இணைந்த வடக்குக்கிழக்கும், பிரிந்த வடக்குக்கிழக்கும் ஒரு பார்வை.! – பா.அரியநேத்திரன்-

294 Views

இணைந்த வடக்குக் கிழக்கு

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணமானது, இணைந்த வடக்குக் கிழக்கு வரலாற்றை கொண்ட பூர்வீகத் தாயகமாகவே இருந்து வந்தது. மரபு ரீதியாக பன் நெடுங்காலமாக இது நடைமுறையில் இருந்தது.

ஆனால் இந்திய இலங்கை ஒப்பந்தம், 1987 அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இலங்கை ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தனவிற்கும் இடையே  1987ஆம் ஆண்டு யூலை மாதம் 29ஆம் திகதி ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் நோக்குடன் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் ஆகும். இந்த ஒப்பந்தம் இலங்கை ஒரு பல்லின, பல்மத, பல்மொழி நாடாக ஏற்று, வடகிழக்கை தமிழ் முஸ்லீம் மக்களின் இணைந்த தாயகப் பிரதேசமாக ஏற்று, தமிழ் மொழியை அரச மொழியாக ஏற்று, மாகாண சபைகளுடான அதிகாரப் பரவலாக்கத்தை முன்வைக்கின்றது. இவ்வொப்பந்தம் மூலம் ஏற்படுத்தப்பட்ட வடகிழக்கு மாகாண சபைக்கான அங்கீகாரம் பெற்றது.

இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு மறுதினம் 1987, யூலை, 30, இந்தியப் படைகள் அமைதிப்படை என்னும் பெயரில் இலங்கையில் வந்திறங்கி, வடக்கு மற்றும் கிழக்கு மகாணம் எல்லாம் முகாம் அமைத்தனர்.

சுதுமலைப் பிரகடனம்

சுதுமலைப் பிரகடனம்
சுதுமலைப் பிரகடனம்

1987, ஆகஸ்ட், 4ஆம் திகதி விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் யாழ்ப்பாணம் சுதுமலையில், இலங்கை இந்திய ஒப்பந்தம் தொடர்பாகவும், அந்த ஒப்பந்தம் இடம்பெறுவதற்கு முன் தமக்கு ஏற்பட்ட அழுத்தங்கள், எச்சரிக்கைகள் தொடர்பாகவும் உரையாற்றினார். இது சுதுமலைப் பிரகடனம் என அழைக்கப்பட்டது.

1987, செப்டம்பர், 15ஆம் திகதி ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து தியாகி திலீபன் எனும் பார்தீபன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் 26ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.48 மணிக்கு உயிர் நீத்தார். 1987, அக்டோபர், 10இல் இந்திய இராணுவத்திற்கு எதிராக தமிழீழ விடுதலைப்புலிகள் போரை ஆரம்பித்தனர்.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் படி 13 வது திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் 1987, நவம்பர், 14ஆம் திகதி நிறைவேற்றப்பட்டது. 1988, மார்ச், 19ஆம் திகதி மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் அன்னை பூபதி இரண்டு கோரிக்கைகளை முன்வைத்து இந்திய அரசுக்கெதிராக உண்ணா நோன்புப் போராட்டத்தைத் தொடங்கினர்.

அவையாவன:

  1. உடனடியாக போர் நிறுத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

2.புலிகளுடன் பேச்சு நடத்தித் தீர்வு காண வேண்டும்.

உண்ணாவிரதத்தை ஆரம்பித்து கோரிக்கை நிறைவேறாமையால், 1988, ஏப்ரல் 19, உயிர்நீத்தார்.  அவர் உயிர் நீத்து சரியாக எட்டு நாட்களால் 1988, ஏப்ரல், 28, இணைந்த வடகிழக்கின் முதலாவது தேர்தல் இடம்பெற்றது.

இந்த தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழீழ விடுதலை இயக்கம்(ரெலோ) போட்டியிடவில்லை, தமிழீழ விடுதலைப்புலிகள், தேர்தலை ஏற்கவில்லை. இந்திய அமைதிப் படையின் பூரண கட்டுப்பாட்டுடன் அந்த தேர்தலில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈபீஆர்எல்எவ்) ஈழத்தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி(ஈஎன்டிஎல்எவ்) மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசிய கட்சி, உட்பட பல கட்சிகள் போட்டியிட்டன.

இந்திய அமைதிப்படை ஈபீஆர்எல்எவ் கட்சி சின்னமான செவ்வரத்தை பூ சின்னத்தை ஆதரித்து களத்தில் நேரடியாக மக்களை வாக்களிக்க பண்ணினர்.

