கொழும்புத் துறைமுகத்தை மையப்படுத்திய முக்கோண இராஜதந்திரப் போட்டி : விதுரன்

இந்தியப் பெருங்கடலின் மிக முக்கிய மூலோபாயக் கடல்சார் மையமாகத் திகழும் கொழும்புத் துறைமுகம், தற்காலத்தில் உலக வல்லரசுகளின் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் போட்டிக்களமாக உருவெடுத்துள்ளது.
அண்மையக் காலத்தில் கொழும்புத் துறைமுகத் தைச் சுற்றி நிகழ்ந்துள்ள மூன்று முக்கிய அபிவிருத்திகள்—சீன மேர்ச்சன்ட்ஸ் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் வெளியேற்றம், அமெரிக்காவின் 17மில்லியன் டொலர் டிஜிட்டல் தொழில்நுட்ப மானியம், மற்றும் சீன வங்கியின் கொழும்பு கிளையின் யுவான் தீர்வு வங்கி சேவை—இலங்கையின் வெளியுறவுக் கொள்கைக்கும் சர்வதேச வர்த்தகத்திற்கும் பாரிய இராஜதந்திரச் சவால்களையும் வாய்ப்புகளையும் ஒருங்கே தோற்றுவித்துள்ளன.
2022ஆம் ஆண்டின் நசுக்கும் பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் இலங்கையில் அறிவிக்கப்பட்ட மிகப்பெரிய வெளிநாட்டு நேரடி முதலீட்டுத் திட்டமாகத் திகழ்ந்தது ‘தெற்காசிய வணிக மற்றும் தளபாட மையம்’ (South Asia Commercial and Logistics Hub). சுமார் 280மில்லியன் முதல் 392மில்லியன் அமெரிக்க டொலர் வரையிலான முதலீட்டில், 50 ஆண்டுகால கட்டியெழுப்பி-இயக்கி-மாற்றித் தரும் ஒப்பந்த அடிப்படையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டிருந்தது.
இதில் சீன மேர்ச்சன்ட்ஸ் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனம் 70 சதவீதப் பங்குகளையும், இலங்கை துறைமுக அதிகாரசபை மற்றும் அக்சஸ் இஞ்ஜினியரிங் ஆகியன தலா 15 சதவீதப் பங்குகளையும் கொண்டிருந்தன.
கொழும்புத் துறைமுகத்தின் மையப்பகுதியில் 150,000 சதுர மீற்றர் பரப்பளவில், 8 மாடிகளைக் கொண்ட அதிநவீன சேமிப்பக வளாகமாக உருவெடுக்கவிருந்த இத்திட்டம், குறைந்தபட்சம் 1,800 நேரடி வேலைவாய்ப்பு களையும் 10,500 மறைமுக வேலைவாய்ப்பு களையும் உரு வாக்குமென எதிர்பார்க்கப்பட்டது.
இருப்பினும், நிலக்கையகப்படுத்துதலில் நிலவிய சட்டச் சிக்கல்கள், எல்லைப் பிரச்சினைகள் மற்றும் கொழும்புத் துறைமுக நுழைவு மேம்பால அதிவேக நெடுஞ் சாலைக் கட்டுமானத் தாமதங்கள் காரணமாக இத்திட்டம் முடங்கியது.
இதன் விளைவாக, சீன நிறுவனம் இத் திட்டத்திலிருந்து முழுமையாக விலகியுள்ளதுடன், ஒப்பந்த விதிமுறைகளின்படி இலங்கை துறைமுக அதிகாரசபை 21.9 மில்லியன் அமெரிக்க டொலரை 30 நாட்களுக்குள் இழப்பீடாக வழங்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே 2015இல் துறைமுக நகரத் திட்ட இடை நிறுத்தத்திற்காக 143 மில்லியன் டொலர் இழப்பீட்டுக் கோரிக்கைக்குப் பதிலாக 110 ஹெக்ரெயர் நிலத்தை 99 ஆண்டுகால குத்தகைக்கு வழங்கியமையும், 2021இல் தரமற்ற இயற்கை உரப் பிரச்சினையில் 6.9மில்லியன் டொலரை இழப்பீடாக அளித்தமையையும் தொடர்ந்து, சீன நிறுவனமொன்றிற்கு இலங்கை அரசாங்கம் இழப்பீடு வழங்கும் மூன்றாவது நிகழ்வாக இது பதிவாகியுள்ளது.
