வடபகுதியில் அதிகரித்துள்ள சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகள் மற்றும் எல்லைதாண்டி வரும் இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல்களால் பாரம்பரிய மீனவர்கள் கடும் வாழ்வாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
இன்று (20) பாராளுமன்றத்தில் நடைபெற்ற நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றிய அவர், வடபகுதி கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 2025ஆம் ஆண்டில் 8 ஆயிரத்து 220 மெற்றிக் தொன் மீன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக அரச புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
எனினும், இந்த உற்பத்தி புள்ளிவிபரங்கள் மாவட்டத்தின் பாரம்பரிய மீனவர்களின் உண்மையான வாழ்வாதார நிலையைப் பிரதிபலிக்கவில்லை என்று ரவிகரன் சுட்டிக்காட்டினார்
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் அதிக வருமானம் ஈட்டும் நிலையில், பாரம்பரிய மீனவர்கள் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மீன்பிடித் துறையில் டிஜிட்டல் கண்காணிப்பு முறையை அறிமுகப்படுத்தி, பதிவு செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் மீன்பிடி நடவடிக்கைகள் ஊடாகப் பெறப்படும் உற்பத்தியை முறையாகக் கணக்கிட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தின் புள்ளிவிபரங்களின்படி, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் தொடர்பாக 2025ஆம் ஆண்டு 136 பேர் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடமிருந்து 7.1 மில்லியன் ரூபாய் தண்டப்பணமாக அறவிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், 2026ஆம் ஆண்டு மே மாதம் வரையான காலப்பகுதியில் 53 பேர் கைது செய்யப்பட்டு, 1.28 மில்லியன் ரூபாய் தண்டப்பணமாக அறவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த தற்போதுள்ள தண்டனைகள் போதுமானவையா? என்ற கேள்வியை எழுப்பிய அவர், இத்தகைய நடவடிக்கைகளைத் தடுக்கும் வகையில் கடுமையான தண்டனைகளை அறிமுகப்படுத்துவதற்குச் சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதேவேளை, வடபகுதி கடற்பரப்பில் இந்திய இழுவைப்படகுகள் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபடுவதாகவும், அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள இறால் பிடிப்புக் காலத்தில் வடபகுதி மீனவர்களுக்குச் சிறிய அளவிலான வருமானத்தையேனும் பெற்றுக்கொடுக்க இவ்வாறான அத்துமீறல்களைக் கட்டுப்படுத்துவது அவசியம் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.
வடபகுதி கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளையும் இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல்களையும் கட்டுப்படுத்த கடற்படைக்கும் கடற்றொழில் அமைச்சுக்கும் முடியாவிட்டால், அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான அதிகாரங்களையும் கருவிகளையும் வடபகுதி மீனவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்
அவ்வாறு அதிகாரங்களும் கருவிகளும் வழங்கப்பட்டால், ஒரே மாதத்திற்குள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளையும் இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல்களையும் கட்டுப்படுத்திக் காட்டுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சவால் விடுத்தார்.



