ஜோஷிமத்: நிலத்தில் அமிழும் நிலம்

Uttarakhand: Why is Joshimath 'sinking'? Experts say warning bells started  ringing from 1976 - BusinessToday

“இயற்கையின் மீது நம் மாந்தக்குலம் ஈட்டிய வெற்றிகளைச் சொல்லி நம்மை நாம் பாராட்டிக்கொள்ள வேண்டாம். ஒவ்வொரு வெற்றிக்கும் இயற்கை நம்மைப் பழிக்குப் பழி வாங்குகிறது. ஒவ்வொரு வெற்றியும் முதலில் நாம் எதிர்பார்த்த வெற்றிகளைக் கொண்டுவருவது மெய்தான். ஆனால் இரண்டாவதாகவும் மூன்றாவதாகவும் அது அறவே வேறான எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்துகிறது. இந்த விளைவுகள் முதலில் கிடைத்ததைப் பல நேரம் ஒழித்து விடுவதே உண்மை….”

இது 1876ஆம் ஆண்டில் பிரெடெரிக் எங்கெல்ஸ் தந்த எச்சரிக்கை. (கட்டுரை: மாந்தக் குரங்கிலிருந்து மாந்தராக மாறிச் செல்வதில் உழைப்பு வகித்த பங்கு)

இன்று இந்த 2023ஆம் ஆண்டில் வட இந்தியாவில் இமயமலைத் தொடருக்கு நடுவில் உத்தரகாண்டு மாநிலத்தில் ஜோஷிமத் என்ற அழகிய சிறு நகரத்தை நிலமடந்தை விழுங்கிக் கொண்டிருக்கிறாள். இயற்கைச் சீற்றமும் அதனால் ஏற்படும் பேரழிவுகளும் இந்த மாநிலத்துக்கும் ஊருக்கும் புதியவை அல்ல என்றாலும் இம்முறை மாந்தர்தம் பேராசையாலும் செயற்கையான வளர்ச்சி வெறியாலும் இந்த அவலம் நேரிட்டிருப்பதாக வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

உத்தரகாண்டு மாநிலத்துக்கு இயற்கைப் பேரிடர்கள் புதியவை அல்ல. 1880க்கும் 1999க்கும் இடைப்பட்ட காலத்தில் நிலநடுக்கங்களும் நிலச்சரிவுகளுமான ஐந்து நிகழ்ச்சிகளில் மட்டும் 1,300க்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

2000 – 2009 காலத்தில் மட்டும் நிலச் சரிவுகளாலும் முகில் வெடிப்புகளாலும் திடீர் வெள்ளப் பெருக்குகளாலும் 433 உயிர்கள் பறிபோனதாக அதிகாரமுறைத் தரவுகள் சொல்கின்றன. 2010 – 2020 ஆண்டுகளுக்கிடையே மோசமான பருவநிலையின் கொடுந்தாக்கத்தால் 1,312 உயிர்கள் பலியாகின. சற்றொப்ப 400 சிற்றூர்கள் பாதுகாப்பான வாழ்க்கைக்கு உகந்தவை அல்ல என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டில் மட்டும் நிலச்சரிவுகளும், திடீர் வெள்ளப்பெருக்குகளும், பனிச் சரிவுகளும் 300க்கு மேற்பட்ட உயிர்களைக் காவு கொண்டன.

“மழைப் பொழிவில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் இதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று. இந்த மாற்றங்களுக்குக் காலநிலை மாற்றமே காரணம்” என்று பேரிடர் மேலாண்மை வல்லுநர்கள் கருதுகின்றனர். இத்துடன் இவ்வளவு இடர்முனைப்பான பகுதிகளில் மனிதர்களின் கண்மூடித்தனமான வளர்ச்சித் திட்டங்களும் சேர்ந்து கொண்டதன் விளைவே ஜோஷிமத் அமிழ்வு என்னும் பேரிடருக்கு மூல காரணம் என்று சூழலியல் ஆர்வலர்கள் சுட்டிக் காட்டுகின்றார்கள்.

