இலங்கையைக் காப்பாற்ற பசிலிடம் உள்ள உபாயம்? – அகிலன்

ஜனாதிபதியின் சகோதரரும், ஆளும் பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகருமான பசில் ராஜபக்‌ச அடுத்த வாரம் பாராளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்க வுள்ளார் என்ற செய்தி தான் கொழும்பு அரசியலில் இந்த வாரப் பரபரப்பு. ராஜபக்‌ச சகோதரர்களில் அரசியல் அதிகாரப் பதவிகள் எதிலும் இல்லாத ஒருவராக பசில் இருந்தாலும், நாட்டின் பொருளாதார அபிவிருத்திக் குழுவின் தலைவர் என்ற முறையில், அதிகாரத்துடன் கூடிய ஒருவராகவே அவர் இருக்கின்றார். அதனை விட, ஆளும் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் என்ற முறையிலும், சக்தி வாய்ந்த ஒருவராக அவர் இருக்கின்றார்.

ஆனால், இப்போது அரசியல் அதிகாரம் மிக்க பதவி ஒன்றை அவருக்குக் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஆளும் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கின்றது. ஆளும் பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் என்ற முறையில் மட்டுமன்றி, கோத்தாபயவின் பதவிக் காலம் முடிவடைந்த பின்னர் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக பசில் போட்டியிடுவார் என்ற எதிர் பார்ப்புகளும், அவரது பாராளுமன்றப் பிரவேசத்துக்குக் காரணமாக இருக்கலாம். அதனை விட மற்றொரு காரணமும் சொல்லப் படுகின்றது. அது அதிகரித்து வரும் சர்வதேச அழுத்தங் களிலிருந்து இலங்கையைப் பாதுகாப்பதற்கான ஒரு உபாயத்துடன் பசில் வந்திருப்பதாகவும் சொல்லப் படுகின்றது.

பின்போடப்படுமா?

அமெரிக்காவிலிருந்து கொழும்பு திரும்பிய அவர், அவரது இரண்டு வார ‘தனிமைப் படுத்தல்’ காலம் முடிவடைந்தவுடன் அடுத்த செவ்வாய் கிழமை பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்பார் என முதலில் சொல்லப்பட்டது. ஆனால், இப்போது ஆளும் கூட்டணிக்குள் உருவாகி யிருக்கும் புயல் காரணமாக, அவரது பதவியேற்பு பின்போடப் படலாம் எனத் தெரிகின்றது. இரண்டு தினங்களுக்கு முன்னர் – வெள்ளிக் கிழமை இரவு கொழும்பில் ராஜபக்சக்கள் சந்தித்துப் பேசியிருக்கின்றார்கள். அதன் போது, பசிலின் மீள் பிரவேசம் அவருக்கான அமைச்சுப் பதவி, ஆளும் கூட்டணிக்குள் உருவாகி யிருக்கும் கொந்தளிப்பை எவ்வாறு எதிர் கொள்வது என்பன குறித்து பேசப் பட்டிருக்கின்றது.

பா.உறுப்பினராகப் பதவியேற்றுக் கொண்ட உடனடியாகவே அமைச்சர் பதவி ஒன்றும் அவருக்காகக் காத்திருப்பதாகச் சொல்லப் படுகின்றது. பிரதமர் மகிந்த ராஜபக்‌ச வசம் தற்போதுள்ள நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுத் தான் பசில் ராஜபக்‌சவுக்கு வழங்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப் படுகின்றது. அதன் மூலமாக ஏனைய அமைச்சுக்களையும் அவர் கட்டுப் படுத்துவதற்கு முற்படலாம். பிரதமருக்கு அடுத்ததாக அதிகாரம் மிக்கவராக பசில் இதன் மூலம் முன்னிலைப் படுத்தப்படுவார்.

பசில் ராஜபக்‌சவுக்காக தமது பதவிகளைத் துறப்பதற்கு ஆளும் கட்சியின் எம்.பி.க்கள் பலர் தயாராக இருப்பதாகச் சொல்லப் படுகின்றது. சில தினங்களுக்கு முன்னர் கொழும்பில் ஊடகச் சந்திப்பு ஒன்றை நடத்திய பொது ஜன பெரமுன எம்.பி. டிலான் பெரேராவும் இது குறித்து பேசி யிருந்தார்; “நெருக்கடி மிக்க நிலையில் பசில் ராஜபக்‌ச பாராளு மன்றத்திற்கு வர வேண்டும் என்பது பொதுவான நிலைப் பாடாகும். சாதாரணமாக பாராளு மன்றத்திற்குச் சென்றவர்கள் அந்தப் பதவியை இலகுவில் விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.  ஆனால் பசில் ராஜபக்‌ச பாராளு மன்றம் வருவதற்காக தங்களது ஆசனத்தை தியாகம் செய்ய முண்டியடிக்கின்றனர்” என அவர் கூறியிருந்தார்.

