மருத்துவ பொருட்களின் தொழில்நுட்டபத்தில் பங்களாதேசம் கண்ட வளர்ச்சியும் அதன் பொருளாதாரமும் | ஆர்திகன்

209 Views

அண்மைக்காலமாக பங்களாதேசத்தின் பொருளாதாரம் அதிக வளர்ச்சி கண்டு வருகின்றது. தனிநபர் வருமானத்தில் அது இந்தியாவைப் பின்தள்ளியுள்ளதுடன், 2026 ஆம் ஆண்டே இந்தியா அதனை எட்டிப்பிடிக்கும் என தெரிவித்துள்ளது. அனைத்துலக நாணயநிதியத்தின் இந்த வருட அறிக்கை. 2023 ஆம் ஆண்டில் அதன் பொருளாதாரம் 512 பில்லியன் டொலர்கள் ஆக இருக்கும் என கணிப்பிடுகிறது. அடுத்த வருடத்தில் அதன் பொருளாதார வளர்ச்சி என்பது 7.5 ஆக இருக்கும் எனவும் எதிர்வுகூறப்படுகிறது.

அந்த நாட்டின் மொத்த உற்பத்தி 6.7 விகிதமாக அதிகரிக்கும் என உலக வங்கியும், 7.1 விகிதம் என ஆசிய அபிவிருத்தி வங்கியும் தெரிவித்துள்ளன. பங்களாதேசத்தின் இந்த பொருளாதார வளர்ச்சியில் பல துறைகள் முக்கிய பங்கை வகிக்கின்றபோதும், மருத்துவத்துறையில் அதன் வளர்ச்சி என்பது அபரிமிதமான வளர்ச்சியாக மாற்றம்பெற்றுள்ளது.
1971 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதில் இருந்து தற்போது வரையிலும் அதன் மருத்துவத்துறையின் வளர்ச்சி என்பது மிகவும் முக்கியமானது. கடந்த 30 வருடங்களில் மக்களின் சராசரி ஆயுட்காலம் 51 வயதில் இருந்து 71 ஆக அதிகரித்துள்ளது. குழந்தைகளினதும், தாய்மார்களினதும் இறப்பு விகிதமும் குறைந்துள்ளது. மருந்துகளையும், சுகாதார வசதிகளையும் மக்கள் பெறும் நிலை அதிகரித்ததே அதற்கான காரணம்.
அங்கு மருந்து உற்பத்தித்துறை பெருமளவில் வளர்ச்சி கண்டுள்ளதுடன் அதன் தரமும் அதிகரித்துள்ளது. உள்நாட்டு மருந்துத் தேவையின் 97 சதவிகிதத்தை வங்கதேசத்தின் மருந்து நிறுவனங்கள் உற்பத்தி செய்வதுடன், அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கின்றன.

1980 களில் அரசு கொண்டுவந்த பொருளாதாரக் கொள்கையின் மாற்றமானது அங்கு தனியார் முதலீடுகளில் அதிக பங்களிப்பை கொண்டுவந்துடன், தொழில்நுட்ப வளர்ச்சியையும் ஏற்படுத்தியிருந்தது. அது குறுகிய காலத்தில் 3 பில்லியன் முதலீட்டை நாட்டுக்குள் கொண்டுவந்ததுடன், நாட்டின் பொருளாதாரத்திற்கும் நிதிப் பங்களிப்பை மேற்கொண்டிருந்தது.
2025 ஆம் ஆண்டில் மருத்துவத்துறை உற்பத்திப் பொருட்களின் விற்பனை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் 6 பில்லியன் டொலர்களை எட்டும் என கணிக்கப்படுகின்றது. உலகத்திற்கு மிகவும் தரம் வாய்ந்த மருந்துப் பொருட்கள், மருத்துவப் பொருட்கள், சுய பாதுகாப்பு உபகரணங்கள் போன்றவற்றைக் குறைந்த செலவில் விநியோகிக்கும் நாடாக அது மாற்றம்பெற்று வருகின்றது.
வெளிநாடுகளில் இருந்து புதிய வியாபாரங்களை பெற்றுக்கொள்வது, தொழில்நுட்ப அறிவுமிக்கவர்களை உள்வாங்குதல், கல்வியறிவுள்ளவர்களை இணைத்துக்கொள்வது போன்றவற்றின் ஊடாக உற்பத்தியை அதிகரித்து உற்பத்தி விலையைக் குறைத்து அனைத்துலகத்தின் 400 பில்லியன் டொலர் மருந்து உற்பத்தித்துறையில் அதிக இடத்தை கைப்பற்றுவதே தமது நோக்கம் எனத் தெரிவித்துள்ளது பங்களதேசத்தின் மருத்துப்பொருட்கள் உற்பத்தி சபை.

