மலையகம்-கரிசனையும் செயற்பாடும்-துரைசாமி நடராஜா

135 Views

ஒரு சமூகத்தின் அபிவிருத்தியில் பல்வேறு காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன. கல்வி,பொருளாதாரம், வாழ்விடம் உள்ளிட்ட பலவும் இதில் உள்ளடங்கும். இந்த வரிசையில் ஆளுமை மற்றும் செயற்றிறன் மிக்க அரசியல் தலைமைத்துவத்தின் வகிபாகமும் மிகவும் இன்றியமையாததாகும்.சிறப்பான தலைமைத்துவத்தின் வழிகாட்டலின் ஊடாக பின்தங்கிய பல சமூகங்கள் முன்னிலைக்கு வந்திருக்கின்றன.

இந்த வகையில் பின்தங்கிய நிலையிலுள்ள இலங்கையின் மலையக சமூகத்தின் மேம்பாடு கருதி சிறந்த தலைமைத்துவத்தை கட்டியெழுப்ப வேண்டியது மிகவும் அவசியமாகியுள்ளது.

மலையகம் பசுமைமிக்க,எழில் கொஞ்சும் இடமாக காணப்படுகின்றது.இலங்கையின் இதயமாகத் திகழும் மலையகம் உல்லாசப் பயணிகளின் சொர்க்கபுரி என்றால் மிகையாகாது.எனினும் மலையகத்தில் காணப்படுகின்ற பசுமையும், எழிலும் இங்கு வாழும் மக்களில் எதிரொலிக்கின்றதா? என்றால் விடை இல்லை என்றே கிடைக்கும்.வறுமையின் கோரப்பிடியில் சிக்கியுள்ள இம்மக்கள் புறக்கணிப்பின் உச்சத்தில் இருந்து வருகின்றனர்.இதிலிருந்தும் இவர்கள் மீண்டெழுவதற்கு பகீரதப் பிரயத்தனத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளது.”வீட்டுக்கு ஒருவரேனும் கல்வி கற்றால் அந்த விதியொன்றே போதும் தலைவிதியை மாற்ற” என்ற கருத்தாடல்களுக்கு மத்தியில் மலையக சமூகத்தின் கல்வி நிலைமைகள் கடந்த காலங்களைக் காட்டிலும் தற்போது மேலெழுந்து வருவது பாராட்டுக்குரியதே எனினும் உரிய இலக்கை அடைவதற்கு இன்னும் பல படிகள் முன்செல்ல வேண்டியுள்ளது.

மலையக பெருந்தோட்ட சமூகத்தின் பொருளாதார நிலைமைகள் தற்போது மிகவும் பின்னடைவு கண்டுள்ளன.தேசிய அரசியலில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்புகளால் நாடு ஸ்திரமற்ற அரசியல் சூழலிலேயே இன்னும் இருந்து வருகின்றது.அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் கணிசமாக அதிகரித்துள்ள நிலையில் மக்கள் வாழ்க்கையை கொண்டு நடாத்துவதற்கு அல்லல்படுகின்றனர்.கோதுமை மாவின் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் அதிகரிப்பு பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வயிற்றிலடித்துள்ளது.நாட்டின் அதிகரித்த வறுமைச்சுமை பெண்களை விபசாரத்தில் ஈடுபடத் தூண்டியுள்ளதாகவும் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளிப்படுத்துகின்றன.

இநந்தளவுக்கு நாடு கீழ்நிலை அடைந்திருக்கின்றது.இதனிடையே எல்லா மட்டங்களிலும் மலையக மக்கள் விழிபிதுங்கி நிற்பதனையே அவதானிக்க முடிகின்றது.இந்நிலையில் அரசாங்கத்தினால் அண்மையில் முன்வைக்கப்பட்ட இடைக்கால வரவு செலவு திட்டமும் மலையக மக்கள் உள்ளிட்ட பின்தங்கிய மக்களுக்க உரியவாறு கை கொடுக்கத் தவறி இருக்கின்றது.” யானைப்பசிக்கு சோளப்பொறிகூட ” கிடைக்காத நிலையிலேயே மலையக மக்களின் வாழ்க்கை தொடர்ந்து கொண்டிருப்பது கொடுமையிலும் கொடுமையாகும்.

