இயற்கை எரிவாயுவின் உதவியுடன் சமையல் -ஹஸ்பர் ஏ ஹலீம்

IMG 20220715 WA0006 இயற்கை எரிவாயுவின் உதவியுடன் சமையல் -ஹஸ்பர் ஏ ஹலீம்

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பல்வேறு பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதனை யாவரும் அறிவோம். அந்த வகையில் இந்த தருணத்தில் தனது வீட்டில் வளர்க்கும் பசு மாடுகளின் கழிவு மூலமாக இயற்கை எரிவாயுவினைத் தயாரித்து வருபவரே எச்.ஏ.கிரிபண்டா. இவர் திரிகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கல்மெடியாவ தெற்கு கிராம சேவகர் பிரிவில் வசித்து வருகிறார்.

வீட்டில் வளர்த்து வரும் மாடுகளின் ஊடாகக் கிடைக்கப் பெறும் சாணம் போன்ற கழிவுகளைப் பயன்படுத்தி இயற்கை எரிவாயுவைத் தன்னகத்தே உற்பத்தி செய்து வீட்டுப் பாவனைக்காக பயன்படுத்தி வருகின்றார். இதனால் அவரது அன்றாட வீட்டுத் தேவைகளான சமையல், மின் விளக்கு போன்ற தேவைகளையும் இதன் ஊடாகப் பூர்த்தி செய்வதாகத் தெரிவிக்கிறார்.

தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டுதல்களுக்கு இணங்க 2006, 2007ம் ஆண்டு காலப் பகுயியில் சமுர்த்தி வாழ்வாதார அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக குறித்த நபருக்கு பசு மாடுகள் வழங்கப்பட்டிருந்தன. இதன் ஊடாக மாடுகளை வளர்த்து, பால் உற்பத்தியிலும் தொடர்ந்தும் முன்னேற்றம் கண்டதுடன் இவ்வாறான முயற்சிகளை மேற்கொண்டு மாடுகளின் கழிவுகளைக் கொண்டும் மேலதிகமாகப் பயனடைந்து வருகிறார். 2013 ம் ஆண்டு தொடக்கம் இயற்கை எரிவாயுவினை இவர் உற்பத்தி செய்து வருகின்றார். மலம் சாணம் போன்ற கழிவுகளைச் சேமிக்க மாட்டு பண்ணையில் இருந்து கிணறு போன்ற குழி வகையினை உருவாக்கி, அதன் ஊடாக இந்த பயனைப் பெற்று வருகின்றார். கண்டி, குண்டசாலை விவசாயக் கல்லூரியில் இதற்கான ஆரம்ப கட்டப் பயிற்சியை பெற்ற இப் பண்ணையாளர் இது தொடர்பில் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

IMG 20220715 WA0009 இயற்கை எரிவாயுவின் உதவியுடன் சமையல் -ஹஸ்பர் ஏ ஹலீம்

தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக எரிவாயு தட்டுப்பாடு நிலவுகிறது. இதனை தீர்க்க வேண்டும்.  இதற்காக ஒரு வீட்டில் இரண்டு மாடுகள் இருந்தால் ஒரு குடும்பத்துக்கு தினமும் போதுமான இயற்கை எரிவாயுவினை உற்பத்தி செய்து, வீட்டுச் சமையல் உட்பட வெளிச்சத்தையும் பெற்றுக்கொள்ளலாம். இதற்காக அனைவரும் முயற்சி செய்யுங்கள். வெளிநாட்டில் இருந்து எரிவாயு வரும் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் கிடையாது. நீண்ட வரிசை தேவையில்லை. தங்களைத் தாங்களே உற்பத்தி செய்து கொள்ளலாம். இதனை வைத்தே நான் எனது வீட்டில் சமையல் மற்றும் மின் விளக்கு (பெற்றோல் மாக்ஸ்) போன்று ஒளிரச் செய்து வருகின்றேன். இதன் ஊடாக எரிவாயு கொள்வனவு செய்யும் பணம் மிச்சமாகின்றது. இந்தப் பணம் வெளிநாடுகளுக்கே செல்கிறது. இதனைத் தவிர்த்து நாமே உற்பத்தி செய்தால், பொருளாதார நெருக்கடிக்கும் எரிவாயுப் பிரச்சினைக்கும் தீர்வு காண முடியும் என்றார்.

