சிங்கள இனவாத ஊற்றும்! சிறீலங்கா வங்குறோத்தும்! பா.அரியநேத்திரன்

150 Views

நாட்டில் பொருளாதார நெருக்கடிகள், பஞ்சம், பசி, பட்டினி இவை எல்லாவற்றிற்கும் மேலாக எரிபொருள் தட்டுப்பாடு அதை பெறுவதற்காக தினமும் இரவு பகலாக வாகனங்களுடன் கைக்குழந்தைகளுடன் பெண்களும் ஆண்களும் எரிபொருள் நிலையங்களை சூழ வரிசையில் முண்டியடிக்கும் நிலையும் அதற்கான போராட்டங்களும் இலங்கை முழுவதும் 24, மாவட்டங்களிலும் சிங்கள தமிழ் முஸ்லிம் மக்களால் முன்னெடுக்கப்படுகின்றன.

மறுபுறம் இலங்கை ஜனாதிபதி கோட்டாபாய ராஷபக்சயை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என சிங்கள மக்கள் காலிமுகத்திடலில் தொடர்ச்சியாக மூன்று மாதங்களை நெருங்கும் போராட்டம் விட்டு விட்டு தொடர்கிறது.
பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கான கதைமாதிரி காலிமுகத்திடல் போராட்டம் கோட்டாவை வீட்டுக்கு அனுப்பப்போய் இப்போ நரியாக ஆட்சி மாறிய கதையாகிவிட்டது.

கோட்டாவும் வீட்டுக்குப்போகல்ல, மகிந்தாவும் வீட்டுக்கு போகல்ல. வீட்டுக்கு போன ஒருவர் மகிந்த குடும்பத்தில் இருந்து தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக வந்து ஒன்றரை மாதம் நிதி அமைச்சர் பதவியுடன் இருந்த பசீல் ராஷபக்ச மட்டுமே வீட்டுக்கு போய் உள்ளார்.
பிரதமராக இருந்த மகிந்த வகித்த பதவி சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்த மாதிரி தனித்து தேசியபட்டியலில் உள்நுளைந்த ரணிலுக்கு கிடைத்துள்ளது.

இலங்கையின் அரசியல் வரலாற்றில் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் பதவி கிடைத்த வரலாறு இருவருக்கே உள்ளது ஒருவர் ஸ்ரீமாவோ பண்டராநாயக்கா. இவர் 1994, நவம்பர், 12,ல் பிரதமராக இருந்த அவரின் மகள் சந்திரிகா பண்டராநாயக்கா குமாரதுங்க பிரதமராக இருந்து 1994, நவம்பர், 09,ல் ஜனாதிபதியாக தேர்தலில் வெற்றி பெற்றதால் தாயான சிறீமாவோ அம்மையார் தேசியபட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர் பிரதமராக நியமிக்கப்பட்டார்.

இலங்கையில் தாய் பிரதமராகவும், மகள் ஜனாதிபதியாவும் குடும்ப ஆட்சி அப்போதுதான் தோற்றம் பெற்றது.

அடுத்தவர் இந்த ரணில் விக்கிரமசிங்கா தன்னம் தனி மனிதனாக தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து கடந்த 2022, மே,13,ல் பிரதமரானார் இவர் இருவரை தவிர வேறு எவரும் தேசியபட்டியலில் பிரதமராகிய வரலாறு இலங்கைக்கு இல்லை. பிரதமர் பதவி ஏற்றவுடனேயே ரணில் ஏதோ நாட்டின்  வங்குறோத்து நிலையை மாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இப்போது நிலைமை மிகவும் மோசமாக, எரிபொருள் கை இருப்பில் இல்லாமல் அமைச்சர்கள் மத்தியகிழக்கு நாடுகளுக்கு எரிபொருள் பிச்சை கேட்டு செல்லும் அளவுக்கு மாறிவிட்டது.

சுகாதாரம், துறைமுகம் , உணவு சேவை போக்குவரத்து உட்பட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே ஜூலை 10ஆம் திகதி வரை எரிபொருள் விநியோகம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நகர்ப்புற பாடசாலைகள் ஜூலை 10 வரை மூடப்பட்டாலும் கிராமப்புற பாடசாலைகள் போக்குவரத்து வசதிகளுக்கேற்ப இயங்கும் என கல்வி அமைச்சர் கூறியுள்ளார். கிராமப்புறங்களில் எங்கிருந்து எரிபொருள் பெறுவது? அங்கு கடமைக்கு செல்லும் ஆசிரியர்கள் எப்படி பிரயாணம் செய்வது? என்பது கூட தெரியாமல் குழம்பிய மனநிலையிலேயே அமைச்சர்களின் தடுமாற்றமான முடிவுகளும் உள்ளன. அத்தியாவசிய சேவைகளை மாத்திரம் முன்னெடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இலங்கை நாடு இவ்வாறான நெருக்கடிகளை சந்தித்தபோதும் பௌத்த மேலாதிக்க இனவாத சிந்தனை என்பது இலங்கை அமைச்சர்களில் மனங்களில் இருந்து இன்னும் மாறவில்லை.

வடக்கு கிழக்கு தமிழர்களுடைய பூர்வீக தாயகத்தில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களும், தமிழ் கிராம நிலங்களின் எல்லைகளை சிங்கள பிரதேசங்களுடன் இணைக்கும் திட்டமிட்ட செயல்களும் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு வாகரைப் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தோணிதாண்டமடு எல்லைக் கிராமத்தைப் பொலநறுவை மாவட்டத்துடன் இணைப்பதற்கான முயற்சிகளும், ஏனைய எல்லைப் பகுதிகளில் சிங்கள மக்களை அத்துமீறி குடியேற்றும் நடவடிக்கைகளும், மட்டக்களப்பு கால்நடைகளுக்காக ஒதுக்கப்பட்ட கிரான் பிரதேச செயலக பிரிவில் மாதவணை, மகிலத்தமடு, பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவில் கெவிளியாமடு போன்ற இடங்களில் சிங்கள ஊர்காவல் படையினருக்கு சேனைப்பயிர் செய்கைக்காகவும், முந்திரி மரம் நடுகைக்காகவும் அங்குள்ள அரச மற்றும் மகாவலித்திட்டம், அவன் இலாகா போன்ற திணைக்களங்களின் பெயரில் உள்ள காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

இதே போலவே அம்பாறை, திருகோணமலை மவட்டங்களிலும் சத்தம் இல்லாமல் காணி அபகரிப்புகள் இடம்பெறுகின்றன.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மூலம் சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டு இடைக்கால தடை உத்தரவு நீதிமன்றால் வழங்கப்பட்டாலும் அதையும் மீறி இவ்வாறான ஆக்கிரமிப்புகள் தொடர்கின்றன.

வடமாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டத்திலும் குரூந்தூர் மலையில் புத்தர் சிலை வைக்க பௌத்த துறவிகளும், சிங்கள மக்களையும் இனவாத அமைச்சர்கள் ஏவிவிட்டனர்.

குருந்தூர் மலை விவகாரமும் நீதிமன்றத்தால் இடைக்கால தடை உத்தரவு வழங்கப்பட்டிருந்தும் அதனையும் மீறி அங்கு சிங்களக் குண்டர்கள் பௌத்த துறவிகள், பொலிசார், படையினர் என நூற்றுக்கணக்கானவர்கள் புத்த சிலை அமைக்கச் சென்றபோது தமிழ்த்தேசிய பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழ் மக்கள் சிலரும் அங்கு சென்று அதனை தடுத்த சம்பவங்களையும் கடந்த மாதம் காணமுடிந்தது.

தற்போதைய நாட்டு நிலைமை எந்த நாட்டில் கையேந்தி நாட்டுமக்களை காப்பாற்றலாம் என்று சிந்திக்கவேண்டிய இன்றைய சூழலில் நாடு எப்படி போனாலும் பரவாய் இல்லை. இந்த நெருக்கடிகளை வைத்து தாம் வடக்கு கிழக்கில் தமிழர்களின் பூர்வீக நிலங்களை எப்படி கபளீகரம் செய்யலாம் என்ற திட்டமும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இவ்வாறான திட்டங்களுக்கு பின்னால் வெறுமனமே பௌத்த புத்த பிக்குகளும், படையினரும், சிங்கள மக்களும் மட்டும் இல்லை. ஆளும் தரப்பு அதிகார வர்க்கமும் இதற்கு உறுதுணையாக உள்ளது என்பது உண்மை.

