இலங்கையின் கடல் எல்லையிலிருந்து சுமார் 26 கடல் மைல் தொலைவில், சர்வதேசக் கடற்பரப்பில் நிறுத்தப்பட்டிருந்த ஈரானிய வர்த்தகக் கப்பல்களில் இருந்த சுமார் 40 கடற்பணியாளர்களை, சுகாதார அவசர நிலை காரணமாக காலி துறைமுகம் ஊடாகக் கரைக்கு அழைத்து வருவதற்கு அதிகாரிகள் மனிதாபிமான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த கடற்பணியாளர்களின் சுகாதார நிலை தொடர்பாகக் கிடைத்த அவசரத் தகவல்களின் அடிப்படையில், கொழும்பிலுள்ள ஈரான் தூதரகத்தின் முழுமையான ஒருங்கிணைப்பு மற்றும் வசதியளிப்பின் கீழ் இந்த நடவடிக்கை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கரைக்கு அழைத்து வரப்பட்ட ஈரானிய கடற்பணியாளர்களுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்ட பின்னர், அவர்கள் அனைவரும் மீண்டும் ஈரானுக்குப் புறப்பட்டுச் சென்றதாக வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் துஷார ரொட்ரிகோ தெரிவித்துள்ளார்.
குறித்த ஈரானிய கப்பலுக்கு உதவிகளை வழங்கும் விடயத்தில் இலங்கையின் மீது அமெரிக்காவின் அழுத்தம் காணப்பட்டதாக முன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
அத்துடன் இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையிலான கருத்துக்களையும் அரசாங்கம் வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



