அரசினால் புறக்கணிக்கப்படும் போரதீவுப்பற்று பிரதேசம்; புலம்பெயர் தமிழர்கள் காப்பாற்ற முன்வர வேண்டும் | மட்டு.நகரான்

புலம்பெயர் தமிழர்கள்

புலம்பெயர் தமிழர்கள் காப்பாற்ற முன்வர வேண்டும்

வடகிழக்கில் யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் தமிழர்களின் வாழ்வியல் ரீதியான தாக்கம் என்பது பாரியளவில் காணப்படுகின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தின் எல்லைப்பகுதி மக்களின் வாழ்க்கையென்பது, மிகவும் வேதனைகளும் சோதனைகளும் மிகுந்ததாக காணப்படுகின்றது.

புலம்பெயர் தமிழர்கள்கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்த வரையில் 1983ஆம் ஆண்டு தொடக்கம் தொடர்ச்சியான இழப்புகளையும், வலிகளையும் சுமந்த மாகாணமாக காணப்படுகின்றது. இந்த வலிகளும், வேதனைகளும் யுத்தம் மௌனிக்கப்பட்டு 12வருடங்களைக் கடந்துள்ள போதிலும் தொடர்கின்றது.

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவானது, தமிழ் மக்கள் செறிந்துவாழும் பகுதியாகும். யுத்த காலத்தில் பல இன்னல்களை எதிர்கொண்ட பகுதியாகவும் போரதீவுப்பற்று பிரதேசம் இருக்கின்றது.

போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவானது 43கிராம சேவையாளர் பிரிவுகளைக் கொண்டதுடன் 182சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பினையும் கொண்டது. பெருமளவான நிலப்பரப்பு விவசாய நிலங்களாகக் காணப்படுகின்றது. இப்பகுதி மக்களின் வாழ்வாதாரமாக விவசாயம், மீன்பிடி, கால்நடை வளர்ப்பு, சேனைப் பயிர்ச்செய்கை என பல கிராமிய அடிப்படையான தொழில்கள் காணப்படுகின்றன.

போரதீவுப்பற்று பிரதேசத்தினைப் பொறுத்தவரையில், சுமார் 28000பேருக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இதில் சுமார் 97வீதமானவர்கள் தமிழர்களாக காணப்படுகின்றனர். இதன் காரணமாக தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டே வரும் சூழ்நிலை காணப்படுகின்றது.

போரதீவுப்பற்று பகுதியின் எல்லைப் பகுதியாக அம்பாறை மாவட்டம் காணப்படுகின்றது. இந்த எல்லைப்பகுதியில் சிங்களவர்களும், தமிழர்களும் வாழுகின்றனர். ஆனால் சிங்களவர்கள் வாழும் பகுதிகள் பாரிய அபிவிருத்தியைக் கண்ட பகுதியாகவும், தமிழர்கள் வாழும் பகுதியானது எந்தவித அபிவிருத்தியையும் காணாத பகுதியாகவும் காணப்படுகின்றது.

புலம்பெயர் தமிழர்கள்போரதீவுப்பற்றுப் பகுதியினைப் பொறுத்த வரையில் சுகவீனமுறும் ஒருவரை சுமார் 20 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை அல்லது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் நிலையே இதுவரையில் இருந்து வருகின்றது. போரதீவுப்பற்றில் இதுவரையில் சகல வசதிகளும் கொண்ட ஒரு வைத்தியசாலை இதுவரையில் அமைக்கப்படவில்லை. சில இடங்களில் பிரதேச சுகாதார வைத்தியசாலைகள் உள்ளபோதிலும், அங்கு காய்ச்சல் உட்பட சிறிய நோய்களுக்கு மருந்து பெறக்கூடிய வசதிகள் மட்டுமே காணப்படுகின்றது. போரதீவுப்பற்றில் சகல வசதிகளையும் கொண்ட வைத்தியசாலை ஒன்றினை அமைக்குமாறு யுத்தம் மௌனிக்கப்பட்ட காலம் தொடக்கம் தமிழ் மக்களினால் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், இதுவரையில் எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை.

இதேபோன்று கல்வி நடவடிக்கைகளும் மிகமோசமான நிலையினை எதிர் கொள்வதற்கு குறித்த பிரதேசத்தில் முறையான கல்வி அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட வில்லையென்பதும் நீண்டகால பிரச்சினையாக இருந்து வருகின்றது. குறிப்பாக போக்குவரத்து வசதிகள் இல்லாத நிலை, கிராமங்கள் தூரங்களில் உள்ள காரணங்களினால் கல்வி பெறுவது என்பது ஒரு குறிப்பிட்ட வயதினருக்கு மட்டுமே கிடைக்கின்றது.