வடக்கு கிழக்கு மகாணசபை ஆட்சி

வடக்கு கிழக்கு மகாணசபை ஆட்சி
வரதராஜப்மெருமாள்

இதனால் அந்தக் கட்சி அதிகப்படியான ஆசனங்களைப் பெற்று, வரதராஜப்பெருமாளை முதலமைச்சராகக் கொண்ட வடக்கு கிழக்கு மகாணசபை ஆட்சி இடம்பெற்றது.

மாகாணசபை திருகோணமலையில் இயங்கியது. ஆனால் சரியாக 18, மாதங்களால் முதலமைச்சர் வரதராஜப்மெருமாள் மாகாணசபை 13,வது திருத்த சட்டத்தில் போதிய அதிகாரங்கள் இல்லை எனக்கூறி 1987, அக்டோபர், 26ஆம் திகதி சுதந்திர ஈழப்பிரகடனத்தை செய்து, முதலமைச்சர் பதவியை தொடராமல் இந்தியப் படையினரின் பாதுகாப்பில் இருந்தார்.

1990, மார்ச், 24இல் இந்தியப்படை இலங்கையை விட்டு வெளியேறியது. அந்தக் கப்பலில் முதலமைச்சராக இருந்த வரதராஜப்பெருமாளும் சகாக்களும் மூட்டை முடிச்சுகளுடன் இந்தியப் படையை ஏற்றிய கப்பலில் அவரும் இந்தியாவில் சென்று வாழ்ந்தார்.

இந்நிலையில் 1990, மார்ச், 26ஆம் திகதி வடகிழக்கு மகாணசபை ஆட்சியை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன தமது நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி தமது பொறுப்பில் வடக்கு கிழக்கு மாகாண நிர்வாத்தை கொண்டு வந்தார்.

வடகிழக்கு மாகாணசபை ஒன்றரை வருடங்கள் மட்டுமே முதலமைச்சராக வரதராஜப்பெருமாள் செயல்பட்டதே வரலாறு. 1987, தொடக்கம் 2006, வரை 19, வருடங்கள் இணைந்த வடக்கு கிழக்கு மகாணத்திற்கு என்றே இலங்கை அரசினால் நிதி ஒதுக்கப்பட்டு சகல அபிவிருத்தி செயல் பாடுகளும் இடம்பெற்றன,

ஆனால் 2004, பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 22, பாராளுமன்ற உறுப்பினர்களும், ஜே.வி.பி. 34, பாராளுமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்றத்தில் அங்கம் வகித்தனர். அந்த வேளையில் 2005, நவம்பர்,17ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்சவை ஆதரித்த ஜே.வி.பி, கட்சி அவரை ஆதரிக்கும்போதே முன்வைத்த முதலாவது கோரிக்கை ஜனாதிபதியாக மகிந்த ராசபக்ச தெரிவானவுடன், முதலில் செய்யும் பணி வடக்கு கிழக்கு இரண்டு மகாணசபைகளாக பிரிப்பதற்கான சகல வழிமுறைகளையும் கையாளவேண்டும் என்ற நிபந்தனையைடன் அவருக்கு சார்பாக பிரசாரத்தை சிங்கள மக்கள் மத்தியில் முன் எடுத்தனர்.

ஜனாதிபதி வேட்பாளர் மகிந்த ராசபக்சவுக்கு பிரதான பிரசாரப் பேச்சாளராக ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச செயல்பட்டார். (அப்போது அவர் ஜே.வி.பி) ஜனாதிபதியாக மகிந்த ராசபக்ச தெரிவானார்.

அவர் வெற்றி பெற்று சரியாக எட்டு மாதங்களால் இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு எதிராக ஜே.வி.பி,2006 யூலை மாதம் 10,ம் திகதி வழக்கு தாக்கல் செய்தது,

இந்த வழக்கில் கிழக்கு மகாணத்தை பிரிக்க முடியாது என தமிழ்தேசிய கூட்டமைப்பு சார்பில் வழக்கறிஞர்கள் கனகேஸ்வரன், எம்.ஏ.சுமந்திரன் வாதாடுவதற்காகத் தயாராகி முன்னிலையானார்கள், அதற்காக கிழக்கில் இருந்து அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை தலா ஒருவர் வீதம் மூன்று பொது மக்களை தயார்படுத்தி சாட்சிகள் வழங்குவதற்காக நாம் அப்போது கொழும்பு அழைத்துச் சென்றோம்.