மிகவும் தரம்பாய்ந்த எமது மருத்துவ உற்பத்தித்துறை உள்நாட்டில் மட்டுமல்லாது, உலகில் மருத்துவ சந்தையிலும் கால்பதித்துள்ளது என அதன் தலைவர் நஸ்முல் ஹசன் தெரிவித்துள்ளார்.
உலகின் 100 இற்கு மேற்பட்ட நாடுகளுக்கு பங்களாதேசம் மருந்துப்பொருட்களையும், மருத்துவ உபகரணங்களையும் ஏற்றுமதி செய்கின்றது. காப்புரிமை காலம் முடிவடைந்த மருந்துகளின் காப்புரிமையை பெற்று அவற்றை அதிகளவில் உற்பத்திசெய்வதே அவர்களின் நோக்கமாகும். இதில் மிகவும் தொழில்நுட்பம் வாய்ந்த முறைகளினால் தயாரிக்கப்படும் மருந்துகள் மற்றும் மருந்துகளை செலுத்த உதவும் உபகரணங்களைத் தயாரிப்பதே முக்கிய இலக்காகும்.

பங்களாதேசத்தின் மருத்து உற்பத்தித்துறை என்பது அங்குள்ள உற்பத்தி நிறுவனங்களில் அதிஉச்ச தொழில்நுட்ப வளர்ச்சிகண்ட துறையாகும். 32,000 இற்கு மேற்பட்ட மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களை தயாரிக்கும் 200 இற்கு மேற்பட்ட நிறுவனங்கள் அங்கு உள்ளன. நீரழிவு நோய்க்கு தேவையான இன்சுலின், புற்றுநோய் தடுப்பு மருந்துகள், ஓமோன்கள் என பெருமளவான அதி உயர் தொழில்நுட்ப தயாரிப்பு முறை கொண்ட மருந்துகள் அங்கு தயாரிக்கப்படுகின்றன.

ஏற்றுமதித்துறையை அபிவிருத்தி செய்ய அந்த நாடு தனது அறிவு மற்றும் தொழில்நுட்பத்தை பெருமளவில் முதலீடு செய்து வருகின்றது. மருந்து தயாரிப்புக்கு தேவையான மிக முக்கிய மூலப்பொருட்களையும் அது பெருமளவில் உற்பத்திசெய்து வருகின்றது. இது உலகின் 400 பில்லியன் டொலர்கள் பெறுமதியான மருந்துப் பொருட்களின் சந்தைவாய்ப்பில் அதிக போட்டியை ஏற்படுத்தும். அதே நேரம் அங்கு தயாரிக்கப்படும் பொருட்களின் தயாரிப்பு விலையும் 70 விகிதம் குறைவானது.
எமது உற்பத்தித்துறையானது உலகின் தேவைகளை நன்கு அறிந்து செயற்படுகின்றது. புதிய தொழில்நுட்பங்களை விரைவாக கற்றுக்கொள்கிறோம். அதற்கு ஏற்ப நாம் எம்மைத் தயார்ப்படுத்துகிறோம் என தெரிவித்துள்ளார் ஹசன். எமது நிறுவனங்கள் உலகின் மருந்து தேவைகளில் அதிக பங்கை வகிக்கின்றன. அரசின் ஆதரவான பொருளாதாரக் கொள்கையும், தனியார் முதலீடுகளும் தான் எமது வளர்ச்சிக்கு பிரதான காரணம். எமது தொழில்துறை 1980 களில் 20 மில்லியன் டொலர்களாக இருந்தது தற்போது அது 3 பில்லியன் டொலர்களாக மாற்றம் பெற்றுள்ளது. 2025 ஆம் ஆண்டு அது 6 பில்லியன் டொலர்களாக மாற்றம் பெறும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அரசின் பொருளாதார கொள்கைகள் வெளிநாட்டு முதலீட்டாளர்களை கவர்ந்துள்ளன. குறைந்த செலவுமிக்க தொழிலாளர்களும் முதலீட்டாளர்களைக் கவர்ந்ததில் முக்கிய பங்கு வகிக்கின்றது. எனவே தான் பெருமளவான உற்பத்திச் சாலைகள் அங்கு அமைக்கப்பட்டுள்ளன. அனைத்துலக வர்த்தக அமைப்புடனான அரசின் உடன்பாடுகள,; மருத்துவப்பொருட்களின் காப்புரிமையை பேணுதல் என்பனவும் இந்த தொழில்துறை வளர்ச்சிக்கு பெரும் பங்கை ஆற்றியுள்ளன. பங்களாதேசத்தில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகளை ஆசிய நாடுகளிலும் அவர்கள் வாங்கக்கூடிய விலையில் விற்பனை செய்ய முடிவதும் அவர்களின் தொழிற்துறை வளர்ச்சிக்கு மேலும் வலுச்சேர்த்துள்ளது.

Leave a Reply