இணையவழி கற்பித்தலை இடைநிறுத்த இலங்கை ஆசிரியர் சங்கம் தீர்மானம்

IMG 0476 இணையவழி கற்பித்தலை இடைநிறுத்த இலங்கை ஆசிரியர் சங்கம் தீர்மானம்

இலங்கை அரசாங்கத்தின் அரசியலமைப்புக்கு முரணாக காணப்படுகின்ற அடக்கு முறையான செயற்பாடுகளை கண்டித்து இணையவழி (ONLINE) கற்பித்தல் நடவடிக்கை களிலிருந்து ஆசிரியர்கள் விலகியிருக்க தீர்மானித் துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் க.உதயரூபன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் உள்ள மட்டு.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் கருத்து  தெரிவிக்கையில்,

எமது பொதுச் செயலாளர் நேற்றைய தினம் மேற்கொள்ளப் பட்ட கவனயீர்ப்புப் போராட்டம் தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப் பட்டிருந்தார். ஆனால் இன்று மீண்டும் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் தனிமைப்படுத்தப் பட்டுள்ளார். அவருடன் சேர்ந்து 30க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப் பட்டிருக்கின்றார்கள். இது சுயாதீன நீதிச் சேவையினைக் கேள்விக்கு உள்ளாக்குகின்ற விடயமாகும்.

நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டதற்குப் பின்பும் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் தனிமைப் படுத்தியிருப்பது என்பது கண்டிக்கப்பட வேண்டிய விடயம். சுயாதீன ஆசிரியர் சேவைகள் சங்கம் சுயாதீன நீதிச் சேவையை வலியுறுத்தி முன்னாள் பிரதம நீதியரசர் ஸ்ரீயானி பண்டாரநாயக்கா அம்மையார் பதவி நீக்கம் செய்யப்பட்ட போது நாட்டின் பல பாகங்களிலும் கவனயீர்ப்புப் போராட்டங்களை நடத்தியிருந்தோம்.

மாணவர்களின் உரிமைகள் தொடர்பாகவும் இலங்கை ஆசிரியர் சங்கம் குரல் கொடுத்து வந்திருக்கின்றது. இந்தப் பல்கலைக் கழக மாணவர்களின் நியாயமான போராட்டத்தை நியாயப்படுத்தியே எமது சங்கத்தின் பொதுச் செயலாளர் நேற்றைய தினம் கவனயீர்ப்புப் போராட்டத்தை நடத்தி இருந்தார்.

சுயாதீன கல்விக் கொள்கையில் இலவசக் கல்வியை நாங்கள் விலியுறுத்திக் கொண்டிருக்கின்றோம். எமது நாட்டில் இலவச சுகாதாரம், இலவசக் கல்வி என்பன மிக முக்கிய பங்குகளாகும். இலவச சுகாதாரம் எமது நாட்டில் இருந்தமையினாலேயே ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் தற்போதைய கோவிட் சூழ்நிலையில் பல உயிர்களைக் காக்கக் கூடியதாக இருந்தது. ஆனால் தற்போது இலவச சுகாதாரம் மற்றும் கல்வி என்பன அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன.

தற்போது நேற்யை தினம் பாராளுமன்றத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக 982மாணவர்கள் குறிப்பிட்ட காலங்களில் 05-09-2009ல் இருந்து 15-05-2017 வரையும் கல்வி கற்ற மாணவர்கள் மீண்டும் அங்கு கொத்தலாவல பல்கலைக் கழகத்தில் இணைக்கப் படுகின்றார்கள். எனவே இங்கு அந்த மாணவர்கள் இணைக்கப் படுவதன் காரணமாக எதிர் காலத்தில் தனியார் பல்கலைக் கழகங்கள் ஆரம்பிக்கப்பட்டு இலவச சுகாதார சேவை மற்றும் கல்விச் சேவைக்கும் சவாலாக அமையும் என்பதாலேயே எமது பொதுச் செயலாளர் பல்கலைக்கழக மாணவர்களுடன் இணைந்து கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இலவசக் கல்வியை தொடர்ந்து கல்விக் கொள்கையில் நடைமுறைப் படுத்த வேண்டிய கடப்பாடு எமது கல்வி அமைச்சருக்கு உள்ளது. அவரும் ஒரு பேராசிரியர் என்ற அடிப்படையில் கல்வி உயர்கல்வி மற்றும் மாணவர்கள் தொடர்பில் கூடிய கவனம் செலுத்த வேண்டியவராவார். ஆனால் தற்போதைய விடயங்களில் அவர் மௌனமாக இருப்பதையிட்டு நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

கல்விப் புலத்தில் உள்ளவர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட அடாவடித் தனங்களுக்கு எதிரான நாங்கள் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக நாங்கள் முன்னெடுத்து வந்த இணையவழி கல்வி நடவடிக்கை களிலிருந்து விலகிக் கொள்ள தீர்மானித்துள்ளோம். இது தொடர்பான தீர்மானத்தினை மத்திய குழு எடுத்துள்ளது.

இலவச கல்வியை மாணவர்களுக்கு கொண்டு செல்ல வேண்டிய கால கட்டத்தில் இந்த அரசாங்கத்தின் இலங்கையின் அரசியலமைப்புக்கு முரணாக காணப்படுகின்ற அடக்கு முறையான செயற்பாடுகளை கண்டித்து இணையவழி கற்பித்தல் நடவடிக்கை களிலிருந்து ஆசிரியர்கள் விலகியிருக்க தீர்மானித்துள்ளோம்” என்றார்.

இலக்கு இந்த வார மின்னிதழ் 137

ilakku Weekly Epaper 137 July 04 2021 இணையவழி கற்பித்தலை இடைநிறுத்த இலங்கை ஆசிரியர் சங்கம் தீர்மானம்