சமூக மாற்றத்திற்கான அச்சாணியாக அரசியல் விளங்குகின்றது.இந்த வகையில் அரசியல் தலைமைத்துவத்தை வகிப்பவர்கள் சமூகம் எதிர்நோக்குகின்ற இடர்களைக் களைந்து, அபிவிருத்தி கருதி காத்திரமான பங்காற்ற வேண்டிய தேவை காணப்படுகின்றது.இது சாத்தியப்படாதவிடத்து சமூகம் சவக்குழியை நோக்கிச் செல்வது தவிர்க்க முடியாததாகிவிடும் என்றபோதும் மலையக அரசியல்வாதிகள் இதனை எவ்வாறு உள்வாங்கிக் கொண்டுள்ளார்கள் என்பது தொடர்பில் சிந்திக்க வேண்டியுள்ளது.தலைமைத்துவத்தை ஏற்பவர்கள் கலங்கரை விளக்கமாக இருந்து சமூகத்திற்கு வழிகாட்ட வேண்டும்.அற்ப சலுகைகளை புறந்தள்ளி தன்னை நம்பி வாக்களித்த மக்களின் வாழ்வுயர ஏணியாக இருத்தல் வேண்டும்.எனினும் இந்த நிலை இப்போது மாறி மக்களை ஏணியாக வைத்து அரசியல்வாதிகள் பிழைப்பு நடாத்தும் ஒரு கலாசாரமே அதிகமாக நிலவுகின்றது.இது தொடர்பில் மலையக அரசியல்வாதிகளும் அடிக்கடி கையை சுட்டுக் கொண்டிருக்கின்றனர்.இவ்வாறான விமர்சனங்கள் மலையக அரசியல் தலைமைகளைப்பற்றி அதிகமாகவே காணப்படுகின்றன.

மலையகக் கட்சிகள் இன்னும் பெரும்பான்மை கட்சிகளை மையப்படுத்தியே செயற்படுகின்றன.அக்கட்சிகளின் எழுச்சியும் வீழ்ச்சியும் மலையகக் கட்சிகளிலும் அரசியல்வாதிகளிலும் செல்வாக்கு செலுத்துவதாகவுள்ளது.மலையகக் கட்சிகள் பெரும்பான்மைக் கட்சிகளுக்கு அப்பாவி மக்களின் வாக்குகளை பெற்றுக் கொடுத்துவிட்டு அவர்களின் நிழலில் குளிர்காய்வதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றமையும் தெரிந்த விடயமாகும்.

மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுக்கும் சூழல் மழுங்கடிக்கப்பட்டுள்ள நிலையிலும் அரசியல்வாதிகளின் ஆர்வக் குறைவுக்கு மத்தியிலும், அமைச்சர் பதவியை பெற்றுக் கொள்ளும் முனைப்புக்களே மேலோங்கி காணப்படுகின்றன.அண்மைக்காலத்திலும் இதன் எதிரொலியை எம்மால் கேட்கக் கூடியதாக இருந்தது.இந்நிலையில் மலையகக் கட்சிகள் தமது தனித்துவத்தைப் பேணி தமக்கென ஒரு வாக்கு வங்கியினை வைத்திருப்பது அவசியமாகும்.

இத்தகைய வாக்கு வங்கிகள் அரசியலில் மலையக மக்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கச் செய்வதோடு அரசாங்கத்தை வலியுறுத்தி சமூகத்தினரின் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளவும் உந்துசக்தியாக அமையும்.அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் காலத்தில் அவரது கட்சியான இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கென்று அதிகரித்த வாக்குகளைக் கொண்ட ஒரு வாக்கு வங்கி இருந்தது.இதன் மூலமாக பலத்தை அதிகப்படுத்தி பேரம்பேசும் வல்லமையை தொண்டமான் அதிகரித்துக் கொண்டார்.இத்தகைய பேரம்பேசுதல் மலையக மக்களின் பல்துறை சார்ந்த அபிவிருத்திக்கும் வித்திட்டது என்பதும் நிதர்சனமாகும்.

ஆய்வுகள்

தலைமைத்துவம் என்பது சரியான புரிந்துணர்வுை மக்களிடையே ஏற்படுத்தி அவர்களுக்கு உரிய வழிகாட்டுவதாக அமைதல் வேண்டும்.தூரநோக்கு, விசாலமான பார்வை, நாம் என்ற உணர்வு, ஐக்கியத்துடனான செயற்பாடு,விட்டுக் கொடுப்பு, சரியான நேரத்தில் சரியான முடிவினை மேற்கொள்ளும் ஆளுமை பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுக்கும் வல்லமை, பக்கச்சார்பற்ற தன்மை போன்ற பலவும் தலைமைத்துவத்தின் பாற்பட்டதாகும்.

ஒவ்வொரு கட்சியும் தனித்துவத்தைப் பேணுகின்ற அதேவேளை பொதுவான பிரச்சினைகளுக்கு பொது இணக்கப்பாட்டின் ஊடாக தீர்வினைப் பெற்றுக் கொள்ள முற்படுதல் வேண்டும்.தலைவர்கள் சிலர் தலைமைத்துவத்தை இறுகப் பற்றிப்  பிடித்துக்கொண்டு தாமும் எதனையும் செய்யாது மற்றவர்களையும் எதனையும் செய்யவிடாது தடைபோடுவதை அவதானிக்கின்றோம்.

