சீனாவின் ஒரு கட்சி ஆட்சியும், மகிந்தவின் குடும்ப ஆட்சியும் ஒன்று தான் – தோழர் பாஸ்கர்

506 Views

சீனா ஒரு கட்சி ஆட்சி-மகிந்தவின் குடும்ப ஆட்சியும் ஒன்று தான்

சீனா ஒரு கட்சி ஆட்சி-மகிந்தவின் குடும்ப ஆட்சியும் ஒன்று தான்: இலங்கையில் அமைந்துள்ள குடும்ப ஆட்சி மற்றும் அதன் தாக்கங்ள் குறித்து, தமிழகத்தைச் சேர்ந்த தோழர் பாஸ்கர் இலக்கு ஊடகத்திற்கு  வழங்கிய செவ்வி,

சீனா ஒரு கட்சி ஆட்சி-மகிந்தவின் குடும்ப ஆட்சியும் ஒன்று தான்கேள்வி ?
இலங்கையில் பிரதமர் மகிந்த ராஜபக்ச தன்னை உலகிற்கு பொதுவுடமை வாதியாக காண்பிக்கின்றார். ஆனால் நடை முறையில் அவரது குடும்ப உறுப்பினர்கள் 9 பேருக்கு ஆட்சியில் முக்கியமான பொறுப்புக்களைக் கொடுத்திருக்கின்றார். இது எந்தளவுக்கு பொதுவுடமை தத்துவங்களுக்கு ஏற்புடையது?

பதில் !
ராஜபக்ச குடும்பமானது, குடும்பம் என்று கூறுவதை விட அதைக் கும்பல் என்றுதான் கூற வேண்டும். அந்தக் கும்பலானது 2005 முதல் 2015 வரையிலான ஆட்சியில் கூட ஒரு  குடும்ப ஆட்சியாகத் தான் இருந்தது. அந்த குடும்பத்தின் உற்றார், உறவினர்கள் என்று சேர்த்து 150 பேர் கொண்ட ஒரு குடும்ப ஆட்சியாகத்தான் இருந்துள்ளது. அதைத் தொடர்ந்து 5 ஆண்டுகள் இடை வெளியின் பின் அதே குடும்ப ஆட்சி மீண்டும் ஆட்சிப்பீடம் ஏறியுள்ளது. அவர்கள் கடந்த காலத்தில் ஆட்சி செய்ததை விட  மிக மோசமாகத் தற்போதைய ஆட்சியில் செயற்பட ஆரம்பித்து ள்ளனர்.

மேலும் அப்போது பதவிகளில் இல்லாத ஒரு சிலர் இப்போது முக்கிய பதவிகளில் வந்துள்ளனர். இது மிக மோசமான ஓர் நிலைமை, இத்தகைய ஓர் மோசமான ஓர் நிலைமை ஏற்பட்டிருப்பது என்பது எந்த வகையிலும் பொதுவுடமைத் தத்துவத்துக்கு ஏற்புடையதல்ல. குடும்ப ஆட்சிக்கு எதிராக இருப்பதுதான் பொதுவுடமைத் தத்துவம்.

பொதுவுடமை தத்துவம் என்பது குடும்ப கட்டமைப்புக்கு வெளியே இருக்கக் கூடிய அனைத்து உழைக்கும் மக்களுடைய ஒரு தத்துவமாக, அவர்களுடைய ஆட்சியாகத் தான் அது ஆட்சி அரங்கத்தில் இருக்க முடியும். ஆனால் இந்த இந்த ராஜபக்ச அரசானது, 4 சகோதரர்களும் அவர்களுடைய புதல்வர்களும் அரசாங்கத்தின் முக்கிய பொறுப்புக்களில் இருக்கின்றனர்.

இவர்களைத் தவிர மேலும் அவர்களுடைய உறவினர்கள் என்ற பெயரில் பலர்  முக்கிய பதவிகளில் இருப்பார்கள். இது போன்ற ஓர் சூழல் வந்திருப்பதற்கு, கடந்த ஆண்டு மக்கள் ஒரு தேசிய வெற்றிக்கு ஆள்பட்டு, ராஜபக்ச குடும்பத்தை ஆட்சிக்கு கொண்டு வந்ததுதான் காரணம்.  சிவப்பு துண்டு போட்டுவிட்டால் மட்டும் அவர்கள் பொதுவுடமை வாதிகள் அல்ல. அவர்கள் என்ன ஆட்சி செய்கின்றார்கள் என்பது தான் முக்கியம்.

