கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம், சிலரின் பொறுப்பற்ற மற்றும் நாகரிகமற்ற நடத்தையால் இடைநிறுத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது என்பது வருத்தமளிப்பதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
அவரது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்திலேயே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மக்களின் வாழ்வாதாரம், உட்கட்டமைப்பு, விவசாயம், மீன்பிடி, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அத்தியாவசிய அபிவிருத்தி விடயங்கள் விவாதிக்கப்படும் உயர்மட்ட நிர்வாக மேடைகள், தனிப்பட்ட அரசியல் நாடகங்களுக்கான அரங்குகளாக மாற்றப்படக் கூடாது என்றும் அவர் தமது பதிவில் கூறியுள்ளார்.
“கூட்டங்களில் கலந்துகொள்வது என்பது வெறுமனே சத்தமிடுவதோ, குழப்பம் விளைவிப்பதோ அல்ல, ஜனநாயக மரபுகளையும், நிர்வாக நடைமுறைகளையும், அதிகாரிகளின் கௌரவத்தையும் மதித்து செயல்பட வேண்டிய பொறுப்புணர்வாகும்.
அதற்கான அரசியல் நாகரிகத்தையும், நிர்வாக பண்பாட்டையும் சிலர் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.
தொடர்ச்சியாக அதிகாரிகள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அபிவிருத்திப் பணிகளை திசைதிருப்பும் முயற்சிகள் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது” என்றும் அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
அரசியல் இலாபத்திற்காக மக்களின் எதிர்காலத்தோடு விளையாட அனுமதிக்க முடியாது.
இத்தகைய பொறுப்பற்ற நடவடிக்கைகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை அவசியம் என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.
“சிலர் குழப்பத்தை உருவாக்கலாம், ஆனால் நாம் அபிவிருத்தியை உருவாக்குவோம். சிலர் அரசியல் நாடகத்தை அரங்கேற்றலாம், ஆனால் நாம் மக்களின் வாழ்க்கையை மாற்றும் பணியில் தொடர்ந்து ஈடுபடுவோம்” என்று கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
“கிளிநொச்சியை ஒருபோதும் கைவிடமாட்டோம். மீண்டும் விரைவில் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் நடைபெறும். மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் உறுதியான தீர்மானங்களும், முன்னேற்றப் பாதையும் அங்கே உருவாகும்” என்று அவர் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.



