இயற்கை உரத்துடன் கடலில் சுற்றும் சீனக் கப்பல்- இலங்கை,சீன தரப்பு கூறுவதென்ன?

440 Views

இயற்கை உரத்துடன் கடலில் சுற்றும்

இயற்கை உரத்துடன் கடலில் சுற்றும் ஹிப்போ ஸ்பிரிட் (HIPPO SPIRIT) என்ற சீனக் கப்பல், இலங்கை கடற்பரப்பில் சுமார் 70 நாட்கள் இருந்த நிலையில் தற்போது  சிங்கப்பூர் நோக்கி பயணித்து வருகிறது.

இந்த கப்பலில் தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக்கள் உள்ளதாக தெரிவித்து, அந்த கப்பலில் கொண்டு வரப்பட்ட 20,000 மெட்ரிக் டன் செயற்கை  விவசாய உரத்தை இலங்கை தொடர்ச்சியாக நிராகரித்து வந்ததையடுத்து இந்த கப்பல் கடந்த 4ம் திகதி சிங்கப்பூர் நோக்கி பயணத்தை மேற்கொண்டுள்ளது.

அதே நேரம் கடல்மார்க்கத்தை வெளியிடும் இணையத்தளங்களின் தரவுகளில், எதிர்வரும் 10ம் திகதி இந்த கப்பல் சிங்கப்பூரைச் சென்றடையும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

மத்தியஸ்தம் செய்வது மற்றும் மாதிரிகளை வழங்கும் நோக்கில் இந்த கப்பல் சிங்கப்பூர் நோக்கி பயணிப்பதாக செயற்கை உரத்தை இலங்கைக்கு அனுப்பிய சீனாவின் சிந்தவோ சிவின் பயோடெக் நிறுவனம் தெரிவிக்கின்றது.

தமக்கு ஏற்பட்ட நட்டத்திற்காக சீனாவின் சிந்தவோ சிவின் பயோடெக் நிறுவனம், மத்தியஸ்த சபையின் ஊடாக 8 மில்லியன் டாலர் நட்டஈட்டை கோரியுள்ளது. செயற்கை உரத்தை கொள்வனவு செய்யும் உடன்படிக்கையை இலங்கை அரசாங்கம் மீறியுள்ளதாக சிந்தவோ சிவின் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், உரத்தின் பெறுமதி, கப்பல் கட்டணம், மத்தியஸ்தத்திற்காக செலவிடப்படும் கட்டணம் மற்றும் வட்டி ஆகியன உள்ளடங்களாகவே இந்த நட்டஈடு கோரப்பட்டுள்ளது.

ஆனால், இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள இலங்கையின் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, “இலங்கையில் வணிக அனுமதிப் பத்திரத்தை பெற்றுக் கொள்ளாமையினாலேயே, சீன உரத்தை ஏற்றிய கப்பல், இலங்கை கடற்பரப்பிலிருந்து வெளியேறியுள்ளது என்றும் இலங்கை உர நிறுவனம், சீன உர நிறுவனத்திற்கு மின்னஞ்சல் ஊடாக இது குறித்து அறிவித்துள்ளது. சீன உர நிறுவனத்திற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக சீன தூதர், கடிதமொன்றின் ஊடாக தமக்கு அறிவித்துள்ளார்” என்றார்.

இது தொடர்பில் சீனா கருத்துக் கூறுகையில்,இந்த உரத்தில் தீங்கு விளைவிக்கும் பதார்த்தம் உள்ளடங்கி உள்ளதா என்பது குறித்து ஆராய்வதற்காக, உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆய்வு கூடமான சுவிஸ் எஸ்.ஜி.எஸ் நிறுவனத்திடம் அதன் மாதிரிகளை அனுப்பி வைக்குமாறு சீனா கோரியுள்ளது.

இந்த ஆய்வு கூடத்தினால் வெளியிடப்படுகின்ற பெறுபேறுகளை இரு நாடுகளும் நிபந்தனைகள் இன்றி ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் சீனா கடந்த அக்டோபர் மாதம் அறிக்கையொன்றின் ஊடாக கோரியுள்ளது.

தமது நாட்டு உரத்தில் தீங்கு விளைவிக்கும் பதார்த்தங்கள் காணப்படும் பட்சத்தில், நிபந்தனையின்றி, அதனை தாம் தமது நாட்டிற்கு கொண்டு செல்வதாகவும் சீனா கூறியுள்ளது.

தீங்கு விளைவிக்கும் பதார்த்தம் இல்லை என்பது உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில், நிபந்தனைகள் இன்றி, பணத்தை செலுத்தி உரத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என சீனா குறிப்பிடுகின்றது.

எவ்வாறாயினும், இன்று வரை எந்தவித இணக்கப்பாடுகளும் இன்றி, உரத்தை ஏற்றிய கப்பல் சீனா நோக்கி பயணிக்காது கடலிலேயே பயணித்து வருகின்றமை உறுதியாகியுள்ளது.

நன்றி- பிபிசி தமிழ் ilakku Weekly Epaper 159 December 05 2021 Ad இயற்கை உரத்துடன் கடலில் சுற்றும் சீனக் கப்பல்- இலங்கை,சீன தரப்பு கூறுவதென்ன?

Leave a Reply