இலங்கையுடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பில் ஆராய்வதற்காக சீனாவின் தூதுக்குழு ஒன்று அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளது.
சீன வர்த்தக அமைச்சர் வொங் வென்டாவோ தலைமையிலான 115 பேர் கொண்ட உயர்மட்ட பிரதிநிதிகள் குழு எதிர்வரும் 28ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கிறது. இலங்கையுடனான இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்தவும், சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் மற்றும் புதிய பொருளாதார முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஆராயும் வகையிலேயே இந்த விஜயம் அமையவுள்ளதாக சீனா அறிவித்துள்ளது.
குறித்த சீன தரப்பு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட அரசாங்கத்தின் பொருளாதார வர்த்தக துறைசார்ந்த பிரதிநிதிகளுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, இலங்கை – சீன வர்த்தக மற்றும் முதலீட்டு மன்றத்தின் மாநாடு எதிர்வரும் சனிக்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் சீன வர்த்தக அமைச்சருடன், 77 சீன நிறுவனங்களை பிரதிநிதித்துவம் செய்யும் 115 வர்த்தக பிரதிநிதிகளும் பங்கேற்க உள்ளனர்.