முக்கிய பேசு பொருளாக மாறியுள்ள புதுக்கடை நீதிமன்ற துப்பாக்கி சூடு – பல தகவல்களை வெளிப்படுத்திய சந்தேகநபர்!

இலங்கையில் தற்போது முக்கிய பேசு பொருளாக மாறியுள்ள கொழும்பு – புதுக்கடை நீதவான் நீதிமன்றுக்குள் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன் நீதிமன்றுக்குள் துப்பாக்கி பிரயோகத்தை நடத்தி விட்டு தப்பிச் சென்ற நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பல தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்.

இதற்கமைய, தற்போது டுபாயில் தலைமறைவாகியுள்ள திட்டமிட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப் பொருள் வர்த்தகரான கெஹெல்பத்தர பத்மா என்ற பத்மசிறி பெரேரா என்பவரின் வழிநடத்தலுக்கு அமையவே புதுக்கடை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்டமை தெரியவந்துள்ளது.

கொலைக்காக பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை நீதிமன்றத்துக்குள் கொண்டு சென்ற நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 25 வயதான இஷாரா செவ்வந்தி வீரசிங்க என்ற பெண்ணே கொலைக்கான திட்டத்தை இலங்கையில் இருந்து வகுத்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த துப்பாக்கி சூட்டுக்கு பின்னர் குறித்த பெண் தலைமறைவானதுடன் அவரை கைது செய்வதற்காக காவல்துறையினர் பொது மக்களின் உதவியை கோரியுள்ளனர். இதற்காக குறித்த பெண்ணின் உருவப் படத்தையும் காவல்துறையினர் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியுள்ளனர்.

இதேவேளை, குறித்த பெண் தொடர்பான தகவல்களை வழங்குகின்றவர்களுக்கு உரிய வெகுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பில் தற்போது கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள சந்தேகநபர், சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்கியுள்ளார். இதன்படி, குறித்த கொலையை செய்வதற்காக தமக்கு ஒன்றரை கோடி ரூபாய் வழங்குவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் அதில் முற்பணமாக இரண்டு லட்சம் ரூபாய் பணத்தை தாம் பெற்றுக் கொண்டதாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அத்துடன் துப்பாக்கி சூட்டை நடத்தி விட்டு, தாமும் தமக்கு உதவிய பெண்ணும் மருதானைக்கு சென்று அங்கிருந்து முச்சக்கர வண்டி ஒன்றில் நீர்கொழும்பு சென்றதாகவும் சந்தேகநபர் வெளிப்படுத்தினார்.
பின்னர் இருவரும் வெவ்வேறு வாகனங்களில் அங்கிருந்து பிரிந்து சென்றதாகவும் சந்தேகநபர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இதேவேளை, மஹரகம பகுதியைச் சேர்ந்த 28 வயதான சமிந்து தில்ஷான் என்ற சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று பாராளுமன்றில் வெளிப்படுத்தினார்.

புதுக்கடை நீதவான் நீதிமன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (20) முன்வைத்த கேள்விக்கு பதிலளித்த போதே பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

‘கடந்த சில நாட்களாக திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுகின்ற குழுக்களுக்கு இடையேயான மோதல் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன’ தெரிவித்தார். நேற்று (19) இடம்பெற்ற துப்பாக்கி சூடு தொடர்பில் அரசாங்கம் விசேட அவதானம் செலுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘அத்துடன் சம்பவம் இடம்பெற்று சில மணித்தியாலங்களுக்குள் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்’.

‘இந்தநிலையில் குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்வதுடன் அவர் பயணித்த வேனை செலுத்திய சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்’. ‘அதேநேரம் இந்த சம்பவத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிய மற்றுமொரு பெண்ணை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன’.
‘அதேநேரம், தேசிய பாதுகாப்புக்கு எந்த விதத்திலும் அச்சுறுத்தல் ஏற்படவில்லை’ என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.