சர்வதேச முதலீட்டாளர்கள் மத்தியில் நாட்டின் உள்கட்டமைப்பு மற்றும் ஒழுங்குமுறைச் சூழல் மீதான நம்பிக்கையைக் குலைக்கும் இந்த நிகழ்வு, அரசாங்கத்தின் அந்நியச் செலாவணி கையிருப்புக்கும் பெரும் நெருக் கடியை ஏற்படுத்தியுள்ளது.
சீன நிறுவனம் வெளியேறிய அதேதருணத்தில், கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் அமைப்புகளை நவீனமயமாக்குவதற்காக அமெரிக்கா 17மில்லியன் அமெரிக்க டொலர் மானியத்தை அறிவித்துள்ளமை குறிப் பிடத்தக்க இராஜதந்திரத் திருப்பமாகும்.
அமெரிக்கத் தூதர் எரிக் ஸ்டெர்ன் மேயர் அறிவித்துள்ள இந்த நிதியுதவி, இலங்கையின் கடல்சார் ஒற்றைச் சாளரம் (Maritime Single Window) மற்றும் துறைமுக சமூக அமைப்பை (Port Community System) நவீனமாக்குவதை நோக்க மாகக் கொண்டுள்ளது.
துறைமுக அதிகாரசபை, சுங்கம், கப்பல் நிறு வனங்கள் மற்றும் முனைய செயல்பாட்டாளர்களை ஒரே டிஜிட்டல் வலையமைப்பில் இணைப்பதன் மூலம் ஆவணக் கையாளுதல் தாமதங்களைக் குறைத்து, விநியோகச் சங்கிலியைப் பாதுகாப்பதே அமெரிக்காவின் முதன்மை இலக்காகும்.
இந்த நகர்வை வெறும் தொழில்நுட்ப உதவி யாக மட்டும் சுருக்கிப் பார்க்க முடியாது. கொழும்புத் துறைமுகத்தின் உள்கட்டமைப்பில் சீனாவின் ஆதிக்கத் தைக் கட்டுப்படுத்தவும், இந்தியப் பெருங்கடலின் வர்த்தகப் பாதைகளில் தன் பிடியை உறுதிப்படுத்தவும் அமெரிக்கா டிஜிட்டல் இராஜதந்திரத்தைக் கையாளுவதை இது வெளிப்படுத்துகிறது.
சீனா உள்கட்டமைப்பு சார்ந்த முதலீடுகளில் கவனம் செலுத்தும் அதேவேளையில், அமெரிக்கா தரவு முகாமை மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பைத் தன் வசப்படுத்துவதன் மூலம் கொழும்புத்துறைமுகத்தின் செயற்பாட்டு நெறி முறைகளில் தனது செல்வாக்கைச் செலுத்துவதற்கு திட்டமிட்டுள்ளது.
சீன நிறுவனத்தின் வெளியேற்றம் கொழும்புத் துறைமுகத்தை ஒரு முழுமையான ‘மதிப்புக்கூட்டு தளவாட மையம் (Value-added Logistics Center – VAL) மாற்றுவதைத் தாமதப் படுத்தியுள்ளது.
இந்த இடைவெளி பிராந்தியக் கடல்சார் வர்த்த கத்தில் இந்தியாவின் நிலையை பலப்படுத்த வாய்ப் பளித்துள்ளது. தற்போது இந்தியாவின் கடல்சார் சரக்குக் கையாளுகையில் சுமார் 60 முதல் 70சதவீதம் கொழும்புத் துறைமுகம் வழியாகவே மீள்விநியோகம் செய்யப்படுகிறது.
தற்போது இந்தியா, கேரளாவின் விழிஞ்ஞம் சர்வதேச ஆழ்கடல் துறைமுகம் மற்றும் அந்தமான் நிக்கோபாரின் கலாத்தியா குடா ஆகிய பகுதிகளில் பாரிய கொள்கலன் மாற்று முனையங்களை வேகமாக உருவாக்கி வருகிறது.
கொழும்புத் துறைமுகத்தில் ஏற்பட்டுள்ள உள்கட்ட மைப்புத் தொய்வு, சர்வதேசக் கப்பல் நிறுவனங்களை இந்தியாவின் புதிய துறைமுகங்களை நோக்கி ஈர்க்கும் சூழலை உருவாக்கியுள்ளது.
