வடக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வரவு செலவு திட்டத்தில் பயனில்லை – சத்தியலிங்கம்

‘வடக்கு மாகாணத்தில் நீண்ட கால யுத்தத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட மூன்று மக்கள் குழுக்கள் உள்ள நிலையில் அவர்கள் தொடர்பில் அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்தில் எதுவும் குறைப்பிடப்படவில்லை’ என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
‘வட மாகாணத்தில் பெண் தலைமைத்துவ குடும்பங்கள், முன்னாள் போராளிகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். அவர்கள் எமது சமூகத்தில் மூன்றில் ஒரு பகுதியினராக உள்ளனர். இவர்களை முன்னேற்ற வேண்டும்’என்றும் பாராளுமன்றில் கருத்துரைத்த அவர் வலியுறுத்தியுள்ளார்.

‘எமது மாகாணம் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்காக விசேட திட்டங்களை கொண்டு வரப்பட வேண்டும்’ என்றும் பாராளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

‘2022ஆம் ஆண்டு முதல் பொருளாதார நெருக்கடி தொடர்கிறது’. ‘நாட்டில் 30 வருடங்களாக நிலவிய யுத்தம் மற்றும் நாட்டின் முறையற்ற நிதி முகாமைத்துவம், ஊழல் மோசடி மற்றும் வீண் விரயம் ஆகியன பொருளாதார பாதிப்புக்கு பிரதான காரணியாக அமைந்தன’. ‘இதனால் மக்கள் சமூக பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டனர்’ என்று பாராளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

‘இந்நிலையில் அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது’.
‘உள்நாட்டு உற்பத்தியில் 4.2 சதவீத பங்களிப்பை வடக்கு மாகாணம் வழங்குவதுடன் மேல் மாகாணம் 43.4 சதவீத பங்களிப்பை வழங்குகின்றது’. ‘அதன்படி பொருளாதார திட்டங்கள் மாகாணங்களுக்கு இடையே மாறுபட்டதாகவே உள்ளன’. ‘வடக்கு மாகாணத்தில் எந்த தொழில் துறையை எடுத்துக்கொண்டாலும் அந்த மாகாணம் கீழ் நிலையில் இருக்கின்றது’. ‘இருப்பினும் பொருளாதார விடயத்தில் அனைத்து மக்களுக்கும் சம உரிமை வழங்க வேண்டும்’ என்றும் பாராளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.