கடல் நீர் உள்வாங்குதல் பலநேரம் நாம் கண்டிருப்பதுதான், மண்சரிவுகளும் கூட மலைப் பகுதிகளில் புதியவை அல்ல. ஆனால் ஜோஷிமத்தில் நாம் கண்டு வருவது வேறு வகையான நிகழ்வு. இதனை நில அமிழ்வு (land subsidence) என்று கூறுவர். இதில் நிலம் மெல்ல மெல்லக் கீழிறங்கும். ஊரே அடித்தளமில்லாத கட்டடம் போல் உள்வாங்கிச செல்லும். இதுதான் ஜோஷிமத்தில் நடந்து கொண்டிருக்கிறது.

இந்த நில அமிழ்வினால் இப்போதைக்கு ஜோஷிமத்தில் கால் பகுதி பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக உத்தரகாண்டு முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி சொல்கிறார். சற்றொப்ப 25,000 மக்கள் வாழும் ஜோஷிமத் நகரத்தில் 2.5 சதுர கிலோமீட்டர் பரப்பில் 4,500 கட்டடங்கள் உள்ளன. இவற்றில் இது வரை 800க்கு மேற்பட்ட கட்டடங்களில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன. பாதுகாப்பற்ற கட்டடங்களை அதிகாரிகள் இடித்து வருகின்றார்கள்.

இந்த அமிழ்வைத் தடுத்து ஊரைக் காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை இல்லை என்று நிலக்கூறியல் வல்லுநர்கள் கூறுகின்றார்கள். மலைச் சரிவில் மரங்கள் அடர்ந்து பசும் போர்வையாக அமைந்திருக்குமானால் மண்சரிவையும் நில அமிழ்வையும் தடுக்கலாம். இருந்த மரங்களை எல்லாம் valarcjhchipuudhவளர்ச்சி பூதம் விழுங்கி முடித்து விட்டது. இப்போது திடீரென்று ஒரு நாளில் பசும்போர்வையை மந்திரத்தால் வரவழைக்க அலாவுதீனின் அற்புத விளக்கு யாரிடமும் இல்லை.

ஒரு நூற்றாண்டுக்கு மேல் முன்னதாக நடந்த நிலநடுக்கத்தால்  மண்சரிந்து அந்த மண்மேட்டில்தான் ஜோஷிமத் நகரமே கட்டப்பெற்றது. அது நிலநடுக்க இடர்முனைப்பான ஒரு பகுதியில் அமைந்திருப்பது வேறு.

இப்படியொரு பகுதியில் இந்திய அரசின் ‘வளர்ச்சி’ வெறி எப்படியெல்லாம் செயல்பட்டுள்ளது, பாருங்கள்.

1976ஆம் ஆண்டே ஜோஷிமத்தில் திண்ணிய கட்டடங்கள் கட்டக் கட்டுபாடுகள் விதிக்க வேண்டும் என்று அரசு அறிக்கை முன்மொழிந்தது. மண்ணின் சுமைதாங்கும் திறனை ஆய்வு செய்த பிறகே கட்டுமானப் பணிக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றது. ஆனால் அரசே என்ன செய்தது பாருங்கள்.

திட்டவரைமுரையற்ற கட்டுமானத்துக்கு இடமளித்தது மட்டுமல்ல, முறையான வடிகால் வசதி செய்யவும் தவறியது. நீர்மின் திட்டநிலையங்கள் அமைத்தது. இந்திய அரசுக்குச் சொந்தமான தேசிய மின்னாக்க நிறுவனம் (NTPC) தபோவன் விஷ்ணுகாத் நீர்மின் திட்டம் என்ற ஒன்றை அமைத்து வருகிறது. இந்தத் திட்டத்துக்காக மலையைக் குடைந்து அமைக்கப்பட்ட குகைப் பாதைதான் ஜோஷிமத்தின் நில அமிழ்வுக்கு முகன்மைக் காரணம் என்று உள்ளூர் மக்கள் கருதுகின்றார்கள்.