மேலும், திறந்த போட்டி ஏலம் மூலம் இத்திட்டத்திற்கு புதிய முதலீட்டாளர்களை ஈர்க்க இலங்கை அரசு முயலும் நிலையில், ஏற்கனவே மேற்கு கொள்கலன் முனையத்தை உருவாக்கி வரும் இந்தியாவின் அதானி குழுமம் அல்லது இந்திய சார்பு சர்வதேசக் கூட்டணிகள் இத்திட்டத்தைக் கைப்பற்ற அதிக வாய்ப்புகள் உள்ளன.
இது கொழும்புத் துறைமுகத்தில் சீனாவின் ஆதிக்கத்தைக் குறைத்து, இந்தியாவின் வர்த்தக மற்றும் மூலோபாயச் செல்வாக்கை அதிகரிக்கும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. நிதித்துறையைப் பொறுத்தவரை, சீன வங்கியின் கொழும்பு கிளை இலங்கையின் முதலாவது ‘யுவான் தீர்வு வங்கியாக’ செயற்படத் தொடங்கியுள்ளமை மற்றொரு பிரதான மைல்கல்லாகும். உலகளவில் அமெரிக்க டொலரின் ஆதிக்கத்தைக் குறைத்து, தனது மாற்று நிதி அமைப்பை வலுப்படுத்தும் சீனாவின் நீண்டகால உலகளாவிய உத்தியின் ஒரு பகுதியாகவே அதனை பார்க்க வேண்டியுள்ளது.
பொருளாதார ரீதியாக, இலங்கை இறக்குமதி யாளர்கள் டொலருக்கு மாறாமல் நேரடியாக யுவானில் வர்த்தகம் செய்வதால் இடைத்தரகு வங்கிக் கட்டணங்கள் குறையும். மேலும், கடுமையான டொலர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் இலங்கைக்கு, சீனாவுடனான வர்த்த கத்திற்கு டொலரைச் சார்ந்திருக்கும் நிலையைக் குறைத்து, மத்திய வங்கியின் அந்நியச் செலாவணி கையிருப்பைப் பாதுகாக்கும் வாய்ப்பை இது அளிக்கிறது. கொழும்பு துறைமுக நகரம் போன்ற சிறப்பு பொருளாதார வலயங்களில் சீன முதலீடுகளை நேரடியாக ஈர்க்கவும் இது உதவும்.
இருப்பினும், நடைமுறை ரீதியாக பல தடைகள் நிலவுகின்றன. பல தசாப்தங்களாக டொலர் வர்த்தகத்திற்கே பழகிப்போன இலங்கை வர்த்தகர்கள் மத்தியில் யுவானின் பயன்பாடு குறித்த தயக்கம் உள்ளது.
யுவானில் ஈட்டப்படும் வருவாயைக் கொண்டு சீனாவிலிருந்து மட்டுமே இறக்குமதி செய்ய முடியும் என்பதால், உலகளாவிய ரீதியில் யுவானை சுதந்திரமாகப் பயன்படுத்த முடியாது.
மேலும், சந்தை விதிகளுக்கு உட்பட்டு இயங்கும் டொலரைப் போலன்றி, சீன மத்திய வங்கியின் கடுமையான கொள்கைக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட யுவானின் மதிப்பு மாறுபாடுகள் குறித்தும் வர்த்தகர்கள் அச்சம் கொள்கின்றனர்.
இவ்வாறான நிலையில், கொழும்புத் துறைமுகத்தை மையமாகக் கொண்டு அரங்கேறும் இந்த நிகழ்வுகள், இலங்கை உலகளாவிய வல்லரசுகளின் புவிசார் வர்த்தகப் போட்டியில் எந்தளவுக்குச் சிக்கியுள்ளது என்பதைப் புலப்படுத்துகின்றன. ஒருபுறம் சீன முதலீடுகளின் வெளியேற்றமும் இழப்பீட்டு அழுத்தங்களும் நாட்டின் பொருளாதாரத்தை அச்சுறுத்தும் வேளையில், மறுபுறம் அமெரிக்கா மற்றும் இந்தியாவின் மூலோபாய நகர்வு கள் இலங்கையின் வெளியுறவுக் சமநிலையைச் பரி சோதிக்கின்றன.
சீனா, அமெரிக்கா, இந்தியா ஆகிய முத்தரப்பு வல்லரசுகளின் நலன்களையும் திறம்படக் கையாண்டு, நாட்டின் இறையாண்மைக்கும் பொருளாதார மேம் பாட்டிற்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் நடுநிலையான, சாணக்கியமிக்க இராஜதந்திரக் கொள்கையைப் பேணு வதே அநுர அரசாங்கத்தின் முன்னுள்ள முதன்மைச் சவாலாகும்.