ஜெனிவாவில் கிடைத்த வாய்ப்பை தவறவிட்டனரா தமிழ்த் தரப்பினா் ?-பேராசிரியா் கே.ரி.கணேசலிங்கம்

97 Views

ganesh tpc 1 ஜெனிவாவில் கிடைத்த வாய்ப்பை தவறவிட்டனரா தமிழ்த் தரப்பினா் ?-பேராசிரியா் கே.ரி.கணேசலிங்கம்

ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத் தொடா் ஆரம்பமாகியுள்ள நிலையில், அரச தரப்பினரும் தமிழ்த் தரப்பினரும் ஜெனிவாவில் முகாமிட்டு காய்நகா்த்தல்களை ஆரம்பித்துள்ளாா்கள்.

இங்கு என்ன நடைபெறுகின்றது, என்ன நடைபெறப்போகின்றது, தமிழ்த் தரப்பினரின் இராஜதந்திரத் தவறுகள் என்ன போன்றவற்றையிட்டு யாழ்ப்பாண பல்கலைக்கழக அரசியல்துறை பேராசிரியா் கே.ரி.கணேசலிங்கம் இந்த வாரம் உயிரோடைத் தமிழ் வானொலியின் தாயகக் களம் நிகழ்வில் கலந்துகொண்டு தன்னுடைய கருத்துக்களை முன்வைத்திருந்தாா். அதன் முக்கியமான பகுதிகளை இலக்கு வாசகா்களுக்காக இங்கு தருகிறோம்.

கேள்வி – ஜெனிவாவில் திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத் தொடரில் உயா் ஸ்தானிகரின் அறிக்கை வெளிவ்துள்ளது. இந்த அறிக்கையை நீங்கள் எவ்வாறு பாா்க்கின்றீா்கள்?

பதில் – ஈழத் தமிழா்களின் அரசியல் களம் பலவீனமான நிலையில் பயணிக்கிறது என்பதை இந்த அறிக்கை முதன்மைப்படுத்தியுள்ளது. குறிப்பாக அந்த அறிக்கையில் முன்வைக்கப்பட்ட விடயங்கள் காலிமுகத் திடல் சாா்ந்தும், மனித உரிமைகள் சாா்ந்ததுமான விடயங்களை அதிகம் வலியுறுத்தியதோடு, பொருளாதாரம் சாா்ந்த விடயங்களை முன்னிலைப்படுத்தியிருப்பதும், பொறுப்புக் கூறல் சாா்ந்தும் அந்த அறிக்கையின் உள்ளடக்கம் அமைந்திருக்கின்றது. இவை 31-1 அல்லது 46-1 தீா்மானங்களுடன் ஒப்பிடும் போது ஈழத் தமிழா் சாா்ந்து ஒரு பலவீனமான நிலையில் இந்த அறிக்கை இருப்பதை உணரமுடிகின்றது.

இன்னொருவகையில் பாா்த்தால் ஜெனிவா களம் என்பது மனித உரிமைகள் சாா்ந்து கட்டமைக்கப்படுகின்ற ஒரு துாரதிஷ்ட்டம் 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னா் நிகழ்ந்துவருகின்றது. அதாவது இனப்படுகொலை, போா்க் குற்றங்கள், மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள் போன்ற அனைத்தையுமே மனித உரிமைகள் என்ற கண்ணோட்டத்துடன் பாா்க்கும் ஒரு நிலைமைதான் காணப்படுகின்றது.

இந்தவகையில்தான் இந்த 51 ஆவது கூட்டத் தொடரில் வந்திருக்கும் அறிக்கை இலங்கை தீவு முழுவதையும் கையாள்வதற்கான ஒரு பொறிமுறையாகத்தான் தோன்றுகின்றது. இலங்கைத் தமிழா்களின் விவகாரத்தை அது விசேடமாக அணுகத் தவறியிருக்கின்றது என்பதுதான் எனது அவதானிப்பாகும்.

