கோவை கார் சிலிண்டர் வெடிப்பு -ஈஸ்டர் குண்டுவெடிப்புடன் தொடர்பா என்ற சந்தேகத்தில் விசாரணை

280 Views

தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் காரில் சிலிண்டர் வெடித்த வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்கள் மீது ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட சட்டப் பிரிவுகளுடன் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே ஞாயிறு அதிகாலை காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கோட்டைமேடு பகுதியை சேர்ந்த ஜமேசா முபீன் என்பவர் உயிரிழந்தார்.

இது தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் சனிக்கிழமை இரவு  ஜமேசா முபீனுடன், 4 பேர் இருந்ததும், அவரது வீட்டில் இருந்து ஏதோ ஒரு பொருளை அவர்கள்  தூக்கிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியிருந்தன.

இந்த வெடிப்பு சம்பவத்தையடுத்து ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது பிரிவுகளுடன் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது

இது பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டப்படும் நபர்கள் மீது புலனாய்வு அமைப்புகள் பயன்படுத்தும் சட்டமாகும்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த கோவை மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன், கைதானவர்களில் மூவர் சிசிடிவியில் இருந்தவர்கள். கைதான சிலர் கேரளா சென்று வந்ததும் தெரியவந்துள்ளது.

மேலும், கைது செய்யப்பட்ட முகமது தல்கா, தடைசெய்யப்பட்ட அல் உம்மா இயக்க தலைவரும், கோவை குண்டுவெடிப்பில் தொடர்புடைய பாட்ஷாவின் உறவினர் என்றும் பாலகிருஷ்ணன் கூறினார்.

இதனிடையே,  இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பில் சம்மந்தபட்டவர்களுடன், முபீன் தொடர்பில் இருந்தார் என்ற கோணத்தில் என்.ஐ.ஏ.அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது

Leave a Reply