அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் ஸ்காட் மாரிசன் ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் அவர் கடைபிடித்த கடுமையான கொள்கையினால், பிரியா- நடேசலிங்கம் எனும் தமிழ் அகதி குடும்பம் சுமார் 4 ஆண்டுகள் தனிமையான தடுப்பு முகாமில் சிறைப்பட்டு கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
சமீபத்தில் அவுஸ்திரேலியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தொழிற்கட்சி தலைமையில் புதிய அரசாங்கம் அமைந்துள்ள நிலையில், இக்குடும்பத்திற்கு இணைப்பு விசாக்கள் வழங்கப்பட்டு முன்பு வாழ்ந்த பிலோலா நகரில் வாழ அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், பிலோலா நகருக்கு திரும்பிய பின்னர் வழங்கிய முதல் தொலைக்காட்சி பேட்டியில், அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் ஸ்காட் மாரிசனுக்கும் முன்னாள் குடிவரவுத்துறை அமைச்சர் பீட்டர் டட்டனுக்கும் ஒரு செய்தியை பிரியா தெரிவித்திருக்கிறார்.
“அவர்களது வாழ்க்கை ஒரு நல்ல வாழ்க்கையாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்,” என்பதே பிரியா தெரிவித்த செய்தி.
அதற்கு, “நீங்கள் ஸ்காட் மாரிசன் மற்றும் பீட்டர் டட்டனுக்கு ஒரு நல்ல வாழ்க்கை வேண்டும் என்று விரும்புகிறீர்களா?” என நெறியாளர் லிசா வில்கின்சன் எழுப்பிய கேள்விக்கு “ஆமாம், ஒரு நல்ல வாழ்க்கை,” என தமிழ் அகதியான பிரியா பதிலளித்திருக்கிறார்.
இவர்களது விடுதலைக்காக செயல்பட்ட அவுஸ்திரேலியரான ஏஞ்சலா ஃபிரடெரிக்ஸ்,“நாங்கள் பிரியா மற்றும் நடேசலிங்கத்தை மக்களாக தான் பார்த்தோம், இவர்கள் அகதிகள் கிடையாது, இவர்கள் எங்களில் ஒருவர்,” எனத் தெரிவித்திருக்கிறார்.
இந்த குடும்பத்தினரை நான்காண்டு காலம் சிறை வைத்திருப்பதற்காக 30 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்களை அவுஸ்திரேலிய அரசு செலவழித்திருக்கிறது.
கடந்த 2012 யில் படகு வழியாக இலங்கையிலிருந்து வெளியேறி அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்திருந்த நடேசலிங்கமும், 2013 யில் தஞ்சமடைந்திருந்த பிரியாவும் அவுஸ்திரேலியாவில் சந்தித்த பின் திருமணம் செய்து கொண்டனர். தஞ்சக்கோரிக்கையாளர்களான இவர்களுக்கு அவுஸ்திரேலியாவிலேயே இரு பெண் குழந்தைகள் (கோபிகா, தருணிகா) பிறந்தன.
அவுஸ்திரேலியாவின் பிலோலா நகரில் வசித்து வந்த இவர்களின் விசா, கடந்த மார்ச் 2018 ல் காலாவதியாகியதாக கைது செய்யப்பட்டு மெல்பேர்ன் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டனர். பின்னர், இவர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட இருந்த சூழலில் அம்முயற்சி கடைசி நிமிட நீதிமன்ற தலையீட்டால் தடுத்து நிறுத்தப்பட்டது. அதன் பின் இவர்களை கிறிஸ்துமஸ் தீவுக்கு கொண்டு சென்றது அவுஸ்திரேலிய அரசு.
கிறிஸ்துமஸ் தீவு தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த போது இவர்களது இரண்டாவது குழந்தையான தருணிகாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், இக்குடும்பத்தினர் அவுஸ்திரேலியாவுக்கு கொண்டு வரப்பட்டனர். பின்னர், கடந்தாண்டு முதல் பெர்த் நகரில் சமூகத் தடுப்பில் இக்குடும்பம் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே தற்போது இவர்கள் பிலோலா பகுதியில் வாழ அவுஸ்திரேலியாவின் தொழிற்கட்சி அரசாங்கம் அனுமதித்திருக்கிறது.