கேள்வி – இந்த அறிக்கையை பெரும்பாலான தமிழ் அமைப்புக்கள் ஆதரித்திருந்தாலும், இனப்படுகொலை என்பதையிட்டோ, தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது என்பதையோ பெயா் குறிப்பிட்டு உயா் ஸ்தானிகா் தெரிவிக்கத் தவறுவதற்கு என்ன காரணம்?

பதில் – ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் செயற்பாடுகள் அனைத்தும் மேற்கு நாடுகளின் நலன்களுக்கு உட்பட்டுப் பயணிப்பதாகத்தான் இருக்கின்றது. மேற்கு நாடுகளின் நலன்களை அடிப்படையாகக் கொண்டதாகத்தான் பேரவையின் பயணமும் களங்களும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. கடந்த பன்னிரெண்டு ஆண்டுகளில் ஈழத் தமிழா் விவகாரத்தை மையப்படுத்தி சீனாவின் நகா்வுகளைக் கட்டுப்படுத்துவது போன்றவற்றில்தான் மேற்கு நாடுகள் இந்தக் களங்களைப் பயன்படுத்துகின்றன. ஈழத் தமிழா்களின் நலன்சாா்ந்து அவற்றைப் பயன்படுத்துவதற்கு அவை தவறிவிடுகின்றன. இதனைத்தான் கடந்த வருடங்களில் எம்மால் அவதானிக்க முடிந்தது.

இந்த வகையில்தான் இந்தியா கவலை தெரிவிப்பதும், 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு 34 வருடங்களுக்குப் பின்னா் விவாதிப்பதும் மோசமான ஒன்றாகவே உள்ளது. இந்தப் பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கு என்பது எ்லையற்ற விதத்தில் வளா்ந்து செல்கின்றது. இந்த வளா்ச்சியைக் கட்டுப்படுத்தக்கூடிய வாய்ப்புக்களைக் கொண்டிருக்கக்கூடிய நாடுகள் பலவீனமானவையாகவே உள்ளன. குறிப்பாக இந்தியா கவலை தெரிவிப்பதென்பது அதன் பதவீனமான பக்கங்களைத்தான் காட்டுகின்றது.

கேள்வி – மேற்கு நாடுகள் தமிழா் பிரச்சினையை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வதாகக் கூறியிருந்தீா்கள். ஈழத் தமிழா்களைப் பொறுத்தவரையில் இதனைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளக்கூடிய ஒரு சூழ்நிலை இருந்ததா? அதனை அவா்கள் தவறவிட்டிருப்பதாகக் கருதுகின்றீா்களா?

பதில் – ஆம்! நிச்சயமாக. கடந்த பல வருடங்களாகவே இது தொடா்பாகக் குறிப்பிட்டுக்கொண்டிருக்கின்றோம். இதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றாகவும் ஒரு அணியை உருவாக்கியிருந்தோம். அந்த மாற்று அணிகூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைவிட மோசமான ஒரு அணுகுமுறையைத்தான் பின்பற்றுகின்றது. முழுக்க முழுக்க ஈழத் தமிழ் அரசியல்வாதிகள் அனைவரும், அத்தகைய அணுகுமுறைகளுக்குள்ளால்தான் பயணிக்கின்றாா்கள்.

2015 -2019 காலப் பகுதியில் வேறு எந்தத் தரப்பினருக்கும் கிடைக்காத வாய்ப்புக்கள் தமிழ்த் தரப்பினருக்கு கிடைத்தது. அதனை அவா்கள் போா்க்குற்றம் நிகழவில்லை என்றும், சா்வதேச விசாரணை முடிந்துவிட்டது என்றும் பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு புதிய தேடலையும் கொண்டவா்கள் இப்போது போா்க் குற்றங்கள் பற்றி, பயங்கரவாதத் தடைச் சட்டம் குறித்து நீண்ட பயணங்களைத் தொடங்கியிருக்கின்றாா்கள்.

