கடந்த செவ்வாய்க்கிழமை (6) உக்ரைனின் கேர்சன் பகுதியில் நீர்மின்சாரத்திற்காக கட்டப்பட்ட மிகப்பெரும் அணை தகர்க்கப்பட்டதால் 5 இலட்சம் ஹெக்டயர் பரப்பளவுள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த அனர்த்த்தின் சேதத்தை உலக வங்கி மதிப்பிடுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த அணையின் அழிவு சூழலியல் ரீதியாகவும், அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்திலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என உலக வங்கியின் நிர்வாகப் பணிப்பாளர் அர்னா பேர்டே தெரிவித்துள்ளார்.
இந்த அணையின் தகர்ப்பு தொடர்பில் ரஸ்யாவும், உக்ரைனும் ஒருவரை ஒருவர் குற்றம்சுமத்தி வருகின்றனர். கடந்த வருடம் இந்த அணையினை உக்ரைன் படையினர் தகர்க்கப்போவதாக தெரிவித்த ரஸ்யா அதனால் ஏற்படும் அழிவில் இருந்து தமது படையினரை பாதுகாக்கும் நோக்கத்துடன் 30,000 படையினரை அங்கிருந்து வெளியேற்றியிருந்தது.
அணையின் ஒரு புறம் ரஸ்யா படையினரும் மறுபுறம் உக்ரைன் படையினரும் நிலைகொண்டிருந்ததுடன், அங்கு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் இரு தரப்பும் புதைத்துவைத்த கண்ணிவெடிகள் நீருடன் அடித்து சென்றுள்ளதால் பாரிய அனர்த்தம் ஏற்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
அதேசமயம், பல பத்தாயிரம் மக்கள் குடிநீர் வசதிகள் இன்றி அல்லல்படுவதாகவும், இரு தரப்பும் பல ஆயிரம் மக்களை அங்கிருந்து வெளியேற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஏற்கனவே உக்ரைனில் ஏற்பட்ட அழிவுகளை மீள்புனரமைப்பு செய்ய 411 பில்லியன் டொலர்கள் செலவாகும் என கணிக்கப்பட்டிருந்தபோதும், தற்போதைய புதிய அழிவு அதனை மேலும் அதிகரிக்கும் என பேர்டே மேலும் தெரிவித்துள்ளார்