போரதீவுப்பற்றினைப் பொறுத்தவரையில், 32பாடசாலைகள் உள்ளன. இவற்றில் இரண்டு பாடசாலைகள் மட்டுமே 01ஏபி பாடசாலையாகவுள்ளன. உயர்தரம் கற்கும் ஒரு மாணவன் 20கிலோமீற்றர் பயணம் செய்து உயர்தரம் கற்கவேண்டிய நிலை காணப்படுகின்றது. இதன் காரணமாக சாதாரண தரத்துடனேயே பாடசாலை கல்வியை இடைநிறுத்த வேண்டிய துர்ப்பாக்கிய நிலையினை இங்கு காண முடிகின்றது.

ஒரு இனத்தின் இருப்பு என்பது கல்வியிலும் பொருளாதாரத்திலுமே தங்கியுள்ளது. ஆனால் அந்த இரண்டையும் மேம்படுத்துவதற்கான எந்த நடவடிக்கையும் இதுவரையில் முன்னெடுக்கப்படாமை இந்த நாட்டில் தமிழர்களின் நிலைமையினை வெளிப்படுத்துகின்றது.

புலம்பெயர் தமிழர்கள்யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் சர்வதேச நாடுகள் வடகிழக்கு பகுதிகளில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கட்டியெழுப்புவதற்கு பாரிய நிதிகளை வழங்கிய போதிலும், அந்த நிதிகளில் சிறிய பகுதிகளே யுத்ததினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வழங்கப்பட்டன. ஏனைய நிதிகள் தெற்கிற்கு கொண்டு செல்லப்பட்டன. அதன் காரணமாகவே போரதீவுப்பற்று போன்ற பிரதேசங்களில் எந்தவித அபிவிருத்திகளும் முன்னெடுக்கப்படாமல் சர்வதேச சமூகத்திற்கு காட்டுவதற்காக மட்டும் கண்துடைப்புகள் முன்னெடுக்கப்பட்டன.

எவ்வாறாயினும், போரதீவுப்பற்றில் சகல வசதிகளும் கொண்ட பாடசாலையானது மாணவர்கள் தங்கியிருந்து கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் அமைக்கப்பட வேண்டும். அவ்வாறு அமைக்கப்படும் போதே பின்தங்கிய பகுதி மாணவர்களும் முழுமையான கற்றல் செயற்பாடுகளை பெறுவதற்கான சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திக் கொடுக்க முடியும்.

இதேபோன்று போரதீவுப்பற்று பிரதேசத்தின் போக்குவரத்து செய்வதற்கான வசதிகள் என்பதும் மிகவும் கஸ்ட நிலையிலேயே உள்ளன. போரதீவுப்பற்று பிரதேசத்தின் நகர் பகுதிக்கு இலகுவாக செல்லக்கூடிய பகுதிகளில் உள்ள வீதிகள் புனரமைக்கப் பட்டுள்ள போதிலும், பெரும்பாலான பகுதிகளில் உள்ள வீதிக் கட்டமைப்புகள் இன்னும் யுத்ததிற்கு முந்திய நிலையிலேயே காணப்படுகின்றன.

குறிப்பாக வெல்லாவெளி-வக்கியல்ல பிரதான வீதி, பாலையடிவட்டை-காக்காக்காச்சிவட்டை வீதி உட்பட பல முக்கிய வீதிகள் இன்னும் பயணம் செய்யமுடியாத நிலையிலேயே உள்ளன. இன்று மட்டக்களப்பு நகரில் உள்ள பல கொங்கிறீட் வீதிகளின் மேலால் காபட் வீதிகள் அமைக்கப்பட்டுவரும் நிலையில், பொதுமக்கள் பயணிக்க முடியாத நிலையில் உள்ள வீதிகளை புனரமைப்பதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையெனவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

போரதீவுப்பற்றில் மண் அகழ்வுகளுக்கு அனுமதி வழங்கும் அரசநிர்வாகம் அதன்மூலம் மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் தொடர்பில் கவனம் செலுத்தாத நிலையேயிருந்து வருகின்றது. மக்களின் நிலைமைகள் தொடர்பில் சிந்திக்காமல் மண் மாபியாக்களின் நலன்களை மட்டும் பார்க்கும் நிலையே இப்பகுதியில் காணப்படுகின்றது. விவசாயிகள் அதிகளவில் வாழும் குறித்த பகுதி ஊடாக விதைப்பு காலத்திலும் அறுவடை காலத்திலும் விவசாயிகள் பெரும் கஸ்டங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கின்றனர். குறித்த வீதியின் ஊடாக பஸ் மற்றும் ஏனைய போக்குவரத்துகள் மிகவும் கஸ்டமான நிலையிலேயே முன்னெடுக்கப்படுவதாகவும் கர்ப்பிணிப் பெண்களை ஏற்றிச்செல்லும்போது பெரும் கஸ்டங்களை அவர்கள் எதிர்கொள்வதாகவும் சாரதிகள் தெரிவிக்கின்றனர்.

