“துப்பாக்கி ரவைகள் எங்கள் துணிச்சலுக்கு இடையூறாகாது“- காலி முகத்திடலில்  இருந்து  கே.மனோகரன்

“எங்களின் காலி முகத்திடல் போராட்டம் மிகவும் முக்கியத்துவம் மிக்கதாக விளங்குகின்றது. ஒரு மாதத்துக்கும் மேலாக இடம்பெற்று வருகின்ற இந்த நியாயமான போராட்டத்தின் மூலமாக அரசாங்கம் ஆட்டம் கண்டிருக்கின்றது“ காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர் கே.மனோகரன் தெரிவித்துள்ளார்.

காலிமுகத்திடல் போராட்டம் மற்றும் அங்கு நடைபெற்ற வன்முறை குறித்து இலக்கு ஊடகத்திற்கு கே.மனோகரன் கருத்து தெரிவிக்கையில்,

“அரசாங்கத்தையும் ராஜபக்ஷாக்களையும் வீட்டுக்கனுப்பி ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் முனைப்பில் முன்னெடுக்கப்பட்ட எங்கள் போராட்டம் பல வெற்றி இலக்குகளுக்கு அடித்தளமிட்டிருக்கின்றது.பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பதவி விலகல் எங்கள் போராட்டத்தின் உச்சகட்ட வெற்றியாகும்.இதேைப்போன்றே ஜனாதிபதி கோட்டாபயவும்  பதவி விலகும் வரை நாங்கள் ஓயப்போவதில்ல.

நாங்கள் முன்னெடுத்த போராட்டத்தின் விளைவாக மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் பதவி விலக நேர்ந்தது.அமைச்சரவையை மறுசீரமைக்கும் நிலைமை உருவானது.

இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் நிலைக்கு வலு சேர்க்கப்பட்டுள்ளது.எங்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி மக்களுக்கு கிடைத்த வெற்றியாகும்.எங்களின் நியாயமான போராட்டத்தை கொச்சைப்படுத்தும் அல்லது மழுங்கடிக்கும் நோக்கிலான செயற்பாடுகள் அரசாங்கத்தினால் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டது. அவசர கால சட்ட அமுலாக்கமும் இதில் ஒரு  வடிவமேயாகும். ஆனால் இச்சட்டம் இப்போது புஸ்வாணமாகி இருக்கின்றது .

எங்களிடம் காணப்பட்ட ஒற்றுமை, இனவாதமற்ற வெளிப்பாடுகள், இலக்கை மையப்படுத்திய உத்வேகம் அல்லது வெறி என்பன அரசாங்கத்தின் முன்னெடுப்புக்களை தகர்த்தெறிந்தன. வீதித்தடைகளும், கண்ணீர்ப் புகையும், நீர்த்தாரைப் பிரயோகமும் எங்களது போராட்டத்தை முடக்கி விடவில்லை.நாங்கள் வலிமையால் எங்களை முறுக்கேற்றிக் கொண்டோம்.

போராட்டங்களுக்கு நாங்கள் எங்களை பழக்கப்படுத்திக் கொண்டிருக்கின்றோம். பேரினவாத அரசாங்கங்களிடம் பேசிப் பயனில்லை. உரிமைகள் கேட்காமல் கிடைக்கமாட்டாது.தங்கத் தட்டிலே உரிமைகளை வைத்து யாரும் வெறுமனே தந்துவிடப் போவதுமில்லை.இந்த நிலையில் ஜனநாயக ரீதியான போராட்டத்தின் மூலமாகவே உரிமைகளை பெற்றுக் கொள்ள முடியும் என்பதனை நாங்கள் உணர்ந்து கொண்டுள்ளோம்.

அதன் ஒரு கட்டமே காலிமுகத்திடல் போராட்டமாகும். நேற்றைய தினம் (09) திங்கட்கிழமை இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு கரிநாளாகும்.எங்களது இளைஞர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை காரணமாக இருநூறுக்கும் அதிகமானோர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இவர்களில் சிலர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில் அதிலிருந்தும் மீள்வதற்கு நீண்ட காலம் செல்லும்.நிராயுதபாணிகளாய் அகிம்சை வழியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த எங்கள் கூட்டத்தினர் மீது ஆளும் பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் மேற்கொண்ட தாக்குதல் எவ்விதத்திலும் நியாயமாகாது.இச்சம்பவத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும்.

காலிமுகத்திடலில் இடம்பெறும் எங்களது போராட்டத்திற்கு சட்டத்தரணிகள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட சகல துறையினரும் வழங்கிவரும் ஒத்துழைப்பை குறைத்து கணிப்பிட முடியாது.

பிரதமர் மஹிந்தவின் இராஜினாமா ஜனநாயகத்தின் உறுதிப்பாட்டிற்கு கிடைத்த முதல் வெற்றியாகும். ஜனாதிபதி கோட்டாபயவை  அப்பதவியில் இருந்து நீக்குவதற்கும், ஊழலற்ற ஆட்சியினை உறுதிப்படுத்துவதற்கும் தொடர்ச்சியாக போராட்டங்களில் ஈடுபடுவோம். துப்பாக்கி ரவைகள் எங்கள் துணிச்சலுக்கு இடையூறாகாது” என்றார்.

Tamil News