மட்டக்களப்பு: ஊடகவியலாளரிடம் குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணை

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றிய பொருளாளரும் சுதந்திர ஊடகவியலாளருமான புண்ணியமூர்த்தி சசிகரன் இன்று மட்டக்களப்பு  காவல் துறை   குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் கொல்லப்பட்ட இந்திய மீனவர்களுக்கு அஞ்சலி நிகழ்வு நடாத்தப்பட்டது தொடர்பில் இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டதாக சசிகரன் தெரிவித்தார்.

மேலும் தான் ஓரு ஊடகவியலாளராக கடமையாற்றிவரும் நிலையில், குறித்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்ததாகவும் ஆனால் அந்த நிகழ்வினை தான் நடாத்தியதாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

ஊடகவியலாளர்கள் என்ற பெயரில் இலங்கைக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுப்பதாக அறியக்கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு தன்னிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் ஆனால் தாங்கள் இந்த நாட்டுக்கு எதிராக என்றும் செயற்படவில்லையெனவும் அவர் தெரிவித்தார்

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் ஊடகவியலாளர்களின் செயற்பாடுகளை கட்டுபடுத்தும் வகையில் அடிக்கடி முன்னெடுக்கப்படும் இவ்வாறான  விசாரணைகளை மிகவும் வன்மையாக கண்டிப்பதாகவும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்  தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் மீது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் அழுத்தங்களுக்கு எதிரான குரல்கொடுக்க ஊடக அமைப்புகள் முன்வரவேண்டும் எனவும்  அச்சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலக்கு இந்த வார மின்னிதழ் 137

ilakku Weekly Epaper 137 July 04 2021 மட்டக்களப்பு: ஊடகவியலாளரிடம் குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணை