வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது போராட்டத்திற்கு ஜனநாயக போராளிகள் கட்சி ஆதரவு!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் மேற்கொள்ளப்படுகின்ற மாநாட்டிற்கு ஜனநாயக போராளிகள் கட்சி பூரண ஆதரவு வழங்கவுள்ளதாக அதன் தலைவர் சி.வேந்தன் தெரிவித்துள்ளார்.

அவர் வடமராட்சியில் நடாத்திய ஊடாக சந்திப்பின்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ‘வலிந்து காணாமல் ஆகப்பட்ட உறவுகள் சங்கத்தினரால் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை செல்வநாயகம் அரங்கில் மாபெரும் போராட்டம் ஒன்றினை நடாத்துவதற்குரிய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

அவர்களால் அரசியல் கட்சிகள் பொது அமைப்புகள் நிறுவனங்களுக்கும் கலந்து கொள்வதற்கான அழைப்பும் ஆதரவுகோரியும் ஊடக சந்திப்பு ஒன்று நடாத்தப்பட்டிருக்கின்றது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவு நடாத்துகின்ற அந்தப் போராட்டத்திற்கு ஜனநாயக போராளிகள் கட்சி பூரண ஆதரவை வழங்குவதாக தீர்மானித்திருக்கிறோம்’ என்று அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.

யுத்தம் முடிந்து 17 வருடங்கள் கடந்துவிட்டன. ஆனால் பல நூற்றுக்கணக்கான இளைஞர்கள், யுவதிகள் காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள். அதேபோல் பெற்றோர்களும் தங்களுடைய பிள்ளைகளை இராணுவத்தினரிடம் ஒப்படைத்திருக்கிறார்கள்.

பல பெண்கள் தங்களுடைய கணவர்களை இராணுவத்திடம் ஒப்படைத்திருக்கிறார்கள். இவ்வாறு ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக அந்த உறவுகள் 10 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறுபட்ட போராட்டங்களை நடாத்திக் கொண்டிருக்கின்றார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் எதிர்வரும் 30 ஆம் திகதி ஒரு வித்தியாசமான போராட்டத்தை முன்னெடுக்கவிருக்கிறார்கள். அந்த போராட்டத்தில் அந்த மாநாட்டில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் சி.வேந்தன் கோரியுள்ளார்.