நிலத்தடி நீரை மிகையாக உறிஞ்சி எடுப்பதும், நிலத்தடி நீர்ப்படுகைகளை வற்றச் செய்வதும் கூட நில அமிழ்வுக்குக் காரணமாகக் கூடும் என்று வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இந்தோனேசியத் தலைநகர் ஜகர்த்தா உலகிலேயே மிக விரைவாக அமிழ்ந்து கொண்டிருக்கும் நகரமாக இருப்பதற்கு இதுவே காரணம் எனப்படுகிறது. உலக அளவில் 80 விழுக்காட்டுக்கு மேல் நில அமிழ்வுக்குக் காரணமாயிருப்பது மிகையளவில் நிலத்தடி நீரை உறிஞ்சுவதுதான் என்று அமெரிக்க நிலக் கூறியல் ஆய்வகம் சொல்கிறது.

ஜோஷிமத் சிறிய நகரமே என்றாலும், பத்ரிநாத் போன்ற புனிதத் தலங்களுக்கு நுழைவாயிலாகத் திகழ்கிறது. சில காலம் முன்பு இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திர மோதி பத்ரிநாத்தில் வழிபாடு செய்யும் காட்சி படம்பிடிக்கப்பட்டு விரிவாக விளம்பரம் செய்யப்பட்டது. இவ்வகையில் ஜோஷிமத் முக்கியச் சுற்றுலாத் தலமாக இருப்பதால் பெருமளவிலான நீர்த் தேவையை சமாளிக்க நிலத்தடி நீர் ஒட்ட உறிஞ்சப்படுவதும் இப்போதைய அவலத்துக்கான காரணங்களில் ஒன்று.

இந்திய அரசின் ‘வளர்ச்சி’ வெறியோடு இந்து மதவெறியும் சேர்ந்து கொண்டால் என்னாகும்? அயோத்தியில் பாபர் மசூதியை அநியாயமாக இடித்துத் தரைமட்டமாகிய இடத்தில் இராமர் கோயில் கட்டுவது என்ற மதவெறித் திட்டத்தோடு நாடெங்கும் புனித யாத்திரைத் தலங்களை மேம்படுத்தி இந்துக் கடவுளர் மேல் பக்தி வளர்த்து மதவாத அரசியலுக்குத் தூபமிடுவதும் இந்துத்துவ ஆற்றல்களின் திட்டம்தான். இந்தத் திட்டத்தின் ஒரு கூறுதான் நான்கு புனித யாத்திரைத் தலங்களை இணைக்கும் ‘சார் தாம்’ சாலைத் திட்டமாகும். இதன் ஒரு பகுதியாக ஜோஷிமத் ஊடாக புறவழிச் சாலை அமைக்கப்பட்டு வந்தது. மக்கள் போராட்டங்களுக்குப் பின் இந்தப் பணி நிறுத்தபட்டுள்ளது. போராடியவர்களும் இந்துக்களே! இந்துக் கோயிலுக்குப் புனித யாத்திரை சென்று சாமி கும்பிடுவதற்கும் மண்ணில் அமிழ்ந்து போய் விடாமல் உயிரோடிருக்க வேண்டுமல்லவா?

இந்திய அரசைப் பொறுத்த வரை ஜோஷிமத் துயரத்திலிருந்து படிப்பினை கற்றுத் தன் ‘வளர்ச்சி’த் திட்டங்களை மீளாய்வு செய்வதற்கு மாறாக உண்மைச் செய்திகள் வெளிவராமல் தடுப்பதில்தான் கண்ணும் கருத்துமாகச் செயல்படுகிறது. இது சீன எல்லையோர நகரம் என்று சாக்குச் சொல்கின்றனர். பாதுகாப்புக் காரணங்கள் சொல்லி அகக் கட்டமைப்பு என்ற பெயரில் புதுப்புதுக் கட்டுமானங்கள் வரப் போகின்றன என்று பொருள்!

ஜோஷிமத் துயரம் உத்தரகாண்டுக்கும் இந்தியாவுக்கும் மட்டுமல்ல, உலகெங்கும் புதுத் தாரளிய வளர்ச்சி வெறி கொண்டு அலையும் ஒவ்வொரு நாட்டுக்கும் எச்சரிக்கையே!

தோழர் தியாகு

(பொதுச்செயலாளர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்)