மட்டக்களப்பு- காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டத்தால் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் இரத்து

126 Views

காணாமல்போனோர் அலுவலகத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டோரின்  செய்த ஆர்ப்பாட்டம் காரணமாக இடைநிறுத்தப்பட்டது.

காணாமல் ஆக்கப்பட்டோரின் பற்றிய அலுவலக அதிகாரிகள் மட்டக்களப்பு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு அவர்களுக்கான இழப்பீடுகளை வழங்கும் பணிகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.

இதன்கீழ் இன்றைய தினம் (15/10/2022) மட்டக்களப்பு,மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் விசாரணையை நிறுத்தும் முகமாகவும், எதிர்ப்பினை வெளிப்படுத்தும் முகமாகவும் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில்  எதிர்ப்புப் பேரணியும் பிரதேச செயலக முற்றுகைப் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட  உறவுகள் சங்கத்தின் அம்பாறை மாவட்டத் தலைவியும், கிழக்கு மாகாண இணைப்பாளருமான தம்பிராசா செல்வராணி தலைமையில் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்களை ஏமாற்றும் ஜனாதிபதி செயலகத்தின் விசாரணை வேண்டாம், எங்கள் உறவுகளின் உயிருக்கு இரண்டு இலட்சம் ரூபாய் இலஞ்சமா? ஆணைக்குழு விசாரணையை உடன் நிறுத்து, ஓஎம்பி வேண்டாம், சர்வதேசத்தை ஏமாற்றும் அரசின் செயற்பாடுகளை உடன் நிறுத்து, பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குண்டு கிடக்கும் அரசு எவ்வாறு இரண்டு இலட்சத்தை வழங்கப் போகின்றது என்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில், காவல்துறையினர் விசாரணை அதிகாரிகள் சிலரை அழைத்து வந்து போராட்டம் மேற்கொள்வோருடன் கலந்துரையாடியபோது. மேற்கூறப்பட்ட விசாரணையில் நம்பிக்கை இல்லை, அப்பாவித் தமிழ் மக்களை ஏமாற்ற வேண்டாம் இந்த விசாரணையை உடன் நிறுத்த வேண்டும் என்ற பலமான கோரிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

அதைத் தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் காவல்துறை உயரதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் மேற்படி விசாரணைக் குழுவினருடன் கலந்துரையாடியதையடுத்து காணாமல்போனோர் பற்றிய அலுவலக அதிகாரிகள் விசாரணையை இடைநிறுத்தியுள்ளனர்.

Leave a Reply