அமெரிக்க டொலரை செலுத்துவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக மூன்று எரிபொருள் தாங்கிகள் சர்வதேச கடற்பரப்பில் நிறுத்தப்பட்டுள்ளதாக எரிபொருள் துறைமுக மின்சார தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
எட்டு நாள் காலப்பகுதிக்கு மேலதிகமாக கப்பல் தரையிறக்கும் திகதி வரையில் பெரும் தொகையான டொலரை தாமதக் கட்டணமாக செலுத்த வேண்டியுள்ளதாக அதன் பேச்சாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.
இந்திய கடன் வசதியின் கீழ் வழங்கப்படும் கடைசி எரிபொருள் தாங்கி தற்போது இலங்கைக்கு வந்துள்ளதாக தெரிவித்த அவர், அதற்கான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படாததால் இந்திய கடன் வசதியின் கீழ் இரண்டாவது கடனாக 500 மில்லியன் அமெரிக்க டொலர் எரிபொருள் கப்பலை பெற்றுக்கொள்ளும் திகதியை குறிப்பிட முடியாது என்றார்.
இந்த நிலை குறித்த நெருக்கடி எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய சந்தை விலையை விட குறைந்த பட்சம் 20% குறைவான விலையில் ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் மற்றும் மசகு எண்ணெயை பெற்றுக்கொள்ளும் திறன் இலங்கைக்கு இருந்த போதிலும், இலங்கை அதிகாரிகள் அதனை மீறிச் செயற்படுவதாகவும் ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலையில் எரிபொருளை கொள்வனவு செய்து அதே எரிபொருளை இந்தியா இலங்கைக்கு அதிக விலைக்கு வழங்கவுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.



