காணாமல் ஆக்கப்பட்ட மகனின் விடுதலைக்காகப் போராடி வந்த தந்தை மரணம்

சிறீலங்கா அரச படைகளால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பில் உறுப்பினராக இணைந்து, தனது மகனைத் தேடி வந்த  தந்தை ஒருவர்  சுகயீனம் காரணமாக மரணமடைந்துள்ளார் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்வர்களின் உறவினர்கள் அமைப்பின் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பணிப்பாளர் திருமதி பத்மநாதன் கருணாவதி தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த செய்திக் குறிப்பிலேயே அவர் இந்தத் தகவலைத்  தெரிவித்துள்ளார்.

அந்த செய்திக் குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

கிளிநொச்சி பரந்தன்  11ஆம் ஒழுங்கையைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான சின்னத்தம்பி இராசரத்தினம் என்பவரே சுகயீனம் காரணமாக 09-07-21அன்று சாவடைந்துள்ளார்.

காலமாகிய இராசரத்தினத்தின் மகன் கேதீஸ்வரன் என்பவர்  கடந்த 1995ஆம் ஆண்டு   இராணுவத்தினராலும், அதன் துணை இராணுவக் குழுக்களினாலும் யாழில் வைத்து கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைக் கண்டறிய  சர்வதேச நீதி விசாரணையை வலியுறுத்தி  கடந்த  2012ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப் பட்ட போராட்டங்களில் தொடர்ந்து அவர்  ஈடுபட்டு வந்திருந்தார். ஆனால் தனது செல்ல மகனைக் காண முடியாத நிலையில் இந்த அன்புத் தந்தை  சாவடைந்துள்ளார்.

நீதி வேண்டிய போராட்டத்தில் பல நூற்றுக் கணக்கான தாய்மார்கள், தந்தையர்கள், சகோதரர்கள் ஈடுபட்டு வந்த நிலையில், இதுவரை தங்கள் உறவுகளைக் காண முடியாமல்   வடக்கு, கிழக்கில் சுமார் 213 உறவினர்கள் காலமாகியுள்ளனர்.

இலக்கு இந்த வார மின்னிதழ் 138

ilakku Weekly Epaper 138 July 11 2021 e1626027838912 காணாமல் ஆக்கப்பட்ட மகனின் விடுதலைக்காகப் போராடி வந்த தந்தை மரணம்