இலங்கையில் மாலைதீவு கலாசார நிலையத்தை அமைக்க அமைச்சரவை அனுமதி

இலங்கையில் மாலைதீவு கலாச்சார நிலையமொன்றை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கலாச்சார மற்றும் கலை விவகாரங்கள் தொடர்பான பயிற்சி வாய்ப்புக்களை வழங்கல், விளையாட்டுக்களுக்கான வசதியளித்தல், கண்காட்சிகள், இசை நிகழ்ச்சிகள், மாநாடுகள், பொதுக் கருத்தரங்குகள், திரைப்படங்கள் மற்றும் ஏனைய கட்புல செவிப்புல தயாரிப்புக்களின் வெளியீடுகள் போன்ற செயற்பாடுகளுக்காக இலங்கையில் மாலைதீவின் கலாச்சார நிலையமொன்றை தாபிப்பதற்கான முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு இருதரப்பினருக்குமிடையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதுடன், புரிந்துணர்வு ஒப்பந்த வரைபுக்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது.

அதற்கமைய, குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.