இந்த வழக்கில் எதிர்தரப்பு சாட்சியங்களை வழங்க நீதிமன்றம் அனுமதி தரவில்லை, அதனால் எதிர்தரப்பு நியாயங்கள் கவனத்தில் கொள்ளவில்லை அதனால் 1987 இல் கைச்சாத்திடப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்துக்கு அமைய, ஒன்றாக்கப்பட்ட இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்கள் செல்லுபடியாகாது என இலங்கை உயர் நீதிமன்றம் தீர்ப்பு ஒன்றில் தெரிவித்துள்ளது. அந்தத் தீர்ப்பு வடகிழக்கு இணைப்பை ரத்து செய்கின்றது. ‘வடக்கு கிழக்கின் இணைப்பானது கிழக்கு மாகாண மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதிப்பதாகக் கூறித் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில், அளிக்கப்பட்டுள்ள இத் தீர்ப்பில், கிழக்கு மாகாணத்துக்குத் தனியானதொரு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.’

நீதிபதி சரத் டீ சில்வா 2006,அக்டோபர் 16, ம் திகதி ஜே.வி.பி.சமர்பித்த கோரிக்கைக்கு சார்பாக தீர்ப்பு வழங்கினார். அன்றில் இருந்து வடக்கு கிழக்கு இரண்டு மாகாணங்களாக சட்ட ரீதியாக பிரிக்கப்பட்டது.

வடக்குக் கிழக்கும் பிரிந்த வடக்குக் கிழக்கும் ஒரு பார்வை3 இணைந்த வடக்குக்கிழக்கும், பிரிந்த வடக்குக்கிழக்கும் ஒரு பார்வை.! - பா.அரியநேத்திரன்-கிழக்கு மகாணசபை தேர்தல் முதன்முதலாக 2008,மே,10ஆம் திகதி இடம்பெற்றது. அந்ததேர்தல் இடம்பெற்ற காலம் வடக்கு கிழக்கில் இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே 2006, இல் திருகோணமலை மாவிலையாற்றில் தொடங்கிய போர் தொடர்ச்சியாக இடம்பெற்ற காலம்,

தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த மட்டக்களப்பைச் சேர்ந்த ஜோசப் பரராசசிங்கம், யாழ்ப்பாணம், ரவிராஜ், சிவநேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அம்பாறை சந்திரநேரு, பிரதேசபை உறுப்பினர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர்கள் என பலரை தமிழ் ஆயுத ஒட்டுக்குழு சுட்டுக்கொன்ற காலம்,

இவைகளை விட 2006, வரவு செலவு திட்டத்தில் அரசை எதிர்த்து வாக்களிக்க வேண்டாம் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், த.கனகசபை, சே.ஜெயானந்தமூர்த்தி, தங்கேஸ்வரி ஆகிய நால்வரின் உறவினர்களை மட்டக்களப்பில் தாம் ரிஎம்விபி உறுப்பினர்கள் என பகிரங்கமாகவே கூறி கடத்திவைத்து மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை வாக்களிக்காமல் தடுத்த காலம்.

இவ்வாறான தொடர் அச்சுறுத்தலால் 22, தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் சொந்த மாவட்டங்களுக்கு செல்லமுடியாமல் கொழும்பில் முடக்கப்பட்டனர்.

உயிர் ஆபத்துக்கள் தொடராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர்களுக்கும், அவர்களுடை குடும்பத்திற்கும் கிழக்கு மகாணத்தில் இருந்தமையால் 2008, கிழக்கு மகாணசபை தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பு பங்குபற்றாமல் இருந்தது என்பதே உண்மை. அச்சத்தால் கிழக்கு மாகாணசபை தேர்தலில் பங்குபற்றவில்லை என்பதை பகிரங்கமாக கூறமுடியாமல் இணைந்த வடக்கு கிழக்கை பிரித்தமையால் தாம் பங்குபற்றவில்லை என அப்போது கூறப்பட்டாலும், உண்மையில் உயிர் ஆபத்துக்கள் நிறையவே இருந்தமையால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அந்த தேர்தலில் பங்கேற்கவில்லை.

ஆனால் 2012, கிழக்கு மகாணசபை தேர்தல், 2013, வடமகாணசபை தேர்தல் என்பவற்றில் தமிழ்தேசிய கூட்டமைப்பு பங்கு பற்றி இருந்தது. வடக்கு கிழக்கு இணைப்பும் பிரிப்பும் சம்மந்தமான உண்மை நிலவரங்களை இந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ளேன்.

(பா.அரியநேத்திரன்)

1 COMMENT

Leave a Reply