மட்டக்களப்பு: மாநகர ஆணையாளருக்கு எதிராக முதல்வரால் தொடரப்பட்ட வழக்கின் இறுதி உத்தரவு மே மாதம்- சுமந்திரன்

344 Views

ஆணையாளருக்கு எதிராக வழக்கு

மட்டக்களப்பு மாநகர ஆணையாளருக்கு எதிராக வழக்கு

மட்டக்களப்பு மாநகரசபையினால் மீளப்பெறப்பட்ட அதிகாரங்களை மாநகர ஆணையாளர் தொடர்ந்தும் பயன்படுத்துகின்றமை தொடர்பில் மாநகர முதல்வரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் இறுதி உத்தரவு எதிர்வரும் மே 11ம் திகதி பிறப்பிக்கப்படும் என வழக்கின் சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

மேற்படி வழக்கின் விசாரணை இன்றைய தினம் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் சட்ட வரம்பை மீறி செயற்படுகின்றார் என்று முறையிட்டு அவர் அவ்வாறு செயற்படுவதைத் தடுப்பதற்காக தடுப்பெழுத்தாணை கோரி மாநகர முதல்வரால் தாக்கல் செய்த தடுப்பாணை வழக்கு மற்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு என்பன இன்றைய தினம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இவ் வழக்குகளில் கற்றறிந்த சட்டத்தரணி முஹைதீன் காலித் அவர்களுடன் நான் ஆஜராகியிருந்தேன். இறுதி வாதங்களை நீதிமன்றம் செவிமடுத்து இறுதி உத்தரவிற்காக மே 11ம் திகதி குறிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கிலே இன்று ஏதாவது இணக்கப்பாடு எட்டப்படுகின்றதா? என பரிசீலிப்பதாக இருந்தது. அவ்வாறான இணக்கப்பாடு இல்லாத காரணத்தினால் மணுதாரருடைய பிரதி சத்தியக்கடதாசிகளை அணைப்பதற்காக மே 04ம் திகதிக்கு திகதி கொடுக்கப் பட்டிருக்கின்றது.

வழக்கு நிலுவையில் உள்ள காரணத்தினால் வழக்கின் விடயங்கள் பற்றி நாங்கள் எதுவும் சொல்ல முடியாது. நீதிமன்றம் இரு தரப்பினருடைய வாதங்களையும் செவிமடுத்துள்ளது. சரியான உத்தரவொன்றை கனம் நீதவான் அவர்கள் கொடுப்பார்கள என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என்று தெரிவித்தார்.

Leave a Reply