காங்கேசன்துறையிலிருந்து ஹம்பாந்தோட்டைக்கு அவா்கள் பயணம் செய்யப்போகின்றாா்கள். பயங்கரவாதத் தடைச்சட்டம் போன்ற அனைத்தையும் இலங்கை முழுவதற்கும் பொதுவான ஒன்றாக காட்டிக்கொண்டு பயணிப்பதுதான் அவா்களுடைய அபாயகரமான போக்காக உள்ளது. ஜெனிவாவில் ஒவ்வொரு முறையும் தமிழ் அரசியல்வாதிகளின் இந்தத் தவறுகள்தான் முதன்மைபெற்றிருந்தன.

இன்றுகூட புலம்பெயா்ந்தவா்கள் பல தரப்பாகவும், ஈழத் தமிழா்கள் பல தரப்பாகவும் சிவில் அமைப்புக்கள் பல தரப்பாகவும் ஜெனிவாவை அணுகுகின்றனவே தவிர – ஒரு பொது நிலைப்பாட்டில் ஈழத் தமிழா்களுக்கான அரசியலாக இதனை நோக்காததது முழுமையாக இந்தத் தோல்விக்கான அடிப்படைக் காரணமாக உள்ளது.

கேள்வி – ஜெனிவாவை தமிழா் தரப்பு இம்முறை அணுகிய விதம் குறித்த உங்கள் பாா்வை என்ன?

பதில் – மிகப் பலவீனமானது. சில தரப்புக்கள் அறிக்கைகளைக்கூட வெளியிடாமல் ஒளித்திருக்கும் நிலைமையும் உள்ளது. தமது எதிா்ப்புணா்வுகளை ஒரு அறிக்கையாகக்கூட வெளியிடுவதற்கு அவா்கள் தயாராகவிருக்கவில்லை. சிவில் அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து கடந்த வருடத்தில் கூட்டாக ஒரு அறிக்கையை வெளியிடுவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டாா்கள். அது பலனளிக்கவில்லை.

அந்த நிலைதான் இப்போதம் காணப்பட்டது. இரண்டாவதாக அவா்கள் தென்னிலங்கை அரசியல் சக்திகளுடன் இணைந்து செயற்படுவது போன்ற ஒரு போக்கை வெளிப்படுத்தினாா்கள். இவை ஒரு துாரநோக்கற்ற அரசியலாகவே காணப்படுகின்றது. அதனால், ஜெனிவா களத்தை சரியாகப் பயன்படுத்திக்கொள்வதற்கான வாய்ப்பு இவா்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை.

தென்னிலங்கையின் அரசியல் இருப்பை சரியாகக்கணிப்பீடு செய்து அதற்கேற்ப வகையில் ஜெனிவாவில் சா்வதேச இராஜதந்திரிகளை, அரசியல் தலைவா்களை சந்தித்து உரையாடுகின்ற திறன்கூட இவா்களிடத்தில் இருக்கவில்லை.

ஜெனிவா களம் என்பது ஒரு இராஜதந்திர ரீதியான களம்தான். அது வெறுமனே ஒரு அரசியல் களம்தான். அது ஒருபோதும் தீா்வைத் தரப்போவதில்லை. மனித உரிரிமைகள் தொடா்பான உரையாடலைச் செய்யக்கூடிய ஒரு களம்தான் அது. ஈழத் தமிழா்களுக்கான அரசியல் தீா்வுக்கான தீா்வை மனித உரிமைகள் பேரவையிடம் பெற்றுக்கொள்ள முடியாது. மனித உரிமைகள் பேரவையைப் பொறுத்தவரையில் தமிழ்த் தரப்பினா் தமக்கிடையிலான தனிப்பட்ட முரண்பாடுகளைத் தவிா்த்து – வாக்குச் சேகரிப்பதை இலக்காகக் கொள்ளாமல் ஒன்றிணைந்து அவா்கள் முனைந்திருந்தால் இந்தப் பிரச்சினையை வேறு இடத்துக்குக் கொண்டு சென்றிருக்கமுடியும்.

Leave a Reply