இவ்வாறான இயற்கை எரிவாயுவை பல மடங்கு கொண்ட உற்பத்தியாக அதிகரிப்பதாக இருந்தால், வாயுவை அடைத்துக் கொள்ளக்கூடிய கொள்கலன்கள் தேவைப்படுகின்றன. இதன் மூலம் உற்பத்தி செய்தால் ஏற்றுமதியை கூட அதிகரித்து வருமானம் ஈட்டலாம். குறிப்பாக இவ்வகையான திட்டங்களை மேற்கொள்ள சுயதொழில் முயற்சிகளில் திறம்படப் பயிற்சியளித்து உள்வாங்கினா.   தற்போதைய எரிவாயுப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும். வெளிநாடுகளில் இருந்து வரும் வரைக்கும் எரிவாயுவைப் பெற நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.

பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கப் பல்வேறு புதிய உத்திகளை நாம் கையாள வேண்டும். நாட்டில் உற்பத்தியை அதிகரிக்க வேண்டியுள்ளது. இதனால் தான் உணவுப் பஞ்சத்தைத் தீர்க்க முடியும். இவ்வாறான விடயங்கள் அரச மட்டம் ஊடாக நடை முறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு கட்டமாக தம்பலகாமம் பிரதேசச் செயலக சமுர்த்தி நிதி ஊடான கடன் திட்டம் மூலமாக வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. குறித்த பிரதேசத்தில் இயற்கை எரிவாயு உற்பத்தியினை பார்வையிடுவதற்காக அண்மையில் தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெயகௌரி ஸ்ரீபதி, உதவிப் பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், சமுர்த்தி தலைமை முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சித்திக் உள்ளிட்ட குழுவினர் விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். அது தொடர்பிலும் இதன் போது கேட்டறிந்து இயற்கை எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க ஊக்குவிப்பு முயற்சியினையும் மேற்கொண்டனர்.

தற்போதைய நெருக்கடி நிலைமை தொடருமானால், நாடு பல இடர்பாடுகளைச் சந்திக்க நேரிடும். 12.5 கிலோ கிராம் எடை கொண்ட சமையல் எரிவாயுவின் விலை 5142.00 ரூபாவாக காணப்படுகிறது. இவ்வாறான செலவுகளைக் குறைக்கவும் நீண்ட வரிசையில் காத்திருப்பதைத் தவிர்க்கவும் வீட்டில் இவ்வாறான சுய உற்பத்திகளை மேற்கொண்டால் பணத்தையும் மீதமாக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

IMG 20220715 WA0005 இயற்கை எரிவாயுவின் உதவியுடன் சமையல் -ஹஸ்பர் ஏ ஹலீம்

சமையல் எரிவாயு மட்டுமல்லாது இயற்கை எரிவாயு ஊடாகவும் அதனால் சேமிக்கப்படும் வாயு மூலமாகவும் மின் விளக்கு ஒளிர்வது போன்று காற்றமுக்கம் காரணமாக பெற்றோல் மாக்ஸ் வடிவிலான வெளிச்சத்தையும் வீடுகளில் பெற்றுக் கொள்ள முடியும். இதனால் மின் கட்டணங்களையும் குறைத்து வாழ முடியும் என்பதுடன் அடிக்கடி மின் வெட்டு ஏற்படுவதற்கு முகங் கொடுக்க வேண்டிய நிலையில் இருந்தும் பாதுகாப்பு பெறலாம். இலங்கையில் அடிக்கடி காலை, மாலை, இரவு என மின் துண்டிப்புக்கள் அமுல்படுத்தப்படுகின்றன. இதனையும் இவ்வாறான மாடு வளர்ப்பின் மூலமாக இயற்கை எரிவாயுவைத் தயாரிப்பதன் மூலமாகவும் உச்சக் கட்டப் பயனை நாம் அடையலாம். இதனை ஒரு விவசாயி தனி நபராகச் செய்திருப்பது பாராட்டத்தக்கது. இவ்வாறான விடயங்களை வீட்டில் இருந்தபடியே நாமும் செய்ய முயற்சிப்போம், இல்லாது போனால் நாட்டில் இந்த நிலை மேலும் மோசமடையலாம் என பல ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர்.

இவ்வாறான பண்ணை வளர்ப்பாளர்களை ஊக்குவித்து பொருளாதாரத்தை மேம்படுத்துவது சாலச் சிறந்தது. இவ்விடயம் தொடர்பில் ஏனைய பண்ணைத் தொழிலாளர்கள் மற்றும் கால் நடை வளர்ப்பாளர்களையும் ஊக்குவித்து அதனை முயற்சி செய்து மாற்றங்களை உருவாக்க வேண்டும். இதற்கான தொழில் நுட்ப அறிவை வளர்க்க அதற்கான பயிற்சிகளையும் வழங்க உரிய தரப்பினர் காத்திருக்கிறார்கள்.