அரபு நாடுகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக சீனா உறுதி

197 Views

அரபு நாடுகளின் பாதுகாப்பு, இறைமை, அவர்களின் சுதந்திரம் மற்றும் பலஸ்தீன மக்கள் தொடர்பான அவர்களின் கொள்கைகளுக்கு சீனா என்போதும் உறுதுணையாக நிற்கும் என  சீன அதிபர் சி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

சவுதிஅரேபியாவுக்கு கடந்த புதன்கிழமை (7) பயணம் மேற்கொண்டுள்ள சீன அதிபருக்கு அங்கு மிகவும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. ஒரு சீனா என்ற கொள்கையை அரபு நாடுகள் ஆதரிப்பதை தான் வரவேற்பதுடன், பரசீக வளைகுடாவில் எரிபொருள் அபிவிருத்தி கூட்டமைப்பை உருவாக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வளைகுடா நாடுகளின் கூட்டமைப்பு சபையுடன் இணைந்து பணியாற்றிவரும் சீனாவுக்கும் அந்த நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக நடவடிக்கைகள் கடந்த 2021 ஆம் ஆண்டு 230 பில்லியன் டொலர்களை எட்டியிருந்தது. இந்த நாடுகளிடம் இருந்து சீனா 200 மில்லியன் தொன் எரிபொருட்களை 2021 ஆம் ஆண்டு கொள்வனவு செய்திருந்தது.

சீனாவுக்கும் வளைகுடா நாடுகளின் கூட்டமைப்புக்கும் இடையில் இடம்பெற்ற கூட்டத்தொடரில் பங்குபற்ற சென்ற சீன அதிபரை சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல்லாஸ் தனது நாட்டுக்கு வருமாறு அழைத்திருந்தார்.

இந்த கூட்டத்தொடரில் 14 அரபு நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டதுடன், சவுதி அரேபியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் 29.26 பில்லியன் டொலர்கள் பெறுமதியான புதிய உடன்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Leave a Reply