நவுருத்தீவில் உள்ள தமிழ் அகதியை கொல்ல முயற்சி? நிரந்தர பாதுகாப்பை வழங்க மறுக்கும் அவுஸ்திரேலியா 

Rajeshkumar நவுருத்தீவில் உள்ள தமிழ் அகதியை கொல்ல முயற்சி? நிரந்தர பாதுகாப்பை வழங்க மறுக்கும் அவுஸ்திரேலியா 

அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு செயல்படும் நவுருத்தீவில் வைக்கப்பட்டுள்ள தமிழ் அகதியான ராஜேஷ்குமார் ராஜகோபால், அவுஸ்திரேலிய அரசு தங்களைப் பாதுகாக்க தவறிவிட்டதாக கூறுகிறார். அத்துடன் அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் கிளாரி ஓ’நீல் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

கடந்த பிப்ரவரி 9, 2021ல் தமிழ் அகதியான ராஜகோபால் இருசக்கர வாகனத்தில் தனியாக பயணித்து கொண்டிருந்த பொழுது, பின்னே வந்த கார் அவர் மீது வேண்டுமென்றே மோதி இருக்கிறது. அந்த கார் பின்னே சென்று மீண்டும் தன் மீது மோதி இழுத்துச் சென்றதாக அவர் கூறுகிறார்.

நவுரு உள்ளூர்வாசிகளால் அகதிகள் மீது நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதல் இது எனக் கூறுகிறார் சுகாதார பணியாளர்.  அத்துடன் தடுத்து வைத்துள்ள அகதிகளை அவுஸ்திரேலிய அரசும், தனியார் ஒப்பந்ததாரர்களும் பாதுகாக்க தவறியுள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

“இந்த மோசமான செயலுக்கு காரணமான யார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது தான் மேலும் ஏமாற்றமாக இருக்கிறது. எந்த நீதியும் இங்கு இல்லை,” என அந்த சுகாதார பணியாளர் கூறியிருக்கிறார்.

அதே சமயம், அனைத்து நவுருத்தீவு வாசிகளும் ஆபத்தானவர்கள் கிடையாது எனக் கூறியுள்ளார் ராஜகோபால். ஆனால் 12,500 மக்கள் தொகை கொண்ட நவுருத்தீவில் ஐந்தில் ஒருவர் வேலையற்றவராக இருப்பதாகவும் அதில் சிலர் அகதிகளுக்கு உணவுக்கும் வேலைக்கும் பணம் வழங்கப்படுவதை பிரச்சனையாக பார்ப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த விபத்தால் ராஜேஷ்குமார் நிரந்தரமாக முடமாகியுள்ளார். தற்போது அவுஸ்திரேலியாவில் சமூகத் தடுப்பில் உள்ள அவர் மீண்டும் நடக்க பயின்று வருகிறார். ஆனால், படகு வழியாக வருபவர்களை ஏற்க முடியாது என்ற கடுமையான கொள்கையால் அவுஸ்திரேலியாவில் வசிப்பதற்கான அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ராஜகோபாலுக்கு ஆஸ்திரேலியா நிரந்தர பாதுகாப்பை வழங்க வேண்டும் என்கிறார் ஆஸ்.சுதந்திர பாராளுமன்ற உறுப்பினரான மோனிக்யூ ரைன்.

கடந்த பல மாதங்களில் ராஜகோபாலுக்கு 19 அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. “இங்கு நிம்மதியாக வாழலாம் என நினைத்தேன். ஆனால், இப்போது ஒட்டுமொத்தமாக முடமாகியுள்ளேன்,” என்கிறார் ராஜகோபால்.

கொழும்பில் பிறந்த ராஜகோபால், இலங்கையில் நிகழ்ந்த போரில் தன்னுடைய 9 உறவினர்களை இழந்துள்ளார். இலங்கை அரசு படைகள் நடத்திய தாக்குதலின் போது காயமுற்ற அவர், அரசு படைகளிடம் சரணடைந்த நிலையில் அவருக்கு புலிகளுடன் தொடர்புள்ளதாக மூன்றாண்டுகள் சிறைப்படுத்தப்பட்டு இருக்கிறார்.

கடந்த செப்டம்பர் 2011ல் வவுனியா ஓமந்தை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட அவர், இந்தியாவுக்கு தப்பி அங்கிருந்து படகு மூலம் அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைய முயன்றிருக்கிறார். அவுஸ்திரேலிய படைகளால் தடுத்து நிறுத்தப்பட்டு, நவுருத்தீவு முகாமிற்கு கொண்டு செல்லப்பட்ட ராஜகோபால் அங்கு 7 ஆண்டுகள் வைக்கப்பட்டிருந்திருக்கிறார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.