ஆனால் குறிப்பாக மகிந்த ராஜபக்ச, முன்பு மனித உரிமைப் போராளியாகத் தன்னைக் காட்டிக் கொண்டார். இப்பொழுது சிவப்புத் துண்டு போட்டு மாற்றி வருகின்றார். இதற்கும் பொதுவுடமைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

கேள்வி ?
சீனாவில் ஒரு கட்சி ஆட்சி இருப்பது போல், இங்கு ஒரு குடும்பத்தினுடைய ஆட்சி நிறுவப்படுகின்றது. இந்த முறைமை எவ்வாறு மக்களுக்கு உதவும்?

பதில் !
சீனாவில் ஒரு கட்சி ஆட்சி இருப்பதென்பது,  அது அந்நாட்டினுடைய நிலைமையில் முதலில் உருவானது. இது மாவோ காலத்திலும் கூட, ஒன்றுக்கும் மேற்பட்ட கட்சிகள், ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலவுடமை எதிர்ப்பு என்ற அடிப்படையில் செயற்பட அனுமதிக்கப்பட்டன. ஆனால் முதன்மையாக ஆட்சி என்பது, கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி என்ற பெயரில் தான் இருந்தது.

இன்று சீனாவில் இருப்பது கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி இல்லை. அது ஒரு முதலாளித்துவ, சர்வாதிகார, ஏகாதிபத்தியக் கொள்கையை உடைய, ஏகாதிபத்திய மூலதனத்தின் நலனுக்காக இருக்கின்ற ஓர் ஆட்சியாகும்.

அந்த ஆட்சி சீன மக்களுக்கு எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்துகின்றோ, அதே போல் குடும்ப ஆட்சி என்பது, அது எந்த நாட்டில் இருந்தாலும் சரி, குறிப்பாக பொருண்மிய தத்துவத்தில் இருந்தால் அதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. மேலும் அது பொதுவுடமைத் தத்துவத்துக்கு அடிப்படையில் முரண்பாடான விடயமாகும்.

சீனாவில் ஒரு கட்சி என்பது  எவ்வாறு மக்களுக்குப் பாதிப்பாய் இருக்கின்றதோ, இலங்கையிலும் இந்த குடும்ப ஆட்சி என்பது மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தவே செய்யும்.

அதை இலங்கை மக்கள் ஒன்று திரண்டு பல வடிவங்களில், பல வாய்ப்புக்களில் போராடுவார்கள்.

கேள்வி ?
உணவு உட்பட விலைவாசி மிக அதிகமாக இருக்கின்ற நேரத்தில், மக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் இனம் மற்றும் மத வெறியைத் தூண்டிவிட்டு, அனைத்தும் திசை திருப்பப்படுகின்றது.  இதனைப் பொது மக்கள் எவ்வாறு எதிர்கொள்ளலாம்?

பதில் !

இனத்தின் உரிமை
எந்த ஒரு நாட்டிலும் சுரண்டல் ஆட்சியாளர்கள், தமக்கு எதிரான மக்களுடைய கோபத்தை, அவர்களுடைய கோரிக்கையைத் திசை திருப்பி விடுவதற்கு, இன, மதவெறியைத் தூண்டி விடத்தான் செய்வார்கள்.

இது புதிதல்ல, குறிப்பாக முதலாளித்துவ ஆட்சியக் கட்டமைப்பிலும் அது இருந்து கொண்டுதான் இருக்கின்றது. அதனால் இது இலங்கையிலும் நடை பெறுகின்றது.

இதனைப் பொது மக்கள் எவ்வாறு எதிர் கொள்ள வேண்டும் என்பது குறித்து நோக்கும் போது, இனத்தின் உரிமையையும், மதவழிபாடுகளின் உரிமையையும் அங்கீகரித்து விட்டு, வெவ்வேறு இனங்களுக்கும் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களுக்கும் பொதுவான எதிரிகள் இருக்கின்றார்கள். அதே போல் பொதுவான கோரிக்கைகளும் இருக்கின்றன. அந்த கோரிக்கைகளின் அடிப்படையில் தான் இந்த மக்கள் எதிர் கொள்ள வேண்டும்.

மாறாக அதைக் கவனிக்காமல் இருந்தால், இனம் மற்றும் மதவெறியின் அடிப்படையில் மக்கள் பிளவு படுத்தப் படுவார்கள். எனவே பொதுக் கோரிக்கையின் அடிப்படையில், இனம் மற்றும் மத உரிமைகளை  அங்கீகரித்து விட்டு, செயற்பாட்டு வடிவத்தில் மக்கள் அதை எதிர் கொள்ள வேண்டும், களம் இறங்க வேண்டும்.

இலங்கைக்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கும் இதே சூழல் இருக்கின்றது.  எனவே பொதுக் கோரிக்கைகள் தான் முக்கியம். அந்தப் பொதுக் கோரிக்கை களுக்காக  ஒன்று திரளாமல் இருப்பதால் தான் இன்றைக்கு அனைத்துத் தரப்பு மக்களும் அடிப்படையிலான அன்றாடப் பிரச்சினைகளுக்கு அல்லல் படுகின்றார்கள்.

