பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பாராளுமன்றில் நேற்று வெளியிட்ட கருத்துக்கு பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி தமது கண்டனத்தை வெளியிட்டார். நேற்றைய தினம் (05) சிறப்புரிமை கேள்வியை எழுப்பிய பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, ‘சபாநாயகரும், பாராளுமன்ற நிர்வாகமும் வெட்கமடைய வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் இன்றைய தினம் (06) பாராளுமன்றில் கருத்துரைத்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, ‘ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட வேண்டும்’ என்று வலியுறுத்தினார்.
இதன்போது குறுக்கிட்ட பிரதி சபாநாயகரை தமது உரையில் ‘பாய வேண்டாம்’ என்று எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தார். இதனையடுத்து எழுந்த சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க, ‘பாராளுமன்றில் சபாநாயகருக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும்’ என்றும், ‘எதிர்க்கட்சி தலைவர் பிரயோகித்த வார்த்தையை மீளப் பெறவேண்டும்’ என்றும் குறிப்பிட்டார். இதனையடுத்து கருத்துரைத்த பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி, ‘தமக்கு மதிப்பளிக்காவிட்டாலும் சபாநாயகரின் ஆசனத்துக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும்’ என்று தெரிவித்தார்.
‘இன்று (06) எதிர்க்கட்சித் தலைவர் வெளியிட்ட கருத்தும் நேற்றைய தினம் (05) பாராளுமன்றில் இராமநாதன் அர்ச்சுனா முன்வைத்த கருத்தும், சபாநாயகரை அவமதிக்கும் வகையில் அமைந்திருந்தது’ என்று தெரிவித்தார். இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கருத்துரைக்க முற்பட்ட நிலையில் அவரை அமரும்படியும் சபையின் கௌரவத்தை பேணுமாறும் பிரதி சபாநாயகர் வலியுறுத்தினார்.
எனினும் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தொடர்ந்து கருத்துரைக்க முற்பட்ட நிலையில், அவருக்கு எதிர்ப்பை வெளியிட்ட பிரதி சபாநாயகர், ‘இந்த நிலை தொடர்ந்தால் அவரை பாராளுமன்றில் இருந்து வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று எச்சரித்தார். இதனையடுத்து கருத்துரைத்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ‘தாம் முன்வைத்த கருத்து சபாநாயகரை அவமதித்திருக்குமாயின் அதனை மீளப் பெறுவதாக’ தெரிவித்தார்.