13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த முன் மாகாண சபைத் தேர்தலை ஜனாதிபதி நடத்த வேண்டும் – பேராசிரியர் பீரிஸ்

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற உண்மை நோக்கம் காணப்படுமாயின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும்.13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு நாட்டில் இல்லாத பிரச்சினைகளை ஜனாதிபதி தோற்றுவிக்கிறார் என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஜனநாயக நாட்டில் மக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்றான வாக்குரிமையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு.தேர்தலை பிற்போடுவது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அடிப்படை கொள்கையாக காணப்படுகிறது. ஏற்கெனவே ஒரு வருட காலம் பிற்போடப்பட்டுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலை தொடர்ந்து பிற்போட அரசாங்கம் மேற்கொள்ளாத சூழ்ச்சிகள் ஏதும் இல்லை.சிறுபிள்ளை தனமாக அரசாங்கம் செயற்படுகிறது.

தேர்தலை பிற்போட அரசாங்கம் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்த நிலையில் தற்போது தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக குறிப்பிடப்படுகிறது. தேர்தல்கள் ஆணைக்குழு. ஆணைக்குழுவின் உறுப்பினர் பி.எஸ்.சார்ல்ஸ் பதவி விலகியமைக்கான காரணம் இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதற்கு திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்களை நியமிக்க அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர் நியமனம் இடம்பெற்றாலும்,புதிய உறுப்பினர்கள் மார்ச் மாதம் 09 ஆம் திகதி தேர்தலை நடத்தும் நடவடிக்கைகளை முறையாக முன்னெடுக்க வேண்டும்.

 75 ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னர் இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார். அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இனப்பிரச்சினைக்கு தீர்வாகவே மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது.

மாகாண சபை தேர்தலை நடத்த முடியாத அளவி;ற்கு சட்ட சிக்கல் காணப்படுகிறது. மாகாண சபை தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளமைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொறுப்புக் கூற வேண்டும். இனப்பிரச்சினைக்கு உண்மையில் தீர்வு காண வேண்டுமாயின் மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

நாடு பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார். 13 ஆவது திருத்தத்திற்கு மகா சங்கத்தினர் உட்பட தெற்கு அரசியல்வாதிகள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்துகிறார்கள்.பெருளாதார பாதிப்புக்கு மத்தியில் இனங்களுக்கிடையில் தேவையில்லாத பிரச்சினைகளை ஜனாதிபதி தோற்றுவிக்கிறார். மக்களாணை இல்லாத ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது என்றார்.