வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான ஓகஸ்ட் 30ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள சர்வதேச மாநாட்டிற்கான முன்னாயத்த கலந்துரையாடல் இன்று (27) நடைபெற்றது.
யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத்தினர், அரசியல்வாதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், மாணவர்கள், மத தலைவர்கள் என்று பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.
குறித்த கலந்துரையாடல் தொடர்பில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவிக்கையில், “எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தில் வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் போராடி வருகின்ற வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களாகிய நாம், யாழ்ப்பாணம், தந்தை செல்வா அரங்கில் சர்வதேச மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளோம்” என்று அறிவித்தனர்.
இலங்கை அரசிடம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தைக் கையாளுவதற்கோ, நீதியைப் பெற்றுத்தருவதற்கோ எவ்வித நம்பிக்கைமிகு பொறிமுறைகள் இல்லை.
சர்வதேச விசாரணையே எமக்குத் தேவை என்பதை மாநாட்டில் வலியுறுத்தவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.



