைத்துலக மனித உரிமைகள் நாளின் “எல்லோருக்குமான கண்ணிய சுதந்திர நீதி வாழ்வை” முன்னெடுத்தல் என்ற உலக அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் ஈழத்தமிழர்களுக்கும் இந்த அழைப்பின் பலன் கிடைக்க ஐக்கிய நாடுகள் சபை தன்னுடைய கடமையைச் செய்ய தாயகத்திலும் உலகின் முக்கிய நாடுகளிலும் வாழும் ஈழத்தமிழர்கள் ஈழத்தமிழர்களுக்கான சிறப்புப் பிரதிநிதி ஒருவரை நியமிக்க பலஸ்தீன மக்களுக்குச் செய்தது போல அனுமதிக்க கோரவேண்டும் என்பது இலக்கின் எண்ணமாக உள்ளது. இதற்கு அனைத்துலக உள்ளக வெளியக தன்னாட்சிச் சட்டங்கள் எவ்வாறு உதவ முடியும் என்பதற்குத் தேசத்தின் குரலாகவே 14.12.2006 இல் காலமாகி இன்றுவரை ஈழமக்கள் அரசியல் ஆலோசகராகவே அவர்கள் சிந்தனையில் பயணித்துக் கொண்டிருக்கும் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் கருத்துக்கள் பலமான வழிகாட்டும் ஆவணமாக உள்ளன. தேசத்தின் குரல் வழியான தேச உருவாக்கமே இன்று ஈழத்தமிழர் அரசியல் உரிமைகளை நிலைநாட்ட ஒரே வழி என்பது இலக்கின் உறுதியான கருத்து.

Tamil News