இலங்கை அதிகாரிகள் மீதான பிரித்தானியாவின் தடை: கனேடிய நீதி அமைச்சர் வரவேற்பு

இலங்கை அரசாங்கத்தின் அதிகாரிகளுக்கு எதிராக பிரித்தானியா விதித்துள்ள தடைகளை வரவேற்பதாக கனேடிய நீதி அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறலின் மற்றுமொரு முக்கிய கட்டமாக இது அமைந்துள்ளதாக அவரது X தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய இராச்சியம் விதித்துள்ள தடை தொடர்பில் கனேடிய நீதி அமைச்சர் தனது X பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

”இலங்கை அதிகாரிகளுக்கு எதிராக ஐக்கிய இராச்சியம் தடைகளை விதித்துள்ளதை நான் வரவேற்கின்றேன். இலங்கையின் பொறுப்புக்கூறலை நோக்கிய மற்றுமொரு முக்கியமான நடவடிக்கையாக இது காணப்படும். 2023-இல் கனடா மகிந்த ராஜபக்ஸ, கோட்டாபய ராஜபக்ஸ ஆகியோருக்கு எதிராக விதித்த தடைகளை தொடர்ந்து ஐக்கிய இராச்சியம் தடைகளை விதித்துள்ளது. இலங்கையில் தண்டனையின் பிடியிலிருந்து விடுவிக்கப்படும் கலாசாரத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கும் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கும் கனடா தொடர்ந்து பாடுபடும்.”என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.