எனவே பொதுக் கோரிக்கையின் பின்னணியில், அனைத்துத் தரப்பு மக்களும் ஒன்று சேர வேண்டும். ஒரு முன்னணியைக் கட்டவேண்டும். அல்லது ஒரு கூட்டமைப்பைக் கட்ட வேண்டும். கூட்டியக்கத்தை மேற்கொள்ள வேண்டும். அந்த வடிவத்தில்தான் இனம் மற்றும் மதவெறிக்கு அப்பாற்பட்டு மக்கள் ஒன்று திரள முடியும்.

இல்லாவிட்டால் மக்கள் மதத்தின் பெயரால், இனத்தின் பெயரால் தங்களுக்குள் அடித்துக் கொண்டு இறப்பார்கள். ஆட்சியாளர்களுக்கு வரலாற்றுக் காரணங்களினால் ஏற்பட்ட இந்த வெவ்வேறு இனங்கள், வெவ்வேறு மதங்கள், வெவ்வேறு மொழிகள் என்பன மக்களை பிளவுபடுத்துவதற்கு சாதகமாக மாறியிருக்கின்றன.

எனவே பொதுக் கோரிக்கைகளுக்கு எதிராக அனைத்து தரப்பு மக்களும் ஒன்று திரள வேண்டும். இல்லா விட்டால் மக்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு இறக்க நேரிடும்.

கேள்வி ?
பொதுவுடமைக் கருத்தடிப்படையில் தமிழர்களை ஏற்க மறுக்கின்ற சிங்கள பொதுவுடமை வாதிகளுடன் தமிழர்கள் எவ்வாறு செயற்பட முடியும்?

பதில் !
இலங்கையில் இருக்கின்ற ஈழ தமிழ் தேசிய இனத்தினுடைய சிக்கலைப் பொறுத்த வரையில், தொடர்ந்து அங்கிருக்கக் கூடிய சிறியளவிலான இடதுசாரி அமைப்புகள் மட்டும் தான் ஈழ விடுதலை என்ற கோரிக்கையை முன்வைக்கின்றனர். அவர்கள் தமிழ் மக்களிடையே முதன்மையாக செயற்படுகின்றார்கள். ஆனால் சிங்கள மக்களில் முதன்மையாக செயற்படக் கூடிய  பொதுவுடமை அமைப்புக்கள், நாடாளுமன்ற இடதுசாரி அமைப்புக்கள் ஆகியன ஈழத்தின் இனச் சிக்கலை சரியான முறையில் கையாளாமல் தான் இருக்கின்றன.

ஒரு பொதுத் தன்மையில் சுயநிர்ணய உரிமை என்று  ஒத்துக் கொண்டாலும் குறிப்பான சூழலில் இன்னமும் தமிழர்கள் மத்தியிலும் சிங்களர்கள் மத்தியிலும் எந்த நிபந்தனையும் இல்லாத சுயநிர்ணய உரிமை என்பதை முன்வைத்து செயற்படக் கூடிய ஓர் பொதுவுடமை அமைப்புக்கள், சிங்களர்கள் மத்தியிலும் தமிழர்கள்  மத்தியிலும் முஸ்லீம்கள் மத்தியிலும் தோற்றம் பெறவேண்டும்.

ஒரு குறிப்பிட்ட அளவிற்கு அவர்கள் சில கோரிக்கைகளுடன் உடன் பட்டாலும், அடிப்படையாக இலங்கையின் அரசியல் பிரச்சினை என்பது, ஒரு இனப் பிரச்சினையாக இன்று மேலோங்கி இருக்கின்றது. கடந்த 1944ம் ஆண்டில் இருந்தே பொதுவுடமை இயக்கம் இலங்கையில் செயற்பட்டாலும் இன்னமும் அங்கிருக்கக் கூடிய இனப் பிரச்சினையை பொதுவுடமை இயக்கம் சரியாக கையாளாத நிலை தான் இருக்கிறது.

அகதிகளாகச் செயற்படக் கூடிய ஈழத் தமிழர்கள் இருக்கின்ற பிரான்ஸ, நோர்வே போன்ற நாடுகளில் சிறியளவில் செயற்படக் கூடிய பொதுவுடமை அமைப்புக்கள், முதன்மையாக தமிழர்களுடன் நின்று செயற்படுகின்றார்கள்.  ஆனாலும் ஈழ தனிநாட்டுக் கோரிக்கையை அங்கீகரிக்கக்கூடிய வகையிலே தோன்றக் கூடிய அமைப்புக்கள் இன்னமும் இல்லை. அந்த வகையில் இன்னமும் தமிழினச் சிக்கல் தீராததுக்கு இதன் பங்களிப்பும் ஓர் வகையில் இருக்கின்றது.

Leave a Reply