கடந்த கால யுத்தம் காரணமாக இன்னல்களுக்குள்ளான குடும்பங்களுக்கான சொத்தழிவுக்கான இழப்பீட்டு காசோலைகள் வழங்கும் நிகழ்வு இன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. 184 பேருக்கு இழப்பீட்டு காசோலைகள் வழங்கப்பட்டன.
இன்னல்களுக்கு உள்ளான குடும்பங்களாக முல்லைத்தீவு மாவட்டத்தில் அடையாளப்படுத்தப்பட்ட 184 குடும்பங்களுக்கு நிதி அமைச்சின் கீழ் உள்ள இழப்பீட்டுக்கான அலுவலகத்தால் இந்த இழப்பீட்டு காசோலைகள் பெற தகுதியுடையவர்களாக தெரிவு செய்யப்பட்டு இவர்களுக்கான காசோலைகள் மாவட்ட செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில் உயிரிழப்புக்காக ஒருவருக்கும் அரச ஊழியர்களுக்கான சொத்தழிவு 24 பேருக்கும் பொதுமக்கள் 159 பேருக்குமாக 184 பெருக்கே இந்த காசோலைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 70 பேரும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் 40 பேரும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் 18 பேரும் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 33 பேரும் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் 23 பேருமாக 184 பேர் இந்த இழப்பீட்டு காசோலைகளை பெற தகுதிபெற்றுள்ள நிலையில் இன்று மாவட்ட செயலகத்தில் வைத்து 36 பேருக்கு காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டதோடு ஏனையவர்களுக்கான காசோலைகள் அவர்களின் வீடுகளுக்கு கொண்டு சென்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற இழப்பீட்டு காசோலைகள் வழங்கும் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினரும் முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான காதர் மஸ்தான் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் சி.ஜெயகாந்த் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் ம.உமாமகள் முல்லைத்தீவு மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் முல்லைத்தீவு மாவட்ட செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் உள்ளிட்டவர்கள் அதிதிகளாக கலந்துகொண்டு காசோலைகளை பயனாளிகளுக்கு வழங்கி வைத்தனர்.