அதற்கு நல்ல உதாரணம் குரூந்தூர் மலையில் புத்தர் சிலை அமைக்க சிங்கள ஆதிக்கம் சென்றவேளை அதனை தமிழ்தேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கு சென்று தடுத்த விடயத்தை பொறுத்துக்கொள்ள முடியாமல் பொதுமக்கள் பாதுகாப்பு முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரின் கட்சி தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எனவும், பௌத்த மதத்தின் முதன்மை நாடான இலங்கையில் சிங்கள மக்களின் பொறுமைக்கு எல்லை இருப்பதாகவும், அதனை கேலிக்கு உட்படுத்த வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர், முல்லைத்தீவு குருந்தூர் மலையில் புத்தர் சிலையை பிரதிஷ்டை செய்வதற்கு எதிர்ப்பு வெளியிட்டமையை தாம் கண்டிப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த அமைச்சரின் மன ஆதங்கம் அவர் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது அவருடைய முகபாவனை உடல் அசைவுகள் அவரின் வாயால் வெளிவந்த சொல்லாடல்களை நாம் உற்று நோக்கும் போது இனவாத ஊற்று இலங்கையில் எப்போதும் மாறவில்லை இலங்கையில் சனம் செத்தாலும் இனவாதம் மாறாது என்பதையே கோடிட்டுக் காட்டுகிறது.

சரி அவர் ஒரு அமைச்சர் இவ்வாறு உரையாற்றியமை தவறு என்றோ அல்லது அவரின் தனிப்பட்ட கருத்து என்றோ தற்போதைய பிரதமர் ரணிலோ, அல்லது எதிர்கட்சி தலைவர் சஜீத் பிரமதாசாவோ அல்லது ஜே வி.பி தலைவர் அனுரகுமார திசாநாயக்காவோ கூறவில்லை.

யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் சென்று ஊடக சந்திப்பை நடத்திய ஜே வி பி தலைவர் அநுர குமார திசநாயகாவும் அரசாங்கத்தை தமக்கு ஒப்படையுங்கள் நாட்டை சரிவர பொருளாதாரத்தை சீர்செய்து நடத்திக்கீட்டுவோம் என்று மட்டுமே கூறினார்.

குருந்தூர் மலையில் புத்தர் சிலை விவகாரத்தைப்பற்றியோ, வடக்கு கிழக்கில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் பற்றியோ வாய் திறக்கவில்லை.

யாழ்ப்பாணத்தில் உள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் கப்பல் கதையும், விமானக்கதையும், ஒலுவில் கதையும், கச்சதீவுக்கதையும் கதைத்தாரே தவிர குரூந்தூர் மலைக் கதை எதுவும் கதைக்கவில்லை.

இதேபோலவே ஓய்வு எடுத்துப் போராட்டம் நடத்தும் காலிமுகத்திடல் “கோட்டா கோ கம” போராட்டக்காரர்களும் வடக்கு கிழக்கு நில அபகரிப்புகள் பற்றியோ குருந்தூர் புத்தர் சிலை அமைப்பது சட்டத்திற்கு மாறான செயல் என்றோ கண்டிக்கவில்லை.

இன்று சர்வதேசத்தில் பல நாடுகளில் இருந்து இலங்கைக்கு உதவிகளை வழங்கவரும் இராஜதந்திரிகளோ ஏன் அண்டைய நாடான இந்திய நாட்டு இராஜதந்திரிகளோ வடக்கு கிழக்கு மக்களுக்களுக்கான அரசியல் ரீதியான உரிமைகளை வழங்கவேண்டும் என்று வெளிப்படையாக கூறுவதையும் காணவில்லை.

சிங்கள அரசியல் தலைவர்கள் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு யார் தலைவராக வரவேண்டும் என்பதை கூறும் படுமோசமான ஒரு செயலும் இப்போது காணக்கூடியதாய் உள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் கொழும்பு மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க அண்மையில் ஒரு ஊடகத்தில் வழங்கிய செவ்வியில் தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தன் இனி ஒய்வு எடுக்கவேண்டும் என கூறுகிறார்.

இதை பார்த்து அழுவதா சிரிப்பதா என்றுகூட தெரியவில்லை, உண்மையில் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு யார் அடுத்த தலைவர் சம்பந்தன் ஐயா ஓய்வு எடுக்க வேண்டும் என சொல்வதற்கு இவர் யார்? தற்போதைய ஜனாதிபதி கோட்டாபாயவை ஓய்வு எடுக்குமாறு கூறமுடியாமல் தமிழ் தலைவரை ஓய்வெடுக்க கூறும் இனவாத சிங்கள அரசியல்வாதிகளின் போக்குகளை தமிழ்தேசிய அரசியல் தலைவர்கள் சிங்கள இனவாத ஊற்றும், சிறீலங்கா வங்குறோத்தும், எப்படியானது என்பதை புரிந்து கொண்டு எமது உரிமையை வென்றெடுக்கும் காலமாக இதனை மாற்றிச் செயல்படவேண்டும்.

Leave a Reply