வரவு செலவுத் திட்டம்: கட்சி முடிவுக்கு மாறாக வாக்களித்த மு,கா. எம்.பிக்கள்

298 Views

வரவு செலவுத் திட்ட2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 93 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.

2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்புக்கு ஆதரவாக 153 வாக்குகளும் எதிராக 60வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையிலேயே 93 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.

வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்புக்கு எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. வாக்கெடுப்பை கோரியதனையடுத்து இலத்திரனியல் முறைப்படி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

வாக்கெடுப்பில் ஆதரவாக அரச தரப்புடன் இணைந்து பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் அநுராதபுரம் மாவட்ட எம்.பி.யான இஷாக் ரஹுமான், தேசியப் பட்டியல் எம்.பி.யான டயானா கமகே, மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளிக் கட்சிகளாகவுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் எம்.பி.க்களான ஹரீஸ், பைசல் ஹாசிம், நசீர் அஹமட், முஸ்லிம் தேசிய கூட்டணியின் புத்தளம் மாவட்ட எம்.பி.யான அலிசப்ரி ரஹீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட எம்.பி. யான முஷாரப், சுயேச்சையாக செயற்படும் எம்.பி.யான அத்துரலிய இரத்தின தேரர் ஆகியோர் வாக்களித்தனர்.

எதிராக எதிர்க்கட்சிகளான சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பு, அநுரகுமர திசாநாயக்க தலைமையிலான ஜே .வி.பி., கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஆகியன வாக்களித்த நிலையில் விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணி வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.

இதேவேளை வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவாக வாக்களிக்கபோவதில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும் இந்தக் கூட்டத்தில் எம்.எஸ்.தௌபிக் எம்.பி. கலந்து கொண்டிருந்தார் எனவும் ஏனையோர் சுகயீனம் காரணமாக கலந்துகொள்ள இயலாது என அறிவித்திருந்தனர் எனவும் தெரிவித்திருந்த நிலையில் அந்தக் கூட்டத்தில் பங்கேற்காத மூவரும் சபைக்கு வந்து வரவு செலவுத் திட்டடத்திற்கு ஆதரவாகவே வாக்களித்தனர். அதேவேளை முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி..யான தெளபிக் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட சட்டமூலம் ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி நிதி அமைச்சர் பஸில் ராஜபக்‌ஷவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் பட்டிருந்ததுடன் அதன் இரண்டாவது வாசிப்பு கடந்த 12 ஆம் திகதி நிதி அமைச்சர் பஸில் ராஜபக்‌ஷவினால் சபையில் முன்வைக்கப்பட்டு சுமார் இரு மணிநேரம் வரவு செலவுத்திட்ட உரையாற்றியிருந்தார்.

இந்நிலையில் மறுநாள் 13ஆம் திகதி சனிக்கிழமை முதல் நேற்று 22ஆம் திகதி திங்கட்கிழமை வரை ஏழு நாட்கள் வரவுசெலவுத்திட்ட இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் இடம்பெற்ற நிலையிலேயே நேற்று மாலை 5.10 மணிக்கு இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது.

இதேவேளை 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் 7 நாட்கள் நடந்த நிலையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் ,முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு தலைவர் அலி சப்ரி ரஹீம் ஆகியோர் உரையாற்றவில்லை.

இதேவேளை நேற்றைய வாக்கெடுப்பின்போது தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன், முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி..யான தெளபிக் அரச தரப்பை சேர்ந்த விஜேதாச ராஜபக்‌ஷ உள்ளிட்ட எதிர்க்கட்சி அரச தரப்பை சேர்ந்த 11 எம்.பி.க்கள் பங்கேற்கவில்லை.

2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு நேற்று நிரைவேற்றப்பட்ட ட நிலையில் இன்று 23 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் குழு நிலையிலான விவாதம் ஆரம்பமாகவிருப்பதுடன், சனிக்கிழமை உள்ளடங்கலாக டிசம்பர் 10ஆம் திகதி வரை 16 நாட்கள் விவாதத்தை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 10ஆம் திகதி மாலை 5 மணிக்கு மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

Leave a Reply