ஒரு பிரதேசத்தின் வளர்ச்சியானது, சிறந்த போக்குவரத்துக்கான வசதிகள் ஏற்படுத்தப்படும்போது ஏற்படுகின்றது. சிறந்த வீதி கட்டமைப்புகள் உருவாக்கப்படும் போது பொருளாதார வளர்ச்சியும் ஏற்படும். ஆனால் அந்த நிலையினை இதுவரையில் ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்காமையே இன்னும் போரதீவுப் பற்று பிரதேசம் வளர்ச்சி யடையாமைக்கான காரணமாகவும் உள்ளது.

நீர்வளம், நிலவளம் உட்பட அனைத்து வளங்களும்கொண்ட இப்பகுதியில் இதுவரையில் ஒரு தொழிற்சாலை அமைக்கப்படவில்லை. யுத்ததிற்கு முந்தியதாக போரதீவுப்பற்றில் காணப்பட்ட ஓட்டுத் தொழிற்சாலையினைக்கூட புனரமைத்து மீள செயற்படுத்த முடியாத நிலையேயுள்ளது. இப்பகுதியில் உள்ள ஓட்டுத் தொழிற்சாலையானது, யுத்தத்திற்கு முன்னர் மிகவும் பிரபல்யமானது. குறித்த தொழிற்சாலையில் உற்பத்தியாகும் ஓடுகளுக்கு தனிச்சிறப்பு இருந்ததன் காரணமாக அக்காலத்தில் பிரபலமானதாகயிருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எனினும் குறித்த ஓட்டு தொழிற்சாலையினை இயங்கவைக்க எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை. அதனை மீள இயங்கச் செய்வதன் மூலம் அப்பகுதியை சேர்ந்த இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்பினை ஏற்படுத்துவதன் மூலம் பொருளாதார ரீதியான மாற்றத்தினையும் ஏற்படுத்த முடியும்.

புலம்பெயர் தமிழர்கள்இதேபோன்று போரதீவுப்பற்றில் சுமார் 30000 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகளில் நெற்செய்கை முன்னெடுக்கப்படுகின்றது. ஆனால் இதுவரையில் இப்பகுதியில் நெல் குற்றும் ஆலையொன்று அமைக்கப்படாத காரணத்தினால் அறுடை செய்யும் நெல்லை குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய துர்ப்பாக்கிய நிலையுள்ளது. குறித்த பகுதியில் நெல் ஆலையொன்று அமைக்கப்படும்போது வருடாந்தம் அங்கிருந்து பாரியளவில் அரிசி ஏற்றுமதியை முன்னெடுக்கக் கூடிய சூழ்நிலை காணப்படுகின்றது. அதுதொடர்பில் யாரும் சிந்திப்பதாகயில்லை. இப்பகுதியில் அரிசியாலை அமைக்கப்படும்போது தொழில்வாய்ப்பு ஏற்படுவதுடன் விவசாயிகள் தங்கள் அறுவடைகளுக்கான சரியான வருவாயையும் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது.

தமிழர்களின் கல்வியில் பொருளாதாரத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலமே தமிழர்களின் இருப்பு என்பதை நிலைநிறுத்த முடியும். இப்பகுதிகளில் முதலீடுகளை செய்வதன் மூலம் யாரும் நஸ்டம் அடையப் போவதில்லை. அதன்மூலம் அதிகளவான இலாபத்தினையே அடைய முடியும்.

அரசாங்கத்தினால் இப்பகுதி புறக்கணிக்கப்படுகின்ற போதிலும் புலம்பெயர் தேசத்தில் உள்ள மக்கள் இங்கு முதலீடுகளை முன்னெடுப்பதற்கு முன்வருவார் களானால் இப்பகுதியினை எதிர்காலத்தில் பாதுகாப்பதற்கான அடித்தளமாக அமையும். இப்பகுதியை விட்டு வேறு பகுதிகளுக்கு தமிழ் மக்கள் இடம்பெயர் வார்களானால் சிங்கள மக்களின் தொகை இப்பிரதேச செயலகப்பிரிவில் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளது. உரியவர்கள் இதனை கருத்தில் கொண்டு செயற்பாடுகளை முன்னெடுக்க முன்வர வேண்டும்.

Tamil News

2 COMMENTS

  1. […] புலம்பெயர் தமிழர்கள் காப்பாற்ற முன்வர வேண்டும் வடகிழக்கில் யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் தமிழர்களின் வாழ்வியல் ரீதியான தாக்கம் என்பது பாரியளவில்மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும் https://www.ilakku.org/weekly-epaper-171-february-27/ https://www.ilakku.org/  […]

Leave a Reply