இது பிழையான ஒரு நடவடிக்கையாகும் என்பதோடு செயற்றிறன் மிக்கவர்களுக்கு விட்டுக் கொடுப்பு டன் இடமளிக்க வேண்டும்.மலையக மக்களின் பிரச்சினைகள் அதிகரித்த போக்கினை வெளிப்படுத்தி வருகின்றன.தொழில், இருப்பு, அடையாளம், பொருளாதாரம்,சமூக அந்தஸ்து எனப்பலவும் இதில் உள்ளடங்கும் நிலையில் தலைமைத்துவங்கள் இம்மக்கள் எதிர்கொள்ளும் இத்தகைய பல பிரச்சினைகள் குறித்தும் அறிந்து வைத்திருத்தல் வேண்டும்.”ஆய்வின் மூலம் அபிவிருத்தி” என்ற எண்ணக்கரு தொடர்பில் அதிகமாக பேசப்பட்டு வருகின்ற நிலையில் புத்திஜீவிகளின் பங்களிப்புடன் இதனை சாதகமாக்கிக் கொள்வதற்கு மலையக தலைமைத்துவங்கள் முற்படுதல் வேண்டும்.இவற்றின் சமகால நிலைமைகளை புரிந்து கொண்டு அதற்குரிய பரிகாரத்தை பெற்றுக் கொடுப்பதும் தலைமைத்துவத்தின் கடமையும் பொறுப்புமாகும்.

 இளைஞர்கள் நாட்டின் முதுகெலும்புகள் என்ற வகையில் அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கும் மனப்பான்மையை தலைமைகள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.இளைஞர் புரட்சி என்பது எமது நாட்டிற்கு புதியதல்ல.தமிழீழ விடுதலைப் புலிகள்,ஜே.வி.பி. கிளர்ச்சி, அண்மைக்கால காலி முகத்திடல்  போராட்டம் என்று இது விரிந்து கொண்டே செல்கின்றது.

இளைஞர்கள் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டு இவர்களின் அதிருப்தி மேலோங்குமிடத்து நாடு பல்வேறு அபாயங்களையும் தொடர்ந்தும் எதிர்நோக்கவேண்டி நேரிடலாம் என்றும் அஞ்சப்படுகின்றது.இளைஞர்களின் கருத்துக்கள் முறையாக உள்வாங்கப்படாமையின் காரணமாக இலங்கை கடந்த காலத்திலும் சம காலத்திலும் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகின்றது.

தலைமைத்துவங்களின் புரிந்துணர்வற்ற, விட்டுக் கொடுப்பில்லாத,முரண்பாடான போக்குடைய தன்மைகள் இதற்கு காரணமாக அமைந்துள்ளன.இந்நிலையில்  தேசிய ரீதியில் தலைமைத்துவம் எதிர்கொண்ட தழும்புகளை மலையகத் தலைமைகளும் மனதிருத்தி தமது பிழைகளை திருத்திக் கொள்ள முற்படுதல் வேண்டும்.

வறுமை, வேலையின்மை,கல்வியறிவின்மை, இன ரீதியானதும் அரசியல் ரீதியானதுமான பாரபட்சங்கள், அரசியல் பழிவாங்கல்கள்,இன மற்றும் சாதி ரீதியிலான அடக்குமுறைகள், முக்கிய தீர்மானங்களை மேற்கொள்வதில் பங்கின்மை போன்ற சமூக, பொருளாதார காரணிகள் இளைஞர்களிடையே பொதுவானதொரு அமைதியின்மையை உருவாக்கியுள்ளதாக  புத்திஜீவிகள் வலியுறுத்துகின்றனர்.

ஒருவனது கல்வியறிவும் அவன் செய்யும் தொழிலுமே அவனது சமூக அந்தஸ்தை நிர்ணயிக்கும் இரு பிரதான காரணிகளாகும்.ஏனைய சமூகங்களோடு ஒப்பீட்டு ரீதியில் நோக்குமிடத்து தோட்டத்துறை சார்ந்த இளைஞர்கள் இந்த இரண்டிலுமே பின்தங்கியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.எனவே மலையகத் தலைமைகள் இந்த விடயம் குறித்தும் கவனம் செலுத்தி இளைஞர்களின் அபிவிருத்திக்கு உதவ வேண்டும்.இதேவேளை இளைஞர்களின் தொழில்சார் பயிற்சி, தொழில்நுட்ப வினைத்திறன், பொது அறிவு என்பவற்றை உயர்த்தும் நோக்கில் அறிவுசார், தொழில்சார், மைய வினைத்திறன் அபிவிருத்தி உள்ளிட்ட பல பயிற்சி திட்டங்களை விரிவுபடுத்துவது குறித்தும் தலைமைத்துவங்களின் கரிசனை வேண்டப்படுகின்றது.

இவற்றோடு இளைஞர்கள் அரசியலில் களம் புகுந்து புதிய அணுகுமுறைகளைப்   பின்பற்றி மக்களுக்கு உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதற்கும் ,பாரம்பரிய மரபுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து புதிய அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்புவதற்கும் மூத்தவர்கள் ஒதுங்கி வழிவிடுவதும் அவசியமாகும்.

Leave a Reply