20 ஆவது திருத்தம்

download 4 இலங்கையைக் காப்பாற்ற பசிலிடம் உள்ள உபாயம்? - அகிலன்

பசில் ராஜபக்‌ச பாராளு மன்றம் வருவதற்குக் காணப் பட்ட இறுதித் தடையான, “இரட்டைப் பிரஜாவுரிமை” விவகாரம் அரசியல் அமைப்புக்கான 20 ஆவது திருத்தத்தின் மூலமாக நீக்கப்பட்டு விட்டது. கோட்டாபய ராஜபக்‌ச தனது இரட்டைப் பிரஜா வுரிமையை ரத்துச் செய்து ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால், பசில் இரட்டைப் பிரஜாவுரிமையை ரத்துச் செய்ய விரும்ப வில்லை. இந்த நிலையில், இரட்டைப் பிரஜா வுரிமையுடனேயே பசில் ராஜபக்‌ச இப்போது பாராளு மன்றம் வரப் போகின்றார். 20 ஆவது திருத்தம் அதற்கு வழி கோல்கின்றது.

பசில் ராஜபக்‌சவின் அரசியல் பிரவேசத்து க்காகவே 20 ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்ட ஒன்றாகத் தோன்றினாலும், உடனடியாக பாராளு மன்றத்துக்குள் அவர் பிரவேசிக்க வில்லை. தன்னுடைய நேரத்துக்காக காத்திருந்தவராகவே பசில் பாராளு மன்றத்துக்குப் மீண்டும் பிரவேசிக்கின்றார். ரணில் விக்கிரமசிங்க போல தன்னுடைய வருகையின் முக்கியத்துவத்தை உணர்த்து வதற்கான தருணம் ஒன்றுக்காக அவர் காத்திருந் ததாகவே தெரிகின்றது.

பசிலின் பாராளுமன்றப் பிரவேசத்துக்குப் பின்னரே இலங்கை அரசியலில் பொற் காலம் ஆரம்பமாகின்றது என அரசாங்கத் தரப்பு எம்.பி.க்களும், அமைச்சர்களும் கூறி வருகின்றார்கள். அமெரிக்காவில் ஒரு மாத காலத்தை செலவிட்ட பசில் ராஜபக்‌ச, இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டி எழுப்புவதற்கான உபாயங்களை வகுத்துக் கொண்டிருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னர் மகிந்த ராஜபக்‌சவின் ஆட்சிக் காலத்திலும் அவர் பொருளாதாரத்தைச் சிறப்பாகக் கையாண்டவர் என்ற முறையில், தற்போது மோசமாகப் பாதிக்கப்பட்டடுள்ள பொருளாதாரத்துக்கு புத்துயிர் கொடுப்பதற்கு அவர் வரவேண்டும் என பொதுஜன முன்னணி உறுப்பினர்கள் கூறுகின்றார்கள்.

பொருளாதார நெருக்கடி

பசில் ராஜபக்‌ச பாராளு மன்றத்துக்குப் பிரவேசிக்க வேண்டும் என அரசாங்கத் தரப்பு எம்.பி.க்கள் தொடர்ச்சியாகவே கோரி வருகின்றார்கள். பொருளாதாரத்தை தூக்கி நிமிர்த்து வதற்கான மந்திரம் பசிலிடம் மட்டும்தான் இருக்கின்றது என்பது தான் அவர்களுடைய கருத்து. குறிப்பாக முதலீடுகள், ஐ.எம்.எப். போன்ற சர்வதேச நிதி நிறுவனங்களைக் கையாள்வதற்கான திறமை -உபாயங்கள் பசில் ராஜபக்சவுக்கு மட்டும்தான் கைவந்த கலை என ஆளும் கட்சி எம்.பி. க்கள் சிலர் நம்புகின்றார்கள். நம்புவது மட்டுமன்றி, அதனை வெளிப்படையாகவும் பத்திரிகையாளர் மாநாடுகளில் சொல்லி வருகின்றார்கள்.

