திருகோணமலையில் உள்ள வர்த்தக நிலையங்கள் இன்று முதல் ஒரு வார காலத்திற்கு மூடுவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை நகரசபை தலைவர் இராஜநாயகம் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை மாவட்டத்தில் இது வரை 6396 க்கு மேற்பட்ட கோவிட் 19 வைரஸ் தொற்றாளர்களும் 164 மரணங்களும் பதிவாகி உள்ளதாக திருகோணமலை மாவட்ட செயலகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே இத் தொற்று பரவலில் இருந்து பொது மக்களை பாதுகாக்கவும் அவசர தேவைகளைத் தவிர வீட்டை வீட்டு வெளியேறுவதை முடிந்த வரை கட்டுப்படுத்தவும் மாவட்ட செயலகத்தினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய வர்த்தக சங்கம் மற்றும் வியாபாரிகள் சங்கம் ஆகியவற்றின் வேண்டுகோளுக்கு இணங்க திருகோணமலை மரக்கறி சந்தை, மீன் சந்தை மற்றும் தனியார் கடைகளை இன்று (17) முதல் ஒரு வாரகாலத்துக்கு மூடுவதற்கு தீர்மானிக்கப் பட்டுள்ளது என திருகோணமலை நகரசபை தலைவர் நா. இராஜநாயகம் கூறியுள்ளார்.
அத்தியாவசிய சேவைகளாகிய மருந்தகங்கள், உணவகங்கள் மற்றும் பலசரக்கு கடைகள் மட்டுப் படுத்தப்பட்ட அளவில் சுகாதார சட்ட விதிகளுக்கிணங்க திறக்கப்பட நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.
நடைபாதை வியாபாரம் முற்றாக தடை செய்யப் பட்டுள்ளது, எனவே பொது மக்களும் வியாபாரிகளும் இவ் வேலைத்திட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பை வழங்கி கோவிட் தொற்றிலிருந்து எம்மையும் நாட்டையும் பாதுகாப்போம் என நகரசபை தலைவர் நா. இராஜநாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.