நாட்டுக்குப் பெருமளவு வெளி நாட்டுச் செலாவணியைத் தேடித் தந்த உல்லாசப் பயணத் துறை உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் பாதிப்பை எதிர் கொண்டது. அதன் பாதிப்பிலிருந்து மீள்வதற்கு முன்னதாகவே, பெருந் தொற்றாக உருவெடுத்த கொரோனா பொருளாதாரத்தை மோசமாகப் பாதித் திருக்கின்றது. வெளி நாடுகளில் – குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் பார்த்த ஆயிரக் கணக்கானவர்கள் தொழில் இழந்து வீடு திரும்பி விட்டனர். உல்லாசப் பயணத் துறை படுத்து விட்டது. இந்த இரண்டும் இலங்கையின் பொருளா தாரத்தில் முக்கிய பங்கை வகிப்பன.

இந்தப் பின்னணியில் பொருளாதார அபிவிருத்திக்கு சீனாவை மட்டும் நம்பியிருக்க முடியாது என்ற கருத்து அரசாங்கத்துக்கு உள்ளேயே பலமாக உருவாகியுள்ளது. காரணம் – சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்கும் நிலையில் மேற்கு நாடுகளின் அழுத்தங்கள் அதிகரிக்கின்றன. மேற்கு நாடுகள் இதற்குப் பல்வேறு காரணங்களைச் சொல்லிக் கொண்டாலும், அதற்குப் பின்னணியில் இருப்பது சீனாவுடனான இலங்கையின் நெருக்கம்தான் என்பது அனைவருக்கும் தெரியும்! இந்தப் பின்னணியில், பொருளாதார நெருக்கடியில் இருந்தும், வெளி நாட்டு அழுத்தங்களில் இருந்தும் இலங்கையைப் பாதுகாப் பதற்கான ஒரு உபாயத் துடன்தான் பசில் கொழும்பு திரும்பி யிருப்பதாக சில தகவல்கள் கூறுகின்றன.

பசிலிடம் உள்ள உபாயம்?

21 60ae1f7ae6d5d இலங்கையைக் காப்பாற்ற பசிலிடம் உள்ள உபாயம்? - அகிலன்அமெரிக்க பிரஜா வுரிமையையும் கொண்ட ஒருவராக பசில் ராஜபக்‌ச இருப்பதாலும், அமெரிக்கா விலிருந்து திரும்பியவுடன் அமைச்சுப் பொறுப்பு ஒன்றை ஏற்க இருப்பதாலும், அது தொடர்பில் பல்வேறு ஊகங்கள் தெரிவிக்கப் படுகின்றன. குறிப்பாக ஏற்கனவே கிடப்பில் போடப்பட்டுள்ள அமெரிக்காவுடனான மில்லேனியம் சலஞ்ச் (Millenium Challenge Cooperation) உடன்படிக்கை தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப் பாட்டில் மாற்றம் வரலாம் என்ற கருத்து ஒன்று வெளியிடப் படுகின்றது. இது இரத்தானதால் 480 மில்லியன் அமெரிக்க டொலர் நட்டத்தை இலங்கை எதிர் கொள்ள வேண்டியிருந்தது.

இலங்கையைப் பொறுத்த வரையில் இப்போது இரண்டு சவால்கள் உள்ளன. ஒன்று – பொருளாதார ரீதியான நெருக்கடி. இரண்டு சர்வதேச ரீதியாக அண்மைக் காலத்தில் உருவாகியுள்ள அழுத்தங்கள். ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானம் ஒருபுறம், அமெரிக்க காங்கிரஸில் முன்வைக்கப் பட்டுள்ள பிரேரணை மறுபுறம் இலங்கை மீது தொங்கிக் கொண்டிருக்கும் கத்திகளாக உள்ளன. இந்தக் கத்திகளிலிருந்து தப்பிக்க வேண்டு மானால், எதனையாவது செய்தாக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இலங்கைக்கு உள்ளது.  மில்லேனியம் சலஞ்ச் உடன்படிக்கை அமெரிக்காவின் போக்கை மென்மையாக்கி விடும். நிதி, பொருளாதார அமைச்சு பசிலுக்கு கிடைத்தால், அதற்கான அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த உடன்படிக்கைக்கு அவர் செல்லலாம்.

இதன்மூலம் இலங்கை குறித்த மேற்கு நாடுகளின் கடும் போக்கு மென் போக்காக மாற்றமடையலாம். அதே வேளையில், நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைக்கும் தீர்வு காணப்பட்டு விடும். இவ்விடயத்தில் பசிலின் கைகளில் உள்ள ‘மந்திரக் கோல்’ என்ன என்பது சில வாரங்களில் தெரிந்து விடும்!

 

Leave a Reply